“ரேகை” ….. சிறுகதை – 68 …. அண்டனூர் சுரா.
கூத்தையா பாவம். எப்படியெல்லாமோ உழைத்த மனிதர். இப்படியாக வாழ்க்கை தன்னைப் பெட்டிப் பாம்பாகச் சுருட்டுமென அவர் நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். கோழிக் குடாப்பைத் திறந்துவிட்டால் கோழிகள் குடுகுடுவென ஓடி மண்ணைச் சீய்க்கும் குணாம்சத்தைக் கொண்டவர்தான் கூத்தையா. சொறிசிரங்கு கையும் அரிவாள் பிடித்தக் கையும் சும்மா இருக்காது என்பார்களே, அத்துடன் கூத்தையா கையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு வார காலமாக அவரால் ஒரு வேலையும் பார்க்க முடியவில்லை. வெறுமென திண்ணையில் உட்கார்ந்து அவரது கையைப் பார்த்துக்கொண்டிருப்பது அவருக்கு சுமையாக இருந்தது. திண்ணையின் உஷ்ணம் மண்டைக்குள் ஏறி சோம்பலைக் கொடுத்தது. ஆகவே சோம்பலை முறித்துக்கொள்ளும் பொருட்டு அவர் சொந்தம், பந்தம், உறவினர் வீடுகளுக்குச் சென்று வந்தார். அவர் சென்று வந்த பயணத்தில் ஒரு வாரக்காலம் கழிந்ததே தெரியவில்லை. மேலும் பத்து நாட்கள் இப்படியே ஒரு வேலையும் பார்க்காமல் மருதாணி போட்டக் கையைப் போல வைத்திருக்க வேண்டும் எனச் சொன்னதற்குப் பிறகுதான் அவரது கை மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. ஒரு வேலையும் பார்க்காமல் கையை வெறுமென வைத்திருப்பது எத்தகைய சுமை என்பதை அவர் முதன்முறையாக உணர்ந்தார்.
இந்த பூமி சுற்றுவதே கூத்தையாவிடம் வேலை ஏவுவதற்காகத்தான். அப்படியாகத்தான் அவரது ஊரும் தெருவும் சொல்லும். இரண்டாள் வேலையை ஒற்றையாளாக நின்று பார்க்கிற அளவிற்குத் திடகாத்திரமானவர். இத்தனைக்கும் அவருடைய வயது அறுபதைத் தாண்டிவிட்டது. வெண்தறித்த முடிகள். உச்சந்தலையில் கோடைகால திடலைப் போல வழுக்கை. கை, கால்களில் வெண் முடிகள் தறித்து வயோதிகத்தின் பாதிக் கிணற்றைத் தாண்டியவராக இருந்தார். முகத்தில் அடர்த்தியானச் சுருக்கம். நாசி நெற்றியுடன் கூடுவாயில் ஒரு பள்ளம்.
அவருக்கு ஒரே மகன். வெளிநாட்டில் இருக்கிறான். வெளிநாடு சென்று மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. கடன்முடன்களை வாங்கி மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். முதல் மாதச் சம்பளத்தை அவன் அப்பாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தான். மகன் அனுப்பிய பணத்தை மகன் வந்ததன் பிறகே எடுக்க வேண்டுமென அவர் நினைத்திருந்தாலும் பேன் மொய்த்தத் தலையும் கடன் பெருத்த வட்டியும் இருக்கவிடுமா என்ன?
கையில் எந்நாளும் பணப்புழக்கம் இல்லையென்றாலும் ஓரளவு நில புலன்கள் கொண்ட நடுத்தரக் குடும்பம் அவருடையது. சொந்த நிலத்து மண்ணைச் சீய்க்க. உழ, வரப்பு வெட்டவென இருந்தாலே ஆண்டு முழுமைக்கும் வேலை பார்க்கலாம். “அட , இப்பவெல்லாம் வெள்ளாமையில என்னங்க கிடைக்குது, தைல மரக்கன்றுகள ஊனிட்டு மத்த வேலையைப் பாருங்க…”, என ஊர் உலகம் சொல்லுகையில் வேடிக்கையாக ஒரு சிரிப்பு சிரிக்க மட்டும் செய்வார். நிலம் என்பது அவரைப் பொறுத்தவரைக்கும் இன்னொரு வயிறு. அப்படியாகவே அவர் வெள்ளாமை நிலத்தைப் பார்த்தார். வெள்ளாமை செய்யப்படாத நிலத்தைப் பட்டினி
வயிறாகவே பாவித்தார். அப்படியாக பார்க்கையில் அவருக்குள் குற்றவுணர்வு தலையெடுக்கும். அதற்காகவே அவர் நிலத்தைச் சீய்க்கவும் வேளாண்மை செய்வதுமாக இருந்தார்.
