“நடுகைக்காரி” …. 71…. ஏலையா க.முருகதாசன்
“புஸ்பகலா நடிகை ஜமுனாமாதிரி இருக்கிறாள் என்பதுதான் அவளை நான் விரும்பியதற்கு காரணமல்ல,ஏனோ தெரியாது அவளை எனக்குப் பிடிச்சிட்டுது” ….
– ஞானம் என்ற ஞானசெல்வம்.
நீலலோஜினியை நோக்கிக் கோபத்துடன் காலடி எடுத்து வைச்ச ஞானம் மாணவ மாணவிகள் வகுப்புக்குள் வரத் தொடங்கவே தன்னிடமிருந்த கோபத்தைத் தெண்டித்து மறைத்தபடியே,முன்வைத்த காலை பின்னுக்கு எடுத்து தன்னிடத்தை நோக்கி நடந்து இயல்பாக உட்காருவது போல தனது இருக்கையில்; போய் உட்காருகிறான்.
ஆனால்,நீலலோஜினியை நோக்கிப் போனதை வகுப்பறையின் விறாந்தை வெளிப்படியில் தனபாலசிங்கம் கால் வைத்த போதே கண்டுவிடுகிறான்.
வகுப்புக்குள் நுழைந்து கொண்டே ஞானத்தைக் கவனித்த தனபாலசிங்கம்,ஞானத்தின் முகம் வழமைக்கு மாறாக இறுக்கமாகவிருப்பதையும் நீலலோஜினியின் முகம் சிவந்து கண்கள் கலங்கியிருப்பதையும் காண்கிறான் .
தலையைக் குனிந்து கொண்டிருந்த புஸ்பகலாவைக் கவனித்த தனபாலசிங்கம் நீலலோஜினி,ஞானம்,புஸ்பகலா ஆகிய மூவருக்குமிடையில் ஏதோ நடந்திருக்கின்றது என்பதை அனுமானித்து விடுகிறான்.
உட்கார்ந்திருந்த ஞானத்திடம் என்ன என்பது போல கண்களால் கேட்டபடியே அவனருகில் உட்கார்ந்த தனபாலசிங்கம் நீலலோஜினியைப் பார்க்க அவள் ஞானத்தைக் கோபத்துடன் பார்க்கிறாள்.
புஸ்பகலா குனிந்த தலையை நிமிர்த்தாமல் தலையைச் சரித்து நீலலோஜினியைக் கோபத்தடன் பார்க்கிறாள்.
எதுவுமே நடக்காத மாதிரி பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி எதிர்ச்சுவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் ஞானம்.
தனபாலசிங்கத்தைத் தவிர மற்றைய மாணவ மாணவிகள் இவர்கள் மூவருக்குள்ளும் என்ன நடந்திருக்கலாம் என்பதை அறியவில்லை.
ஆனால் நீலலோஜினிக்கு அருகிலிருந்த நாகேஸ்வரி நீலலோஜினியின் முகம் சிவந்து கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு ஏன்ரி முகம் சிவந்திருக்கு அவள் புஸ்பகலாவும் தலையைக் குனிந்து கொண்டிருக்கிறாள் உன்ரை பழையு ஆளின்ரை முகமும் அவ்வளவு சரியில்லாமல் ஒளியிழந்து கிடக்குது என்று ஞானத்தைக் கேலி செய்வது போலக் கேட்கிறாள்.
நாகேஸ்வரி எட்டாம் வகுப்பிலிருந்து ஞானத்துடன் படிச்சு வருபவள்.பிறப் எஸ.எஸ்.சி படிக்கும் போது நாகேள்வரியின் மேல் உதட்டுக்கு மேலே மிக
மெல்லிய மயிர்கள் இருந்தன.உற்றுப் பார்த்தால்தான் அது மீசைபோலத் தெரியும்.
ஒரு நாள்,சமூகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் கனகராஜா மாஸ்ரர் வராததால் மாணவ மாணவிகள் கதைச்சுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது இறைச்சிக் கதை வரவே ஞானம் நாகேஸ்வரியைப் பார்த்து நீங்கள் சிங்கத்தின் இறைச்சி சாப்பிறதாலைதான் உங்களுக்கு பொடியங்களுக்கு மீசை முளைக்கிற மாதிரி மீசை முளைக்குது என்று கேலி செய்ய நாகேஸ்வரி விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.
