யாழில் ஜனாதிபதி இளைஞர்களுக்கு வழங்கிய உறுதி!
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன. அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது. அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.
அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும். கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.
நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.
அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன. அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.
இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம். இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும். வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.
கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது. நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.
பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம். வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.