“உங்க மகன்தான் வெளிநாட்டுல சம்பாதிக்கிறானே, இன்னுமேன் தாத்தா இப்படி மாடா உழைக்குறீங்க…” என்று யாரேனும் கேட்டால் செய்தியை அவர் காதினில் வாங்கிக்கொள்வாரே தவிர நின்று பதில் சொல்லமாட்டார். உழைப்பதே கர்மமென இருப்பார். அவரது கைகள் அதிகப்பட்சம் மண்வெட்டியை பிடித்திருக்கும். பத்துக் கொட்டுக்கு ஒருமுறை கையில் எச்சில் துப்பி கைகளை உராய்த்துக்கொள்வார். காதினில் சொருகியிருக்கும் குச்சியை எடுத்து மண்வெட்டியிலுள்ள மண்ணை வழித்து வெளியேற்றுவார். “வசதியாமே வசதி, இந்த வசதியெல்லாம் எங்கேருந்து வந்ததாம்? கொல்லைக்காட்டில் அந்தி சந்தினு பார்க்காம, மழை வெயிலுக்கு ஒதுங்காம உழைச்சதால வந்தது…” என்பதுதான் பலர் கேட்கும் கேள்விக்கு அவர் சொல்லும் பதிலாக இருக்கும்.
அன்றைக்கும்கூட அவர் பார்த்தாக வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. வீட்டு வாசலில் வேர்செத்து பட்டுப்போயிருக்கும் வேப்பமரத்தை இரண்டு ஆட்களை ஒத்தாசைக்கு வைத்துக்கொண்டு வெட்டிக் கொத்தி வேர் களைந்து போடவேணும். அதில் சின்னஞ்சிறு கட்டைகளை அடுப்பு எரிப்பதற்கு உகந்ததாக உடைத்துப் போடவேணும். மேல் மண் நனைய தூறியத் தூறலுக்கு ஆழஉழுது எள்ளோ, உளுந்தோ விதைக்கவேணும், அதற்கு முன்பாக வரப்பு வெட்டி, வாய்க்கால் எடுக்க வேணும்…இப்படியாக எத்தனையோ வேலைகள் இருந்தும் ஒரு வேலையும் பார்க்காமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தது அவருக்கு வயிற்றை எடுத்து கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திப்பதைப் போலிருந்தது.
ஒரு மனிதனின் கையில் விழும் எழுத்து தலையில் விழும் எழுத்தை விடவும் மோசமாகத்தான் இருக்கிறது. பின்னே, உழைத்தால்தான் சோறு என்கிறது தலையெழுத்து. உழைத்தால் சோறு கிடையாது என்கிறதே கையெழுத்து. அவர் கையை எடுத்து தொடையில் வைத்துக்கொண்டு ரேகையைப் பார்க்கையில் கண்களில் தூசி விழுந்த கலக்கத்தைக் கொடுத்தது. அவரது இரு கைகளும் வேலை செய்ய ஆர்ப்பரித்தும் ஒரு வேலையும் செய்யமுடியாதளவிற்கு கட்டுண்ட கையைப் போல ஆடாமல் அசையாமல் வைத்துபடி உட்கார்ந்திருந்தார்.
அவர் வழக்கமாக பார்க்கும் வேலைகளை அவரது பொஞ்சாதி அஞ்சலை பார்த்திருந்தார். வீட்டில் இரண்டு பசு மாடுகளும் ஒரு ஜோடி காளைகளும் இருந்தன. அதற்கு வைக்கோல் அள்ளிப்போடுவது, அதை அவிழ்த்து தண்ணீர்க்காட்டுவது, சாணம் பெருக்குவது,.. இத்யாதி வேலைகளைக்கூட அவளே செய்தாள். வழக்கமாக அங்காடிக்குச் சென்று அரிசி பருப்புகளை வாங்கி தூக்கி வருவது அவராகவே இருக்கும். அன்றைய தினம் அஞ்சலையே அதைச் செய்தாள்.