அடுத்த நாள் வகுப்பாசிரியருக்குச் சொல்ல அவர் ஞானத்தைக் கண்டிக்கிறார்.அன்றிலிருந்து ஞானத்தை நாகேஸ்வரிக்குப் பிடிக்காது.
நாகேஸ்வரிக்கு ஞானத்தின் மீதிருந்த கோபம் எஸ்.எஸ்.சி கடைசி வருடம் வரையும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
நீலலோஜினிக்கு தலையில் ரோஜாப்பூ வைச்சதிலிருந்து எல்லா விடயமும் நாகேஸ்வரிக்கு தெரிஞ்சிருந்தது.நாகேஸ்வரி உன்ரை பழைய ஆள் என்று சொன்னதற்கு,அவர் என்ரை பழைய ஆளல்ல இப்பவும் அவர் என்ரை ஆள்தான் என்று நீலலோஜினி சொல்கிறாள்.
நீயும் புஸ்பகலாவும் வாக்குவாதப்பட்டதற்கு வக்காலத்து வாங்க அவர் வந்திருப்பாரே,வந்தாரா என்று நாகேஸ்வரி கேட்க,கோபமாக எனக்குக் கிட்ட வந்தவர் வகுப்புக்குள்ளை பிள்ளையள் வரத் தொடங்க திரும்பிப் போயிட்டார்,அவரிலை பிழை சொல்ல முடியாது எல்லாத்தக்கும் அவள்தான் காரணம்,மயக்கி வைச்சிருக்கிறாள் என்று நீலலோஜினி லேஞ்சியால் மூக்கைத் துடைச்சபடியே சொல்கிறாள்.
அங்கை பார் நடிகை ஜமுனா ஊமல் கொட்டை மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு இருக்கிறாள்.அவாவுக்கு தான் நடிகை ஜமுனாமாதிரி என்று ஒரு கெப்படா எண்ணம்,நான் கதையொன்று கேள்விப்பட்டனான் உனக்குத் தெரியுமே அவள் அவரை வருத்தம் பார்க்க போனாளாமே உண்மையா என்று நாகேஸ்வரி கேட்க,உண்மைதான் அங்கை போன இடத்திலை பீரியட் வந்திட்டுதாம் அவளுக்கு என்றவளிடம் அது சரி நீ அவளோடை சண்டைக்குப் போனியா இல்லாட்டில் அவள் வலியவந்து சண்டை பிடிச்சவளோ என்று கேட்க,நான்தான் நீ எதற்காக ஞானத்தை விரும்புகிறாய் அவன் என்னுடைய ஆள் என்று சொல்ல,அதைப் போய் அவனிட்டைக் கேள் என்று அந்த ஆட்டக்காரி சொன்னவள்,நான் கோபத்திலை அவளிட்டை ஒரு கேள்வியைக் கேட்டிட்டன் என்று நீலலோஜினி சொல்ல, என்ன கேட்டனி என்று நாகேஸ்வரி கேட்க என்னத்தைக் காட்டி அவனை மயக்கி வைச்சிருக்கிறாய் என்று கேட்டனான் என்று சொல்கிறாள்.
அதைக் கேட்டதும் நாகேஸ்வரி திகைச்சுப் போய் இப்படியா கேட்டனி இப்படிக் கேட்கக்கூடாதடி இப்படிக் கேட்டால் ஆருக்கும் கோபம் வரும்,பரவாயில்லை அவளை அப்படித்தான் கேட்க வேணும் என்கிறாள் நாகேஸ்வரி.
ஞானத்தின் மீதிருந்த கோபத்தை புஸ்பலாவசின் மீது தீர்க்கிறாள் நாகேஸ்வரி.
