இலங்கை

பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற கூட்டத்திற்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை!… சி.வி.விக்கினேஸ்வரன்.

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற இந்தக் கூட்டத்திற்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால் இவ்வாறான கருத்துப் பிரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும்.

ஏனென்றால் தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் போது இந்த விவகாரத்தை பொது வெளியில் கொண்டு சென்று கருத்து பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டிற்குரியதாக கொண்டு வந்து நிறுத்துவது எங்களை திசை திருப்புவதாகவே அமையும்.

ஆகவே எங்களுடைய இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம்.

அதாவது பொது வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி இப்படி என்று ஏதாவது காரணங்களை சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானத்தில் இருந்து நழுவக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் இருந்து எங்களை அங்கு இங்கு என கொண்டு செல்ல அல்லது வழிநடத்த பார்க்கின்றார்கள். ஆகவே எங்களுடைய சிவில் சமூகத்தினர் இது சம்மந்தமான நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இறங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்து பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு தருகிற போது அதற்குப் பதிலை கொடுப்பது எங்களுடைய கடமை.

அதனை விடுத்து இந்த விடயத்தை பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதை பெரிதாக்கவும் வேறுவிதமாக இதை திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும்.

மேலும் இந்த சந்திப்பு தொடர்பில் எனக்கும் எதுவும் அறிவிக்கப்பட இல்லை. அதற்கு நான்  அழைக்கப்படவும் இல்லை. பத்திரிகைகள் ஊடாகவே இதனை நான் பார்த்தேன். அதேபோன்று வேறு யாரும் எனக்கு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை.

இருப்பினும் இந்த நடவடிக்கை மிகவும் பிழையானது. அவ்வாறான ஒரு கருத்துப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் சொல்கிறோம் நாங்கள் ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். அந்த முடிவிற்கு எதிராக யாராவது ஒரு தமிழ் மகன் எதிர் கருத்துக்களை தெரிவித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அதனடிப்படையில் பதில் வழங்குவோம்.

ஏனெனில் நாங்கள் எடுத்த அந்த முடிவிலே எங்களிடம் திடமான கருத்து இருக்கின்றது. அதற்கான அடிப்படை அத்திவாரம் நன்றாக இருக்கிறது. ஆகவே நாங்கள் எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியும். இதை விட்டுவிட்டு இப்படி அப்படி அங்கு இங்கு என நழுவி போவது எங்கள் தமிழ் தேசியத்திற்கும் கூடாது. சிவில் சமூகத்தினர்களுக்கும் அது கூடாத ஒரு விடயம்.

அவர் தமிழ் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்கு பயமில்லை நான் அதை சொல்லுவேன் இதை சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும்.

பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவரிற்கு ஈடுபாடு இல்லை. அவரை பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடும்.

ஆனால் அதற்காக தமிழரசு கட்சியை தன்னுடைய கைப் பொம்மையாக மாற்றக்கூடாது. ஏனென்றால் நாங்கள் இன்னமும் அது சம்பந்தமான ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை என்று அவர் சொல்லுகிறார்.

அவ்வாறு அவர் கூறுவது தன்னுடைய கருத்துக்களை தான்.  இந்த கருத்துக்களை சிறிதரன் தெரிவிக்கவில்லை. சிலவேளை சிறிதரன் பொது வேட்பாளருக்குத் தான் ஆதரவு என்றும் அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று கூட கூறலாம்.

இந்த மூன்று பிரதான வேட்பாளர் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று கூட சிறிதரனால் சொல்லக்கூடும்.  ஆக மொத்தத்தில் சுமந்திரன் கூறியது அவருடைய கருத்து தவிர கட்சியை நிலைப்பாடு அல்ல. அவருடைய அந்த கருத்தை மேலே தூக்கிப் பிடிப்பது தமிழ் தேசியத்திற்கு இழுக்காக இருக்கின்றது.

மேலும் ஊடகப் பேச்சாளர் என்ற முறையில் அவர் பேசியது என்றால் இப்பொழுது தமிழரசு கட்சிக்கு தலைவர் ஒருவர் இருக்கின்றாரா?  இப்ப அந்த கட்சிக்குள் பதவிநிலைகளுக்கு குழப்பங்களுக்கு மத்தியில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்தால் இவர் பழைய ஊடகப் பேச்சாளர் தான். இருந்தும் இப்பவும் அவர் தொடர்ந்து ஊடக பேச்சாளராக இருக்கிறாரா என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.