“அடி கொடுபுள்ள, சாக்கக் கட்டுறதுலயும், அதைத் தூக்கி விடுறதுலயுமா கை தேஞ்சிடப்போகுது….” பெஞ்சாதி தூக்கிய மூட்டையைக் கூத்தையா வம்படியாக வாங்கப் பார்த்தார். அவரால் அதை தன் தலைக்கு வாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லாம் இந்த ரேகையால் வந்தது.
தன் விரல்களை அவர் வெறிக்க பார்த்தார். சற்றுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தவர், கையில் எச்சில் துப்பிச் சூடுபறக்கத் தேய்த்தார். கரடுமுரடான அவரது கைகளில் வெப்பம் தகித்தது. அவரது செய்கையைக் கவனித்த அஞ்சலை அவரை வசைப்பாடத் துவங்கினாள். அவளுக்குக் கோபம் வராதா பின்னே, சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமைக்கும் வட்டிப்பணம் கேட்டு கடன்காரன்கள் வீடுவரைக்கும் வந்து
செல்வதற்கும் காரணம் அவரது ரேகைதான். “உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கீங்க நீங்க, ம்…, என்ன சொல்லி அனுப்புனாங்க. இப்ப நீங்க என்ன வேலைச் செய்றீங்க. கையை வெறுமென வச்சிருக்கத் தெரியாதா…?” என அவள் கேட்டதும் கூத்தையாவின் கை ஒடிந்ததைப் போலாகி விட்டது. கையை முகத்திற்கு நேராகக் கொண்டுச்சென்று ஆழ்ந்து பார்த்தார். அவரது கையை நினைத்து அவருக்கு வயிறு குலுங்க சிரிப்பு வந்தது.
“ஏன் சிரிக்கிறீங்க?” அரிசி புடைத்துக்கொண்டிருந்த அஞ்சலை கேட்டாள். கூத்தையா வாயில் உடைந்து கிடந்த சிரிப்பைக் கொடும்புக்குள் அடக்கிக்கொண்டவராய் சொன்னார். “கை ரேகை ஜோசியர் நினைவுக்கு வந்தான் புள்ள..” என்றதும் அஞ்சலைக்கும்கூட சிரிப்பு வந்தது. முறத்திலிருந்து கைகளை எடுத்து முந்தானையை வாயிற்குள் திணித்துக்கொண்டு சிரித்தாள்.
ஒரு நாள் இப்படிதான், கொல்லைக்குச்சென்று வேலைப் பார்த்துவிட்டு மதிய உணவுக்கு திண்ணையில் உட்கார்ந்தார் கூத்தையா. அந்நேரம் பார்த்து கைரேகை ஜோசியர் குடுகுடுப்புடன் வாசலில் வந்து நின்றார். குடுகுடுப்பை அடித்துக்கொண்டு குடும்பத்திற்கான செய்தியைச் சொல்லி நிறுத்தி, “பத்து ரூபாதான் கைஜோசியம் பாருங்கோ..” என்றார். அவரது முகத்தைப் பார்க்க கூத்தையாவிற்கு பாவமாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த கையைக் கழுவி துண்டால் துடைத்துக்கொண்டு கையை ஜோசியர் முன் நீட்டினார்.