தழுதழுத்த குரலில் நாகேஸ்வரிக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக நான் அவை இரண்டு பேரையம் சேர விடமாட்டன் என்ன செய்யிறன் பார் என்கிறாள் நீலலோஜினி
புஸ்பகலா தலையைக் குனிஞ்சு கொண்டே கைலேஞ்சியால் அடிக்கொருதடவை கண்களைத் துடைப்பதையம்,சத்தம் அதிகம் கேட்காமல் மூக்கை உறிஞ்சுவதையும்,நீலலோஜினியின் கண்களும் முகமம் சிவந்து போயிருப்பதை சக மாணவ மாணவிகள் கவனிக்காத மாதிரிக் கவனித்து அருகிலிருந்தவர்களிடம் இவைக்குள்ளை ஏதோ நடந்திருக்கு என்று ஒரு சில மாணவர்களும்,இன்னும் சில மாணவர்கள் கதாநாயகிகள் இரண்டு பேரும் கதாநாயகனுக்காக கொழுவுப்பட்டினமோ நடிகை ஜமுனாவும் சரோஜாதேவியும் ஞானச் சிவாஜிக்காக பேச்சுப்பட்டிருக்கினம்.
அவன் குடுத்து வைச்சவன் அவனுக்காக இரண்டு பேர் போட்டி போடுகின்றனர்.முருகக்கடவுளுக்கு வள்ளி தெய்வானை என இரண்டு அழகிகள் கிடைச்சமாதிரி அவனுக்குக் கிடைச்சிருக்கினம்.இப்படியானவையை பொறுத்த இடத்திலை மச்சம் உள்ளவை என்று பெரியாட்கள் சொல்லுவினம்,அவனுக்கும் அங்கை மச்சம் இருக்குமோ என்று மாணவன் ஒருவன் பக்கத்திலை இருந்தவனிடம் சொல்லிச் சிரிக்க,ஞானத்தைக் கேட்பமோ எங்கையடா உனக்கு மச்சம் இருக்குது என்று பக்கத்திலிருந்தவன் சொல்ல,மகாஜனாச் சரித்திரத்தில் காதலிப்பது எப்படி என்று ஒரு பாடம் வைச்சால் நல்லாயிருக்கும் அதுக்கு ஞானத்தையே மாஸ்ரராகப் போடலாம் என்று அந்த மாணவன் வாய்விட்டுச் சிரிக்க வந்த சிரிப்பை கைகளால் வாயைப் பொத்தி மேசைக்குக் கீழே தலையைக் குனிஞ்சு சிரிக்கிறான்.
ஞானத்திற்குப் பக்கத்திலிருந்த தனபாலசிங்கம் டேய் உன்ரை ஆளுக்கும் நீலலோஜினிக்குமிடையில் என்னடா நடந்தது.இரண்டு பேற்றை முகமும் சரியில்லாமல் கிடக்குது,உன்ரை முகமும் வழமை போல இல்லை.முன்னாள் காதலிக்கும் இந்நாள் காதலிக்குமிடையில் ஏதாவது பிரச்சினையா என்று அவன் கேட்டு முடிக்கமுந்தி,ஞானம் கொஞ்சம் கோபமாக,நீலலோஜினியை முன்னாள் காதலி என்று நான் எப்பவாவது உனக்குச் சொல்லியிருக்கிறேனா என்று கேட்க,நீ சொல்லலை ஆனால் மகாஜனாவில் அந்தச் சங்கதி; புகையுதே,நெருப்பில்லாமல் புகை வருமா,அது கிடக்கட்டும் அதை விடு அவை இரண்டு பேருக்குமிடையிலை என்ன நடந்தது அதை முதலில் சொல் என்கிறான்.
டேய் பேசாமல் இரடா,வகுப்புத் தொடங்கப்: போகுது பிறகு விபரமாகச் சொல்லுறன் என்று ஞானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே செருமலுடன் வகுப்புக்குள் நுழைகிறார் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்.
குட்மோர்னிங் சேர் என்று எழுந்து நின்ற மாணவர்களை கையைக் காட்டி உட்காரச் சொன்னவர்,மாணவர்களின் முகங்களை நோட்டம் விடுகிறார்.
