வெப்ப அலையின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள் – பீகாரில் ஜூன் 8வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
பீகாரில் வெப்ப அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஜூன் 8ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு மற்றும் வடமாநிலங்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ளது மன்கவுல் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 7 மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாணவர்களின் நலன் கருதி பீகாரில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும், பயிற்சி மையங்களுக்கும் ஜூன் 8-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.