ஜோசியக்காரர் முண்டாசுடன் கூடிய தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு அவரது தோளில் தொங்கிக்கிடந்த முடிச்சை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டு ஒடுகலாக சம்மணமிட்டு அமர்ந்து கூத்தையாவின் கையைப் பிடித்து விரல்களை நீவி எடுத்துப் பார்த்தார். அத்தெருவே திண்ணையில் கூடிநின்று வேடிக்கை பார்த்தது. ஜோசியர் அவரது கையைப் பார்த்தவாறே இருந்தார். கையில் இருக்க வேண்டிய ரேகைகளுக்குப் பதிலாக தழும்புகளும், வடுக்களுமே இருந்தன. ஜோசியர் ரேகையைத் தேடுவதும், கூத்தையாவின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்து, ரேகையைக் கண்டுபிடிக்க முடியாமல் பைக்குள் கையை விட்டு ஒரு பூதக்கண்ணாடியை எடுத்து கைக்கும் கண்ணுக்குமிடையில் நிறுத்தி ரேகையைக் கணித்தார். அப்படியும் ரேகை தெரிவேனா என்றது. கைரேகையிலிருந்து ஒரு வார்த்தைகூட ஜோசியரால் சொல்ல முடியவில்லை. கண்ணாடியைத் தோள்பைக்குள் கிடத்திக்கொண்டு அவர் முன் வைத்த தட்சணையைக்கூட எடுக்காமல் அந்த இடத்தை விட்டு நகரலானார். இதைச் சொல்லி ஊரே சிரித்தது. யாருக்குத்தான் சிரிப்பு வராது?
வங்கி மேலாளர் வரச்சொல்லியிருந்த அந்நாள் வந்திருந்தது. இந்நாளுக்காகத்தான் அவர் இத்தனை நாட்களும் கையை வெறுமென வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தார். அவர் வாங்கிய அத்தனை கடன்களையும் வங்கிக் கணக்கிற்கு வந்திருக்கின்ற பணத்தைக் கொண்டு அடைத்துவிட முடியாதுதான். ஆயினும் வட்டியையேனும் அடைத்துவிட வேண்டும் என்பதற்காக பணத்தை எடுத்துவர நடந்தே வங்கிக்குச் சென்றார்.
இன்றைக்கு அவர் வங்கிக்கு வந்திருப்பது நான்காவது முறை. இதற்கும்முன்பு அவர் மூன்று முறை வங்கிக்கு வந்து பணம் எடுக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தார். வங்கிக் கணக்கில் பணமிருந்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வரவுசெலவு செய்யாத காரணத்தால் வங்கிக் கணக்கு முடங்கியிருந்தது. அதற்காக வங்கி மேலாளர் ஆதார் எண், முகவரி…இத்யாதிகளை வங்கி கணினியில் ஏற்றியிருந்தார்.
அப்படியாக ஏற்றியதும் வங்கிக் கணக்கு உயிர்ப்பித்துக் கொண்டது. அக்கணக்கை மெய்ப்பித்துக்கொள்ள கூத்தையாவின் கட்டை விரல் ரேகை வங்கிக்குத் தேவைப்பட்டது.
ஒரு முறை அல்ல, இரண்டு மூன்று முறை அதற்காக அவர் வரிசையில் நின்றிருக்கிறார். கட்டை விரலை ஸ்கேனில் வைத்து அழுத்த, விரலில் தண்ணீர் தடவ, கிளிசரின், மெழுகு…எனப் பலதைத் தடவியும் அவரது விரல் ரேகை கணினியில் விழுவேனா என்றது. வங்கி ஊழியர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். விழிகளை ஏற்றி இறக்கி உதட்டைப் பிதுக்கிக்கொண்டார்கள்.
இம்முறை அவர் விரலை நீட்டுகையில் கூத்தையாவிற்கு நம்பிக்கை வந்தது. மேலாளர் சொன்னபடியே ஒரு வேலையும் பார்க்காமல், புண் கண்ட விரலைப் போல ஆடாமல், அசைக்காமல் வைத்திருந்தே விரலை வங்கி மேலாளர் முன் நீட்டினார். மேலாளர் கூத்தையாவை நிமிர்ந்து பார்த்தார். வளைந்து திமிறி நின்ற முதுகு, வெளியில் துருத்தி நின்ற கன்னத்து எலும்புகள், வெண்தாடி..இவற்றோடு பார்க்கையில் கூத்தையா பாவமாகத் தெரிந்தார்.
