கவிதைகள்
“தலைவணங்கி ஏற்றிடலில் தவறில்லையே” …. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
அவன் ஒன்றும் நடிகன் அல்ல
ஓரளவுக்கு நடிக்கத் தெரியும்
மேடைதான் கிடைக்கவில்லை
ஒரு சிற்றூரில் திருவிழா
திருவிழா காணச் சென்றான்
திருவிழாவிலே நாடகம் நடந்தது
நடிக்க அவனுக்கு அழைப்பும் வந்தது
வந்த வாய்ப்பை தட்டவில்லை
நடித்து முடித்து பாராட்டும் பெற்றான்
சிற்றூரில் அவனைப் பார்த்த சிலரோ
மற்றோர் ஊருக்கு அவனை அழைக்கவே
நடிப்பை விரும்பினான் ஏற்று நடித்தான்
அங்கும் சிறந்த பாராட்டை பெற்றான்
மற்றவர்கள் பாராட்டு ஒருபுறமிருக்க
அவன் திறமை அவனுக்குத் தெரியும்
திரைப்படத்தில் நடிக்க ஆசையை தூண்டினர்
நாடறிந்த நடிகனா அவன்
அவனை வைத்து யார் படமெடுப்பது
ஆனால் ஆசை யாரை விட்டது?
முயற்சி செய்து வாய்ப்பும் கிடைக்க
திரைப்படத்திலும் வந்தான்
எப்படி வந்தான் தெரியுமா?
உற்றுப் பார்த்தால் ஓரத்தில் நிற்பான்
தன்னெஞ்சறிவது பொய்யற்க
என்று தன்னை அறியவும் இல்லை
பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச்சுடும்
என்றுணர்ந்தபின் வருந்தவுமில்லை
வருந்தியும் பயனில்லை
நான் எவரையும் குற்றம் சொல்லவில்லை
எவரும் என்மீது பாய்வதில் நியாயமில்ல
தன்னெஞ்சே தன்னைச்சுடும் என உணர்ந்தால்
தலைவணங்கி ஏற்றிடலில் தவறில்லையே!
-சங்கர சுப்பிரமணியன்.