அந்த வகுப்பில் எல்லாப் பெண்பிள்ளைகளுமே சராசரி அழகிகள்தான்.ஆனால் அவர்களில் புஸ்பகலாவும் நீலலோஜினியும் எடுப்பான அழகிகள்.அதனால் அவர்களிருவரும் ஆசிரிய ஆசிரியைகளின் பார்வைக்கு உட்பட்டிருந்தனர்.
மாணவர்களைப் பார்த்துக் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் இன்றைக்கு என்ன புதினம் என்று கேட்க,ஒரு புதினமும் இல்லை சேர் என்கின்றனர் மாணவர்கள்.
ஏதாவது புதினம் நடந்திருக்க வேணுமே என்றவர்,நீலலோஜினியின் முகமும் கண்களும் சிவந்திருந்ததைக் கண்டவர், என்ன நீலரோஜா கண்ணும் முகமும் ஏன் சிவந்திருக்கு என்று கேட்க இஞ்சை வரேக்கிலை றோட்டுச் சைற்றிலை கிடந்த புழுதிக்கு மேலாலை காரொன்று போக அந்தத் தூசி மூக்குக்குள்ளை போய் தும்மல் வந்துது சேர் அதுதான் என்று பொய் சொல்லி இழுக்கிறாள் நீலலோஜினி.
நீலலோஜினியைக் கறுவல் செல்லத்தரை மாஸ்ரர் நீலரோஜா என்று கூப்பிட:டதை கனகேஸ்வரன் என்ற மாணவன் கதையைக் கிளற வேண்டுமென்பதற்காக சேர் அவாவுக்குப் பெயர் நீலலோஜினி நீங்கள் அவாவை நீலரோஜா என்று சொல்றியள் என்று அவன் சொல்ல உனக்கு விசயம் தெரியாது போல நீலலோஜினிதான் அவாவின்ரை பெயர் ஆனால் அவாவுக்கு ரோஜாப்பூவிலை விருப்பம்,அப்பவிருந்தே ரோஜாப்பூவை தலைப் பின்னலில் செருக வைச்சுக் கொண்டு வருகிறவா அதுதான் அவாவை நான் நீலரோஜா என்று கூப்பிட்டனான் நான் சொல்றது சரிதானே ஞானம் என்று ஞானத்தைப் பார்த்துக் கேட்க,அவா ரோஜாப்பூ வைச்சுக் கொண்டு வாறது எனக்குத் தெரியாது சேர் என்று ஞானம் சொல்ல கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் ஓ ஒ உனக்குத் தெரியாதுதான் என்றவர் ம், ஞானம் புசணிக்காயை சோற்றுக்குள்ளை மறைக்கிறதைக் கேள்விப்பட்டிருக்கிறன் பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள்ளை எப்படி மறைக்கிறது என்றதை இப்பத்தான் கேள்விப்படுகிறன் என்று மாஸ்ரர் சொன்னதும்,பிறப் எஸ்.எஸ.சி வகுப்பிலை தான் நீலலோஜினியின் தலையிலை ரோஜாப்பூ வைச்சது மாஸ்ரருக்குத் தெரியும்,அப்பவும் அவர்தான் கிளாஸ் மாஸ்ரர் தான் கனக்கக் கதைச்சால் கொழுக்கி போட்டு இழுப்பது போல எல்லாத்தையும் இழுத்து விடுவார் என்பதால் ஞானம் எதுவுமே கதைக்காமல் பேசாமலிருக்கிறான்.
பக்கத்திலையிருந்த தனபாலசிங்கம் எலிப்பொறிக்குள்ளை அகப்பட்ட எலி மாதிரி வசமாக மாட்டப் போகிறாய் என்று ஞானத்தின் காதில் கிசுகிசுக்க டேய் வாயை மூடிக் கொண்டு பேசாமலிரடா என்கிறான் ஞானம்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரரின் பார்வை புஸ்பகலாவிடம் சென்றது.என்ன உனக்கும் கண் சிவந்து மூக்கும் சிவந்திருக்கு என்ன ஏதேன் சுகமில்லையோ என்று மாஸ்ரர் கேட்க ஓம் சேர் எனக்கு நிழல்வாடிப்பூ என்றால் ஒத்து வராது,தெல்லிப்பழைச் சந்தியிலையிருந்து அளவெட்டி வரையும் இரண்டு பக்கமும் அந்த மரங்கள்தானே நிற்கிது சேர். இங்கை கொலிஜ்யுக்கு முன்னாலையும் நிற்குது அந்தப் பூவின் பொலின்கிறைனாலை கண் கடிக்குது தும்மலும் வருகுது சேர் என்று புஸ்பகலாவும் பொய் சொல்கிறாள்.