அவர் வங்கி மேலாளரிடம் விரலை நீட்டுகையில் வங்கி ஊழியர்கள் அத்தனைபேரும் ஒரு கணம் அவரவர் வேலையை நிறுத்தி நிமிர்ந்து எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் பார்க்க வரிசையில் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர்களும் பார்த்தார்கள். மேலாளர் கூத்தையாவின் கட்டை விரலைப் பிடித்து ஒரு விரலால் தடவிப் பார்த்தார். மற்றவர்களைக் காட்டிலும் அரை அங்குலம் நீளமானதாக அவருடைய கட்டை விரல் இருந்தது. விரலில் ரேகை ஏதேனும் தெரிகிறதா என்று ஒரு கணம் பார்த்து விரலை ஸ்கேனில் வைத்து அழுத்தியபடி கணினித் திரையைப் பார்த்தார். அவரது உதட்டுச் சுழிப்பு கூத்தையாவின் உடம்பை குறுகுறுக்க வைத்தது. ஒரு ஈரத் துணியால் விரலைத் துடைத்து ஸ்கேனில் வைத்தார். பிறகு விரலில் ஒரு திரவத்தைத் தடவி அழுத்திப் பார்த்தார். ஏமாற்றம்தான் மிஞ்சியது.
“என்ன சார் சொல்றீங்க, இன்றைக்கும் பணமெடுக்க முடியாதா?” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்டார் கூத்தையா. என்ன சொல்வதென்று மேலாளருக்குத் தெரியவில்லை. கணினித் திரையைப் பார்த்தபடி உதட்டைப் பிதுக்கினார்.
“பணம் வேணுமே சார், கடன் கொடுத்தவங்க வட்டிக் கேட்டு வீட்டுக்கு வாறாங்களே சார்?”
“உங்க ரேகை விழலைங்களே”
“ஒரு வேலையும் பார்க்காமதான் சார் வந்திருக்கேன், பாருங்க,…” விரலை விரல்களால் தடவி அவர் முன் காட்டினார். மேலாளர் அவரது விரலை ஆழ்ந்து பார்த்தார். அவரது விரலில் கூத்தையாவின் உழைப்பு தெரிந்தது.
“என் புள்ள அனுப்பிய பணம் சார் இது. எடுத்தீட்டீங்களானு ஒரு நாளைக்கு ரெண்டு முறை போன் பண்ணி கேட்கிறான் சார்…” சொற்கள் பதத்துப்போய் குரல் கரகரப்பாக இருந்தது. மேலாளர் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவரது முகத்தில் சுழியம் விழுந்திருந்தது.
வங்கி மேலாளர் இருக்கையிலிருந்து எழுந்தார். அவரது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து மணி பர்ஸை எடுத்து ரோஸ் நிற பணத்தை எண்ணியபடி “எவ்ளோங்கய்யா பணம் வேணும்” எனக் கேட்டார்.
கூத்தையா அப்பணத்தைப் பார்த்தபடி சொன்னார். “ இருபதாயிரம் வேணுங்க…”.
மேலாளர் பணத்தை எண்ணி கூத்தையா முன் நீட்டினார். அதை வாங்குவதற்காக நீண்ட அவரது கைகள் சட்டென இழுத்துக்கொண்டன.
“யாரோட பணம் சார் இது?”
“என்னோடது…”
“எனக்கு என் மகன் அனுப்பிய பணம்தான் சார் வேணும்….”
“இதை உங்க மகன் அனுப்பி பணமென நினைச்சி, வாங்கிக்கோங்க. இந்தப் பணத்தை என் அக்கவுண்ட்க்கு உங்க மகனை போடச் சொல்லுங்க..” என்றவாறு மேலாளர் பணத்தை நீட்டிக்கொண்டிருந்தார். கூத்தையா அந்தப் பணத்தை கைநீட்டி வாங்கவில்லை.
“எனக்கு உங்க பணம் வேணாம் சார். ஏ புள்ள அனுப்பின பணம்தான் வேணும்,…” என்றவாறு கூத்தையா வங்கியிலிருந்து வெளியேறினார். அவர் கண் முன்னே கடன்காரர்கள் நிழலாடினார்கள்.
வீட்டு வாசலில் வேர் செத்து நின்றிருந்த வேப்பமரம் நினைவுக்கு வந்தது. அதை வெட்டி ஏற்றினால் வட்டிக்கு ஆகுமென நினைத்தார். நாக்கில் ஊறிய எச்சிலை இரு கைகளிலும் துப்பிக்கொண்டு கைகளை வேகமாக உராய்த்தார். அவரது கால்கள் வீட்டை நோக்கி வேகமெடுத்தன.