தன்ரை காதிலை நீலலோஜினியும் புஸ்பகலாவும் பூச் சுத்துகினம் என்றதை புரிந்து கொண்ட மாஸ்ரர் ஆராவது பாமா விஜயம் படம் பார்த்தனிங்களோ பாலச்சந்தன்ரை படம்
கதாநாயகனுக்காக பாமா ருக்மணி சண்டை பிடிக்கிற படம் என்று வேண்டுமென்றே சொல்ல,இந்திரகுமாரி பக்கத்திலிருந்த தோழியிடம் அதுக்கேன் தியேட்டரிலை போய் படத்தைப் பார்ப்பான் அதுதான் இங்கேயே நடக்குதே என்று அவளின் காதுக்குள் கிசுகிசுக்கிறாள்.
தனது பாடத்தைத் தொடங்குவதற்கு முன் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் மாணவர்களை உற்சாகப்படுத்த இப்படி ஏதாவது கதை சொல்வது வழக்கம்.
மத்தியானச் சாப்பாட்டுக்கு ஞானமும் தனபாலசிங்கமும் ஒன்றாகத் தங்கள் வீடுகளுக்குப் போகும் போதுஅன்று காலமை புஸ்பகலாவுக்கும் நீலலோஜினிக்குமிடையில் தன்னை வைச்சு வாக்குவாதம் நடந்ததாக ஞானம் சொல்ல,அதற்குப் பாலசிங்கம் உன்னிலும் பிழையிருக்குதடா நீ எதற்காக பிறப் எஸ்.எஸ்.சியிலை நீலலோஜினியின்ரை தலையிலை ரோஜாப்பூ வைச்சனி,நீ விளையாட்டுத்தனமாக வைச்சதை அவள் தன்னிலை உனக்கு விருப்பமிருப்பதாக நினைச்சிட்டாள்.வேறை பெட்டையளாயிருந்தால் மாஸ்ரர்மாருக்கோ ரீச்சர்மாருக்கோ சொல்லி பிரச்சினையாக்கியிருப்பாளவை. அவள் பேசாமலிருந்திட்டாள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானத்தின் வீட்டுவளவுப்: படலை வந்துவிட்டதால் சடாரென்று சைக்கிளை பிறேக் போட்டு ஞானம் நிறுத்த தனபாலசிங்கமும் நிறுத்துகிறான்.
சிங்கம் நீலலோஜினி என்னதான் பெரிய அழகியென்றாலம் அவளில் எனக்குக் காதல் வரவில்லையே,அதைப்பற்றி எனக்கு அக்கறையும் இல்லை என்று சொல்ல,அப்ப இப்ப எப்படி புஸ்பகலாவிலை லவ் வந்தது என்று கேட்க,டேய் நீ எத்தனை கதைப்புத்தகங்கள் வாசித்திருப்பாய் என்னைப் போல நீயும் நிறைய வாசிக்கிறனி அதிலை காதலுக்கு அழகு மட்டும் முக்கியம் என்று எங்கையாவது இருந்ததை வாசித்திருக்கிறியா காதலுக்கு அழகும் ஒரு காரணமாகும் என்றுதானிருக்கிறது.
புஸ்பகலா நடிகை ஜமுனாமாதிரி இருக்கிறாள் என்பதுதான் அவளை நான் விரும்பியதற்கு காரணமல்ல,ஏனோ தெரியாது அவளை எனக்குப் பிடிச்சிட்டுது என்றவனுக்கு,சரி சரி சாப்பிட்டிட்டு வாறன் போகேக்கை மிச்சத்தை கதைப்பம் என்ற பாலசிங்கம் ஞானத்தின் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த தனது வீட்டை நோக்கிச் சைக்கிளில் போயக் கொண்டிருந்தான்.
(தொடரும்)