கட்டுரைகள்
மொசாட் சதியால் ஈரான் அதிபர் படுகொலை? அதிர்ச்சிமிகு இஸ்ரேல் உளவு படை தாக்குதல்கள்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
அமெரிக்காவின் சிஐஏ(CIA), முன்னைய சோவியத் யூனியனின் கேஜிபி (KGB) ஆகியவற்றை விஞ்சிய உலகின் அதி சக்திவாய்ந்த உளவு அமைப்பாக இன்றும் விளங்குவது இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்புதான் மொசாட்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டாலும் இஸ்ரேலின் மொசாட் உளவுப்படை சதி செய்து அழித்திருக்கலாம் என்கிற சந்தேகம் வலுவாக இருக்கிறது. ஆனாலும் ஈரான் அதிபர் ரைசியை படுகொலை செய்யவே இல்லை என இஸ்ரேல் சொல்கிறது.
ஈரான் அணுவாயுதம் வைத்திருக்கும் நாடு என்ற போதிலும் தொழில் நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு நாடாகவே நோக்க முடியும். மத அடிப்படையை வைத்து பழமைவாத சிந்தனையுடன் ஈரானுடய வளர்ச்சி பாரியளவில் பின்தங்கியுள்ளது.
ஷியா முஸ்லிம்களான ஈரானிய மக்கள், இவர்களின் மதக்கோட்பாடு சுன்னி முஸ்லிம்களுக்கு முரணானக உள்ளதால், அரபுலகில் பல பகைமைகளை எதிர்நோக்குகின்றனர். மதத்தை முன்னிறுத்தி தொழிற்நுட்பத்தில் தோல்விகண்ட நாடாகவே ஈரானை அவதானிக்க முடியும்.
1960களில் அமெரிக்கா வழங்கிய ஹெலிகாப்டர் :
தற்போது ஈரான் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா அல்லது இஸ்ரேல் சதியால் அழிக்கப்பட்டதா என்கிற சந்தேகங்களுக்கு காரணமே மொசாட்டின் கடந்த கால- நிகழ் கால அதிர்ச்சிகர தாக்குதல்கள் தான்.
ஈரானின் தலைவர் இப்ராயிம் ரைசி பயணித்த உலங்குவானுர்தி 1960களில் கனடா மற்றும் அமெரிக்க இராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட பெல் 212 எனப்படும் உலங்கு வானுர்திகளாகும். 1960களில் ஈரானுடன் அமெரிக்கா நட்புறவுடன் இருந்த காலத்தில் 15 வானுர்திகள் அப்போது வழங்கப்பட்டன.
இன்றும் அவை ஈரானின் பயன்பாட்டில் உள்ளன. அவைகளில் ஒன்றில்தான் ரைசா பயணித்தார். 64 வருடங்கள் கடந்த நிலையில் அதைவிட தொழில்நுட்பம் கூடிய எந்த வானுர்தியும் ஈரானிடம் இல்லை.
அதைவிட கொடுமையாதெனில் பெல் 212 வானுர்திகளுக்கு உலகில் உதிரிப்பாகங்களே கிடையாது இப்படியான ஒரு நிலையில்தான் ஈரானின் நிலை உள்ளது.
பழி வாங்கப்பட்ட ஹிட்லரின் தளபதி :
பல லட்சக்கணக்கான யூதர்களை படுகொலை செய்து இன்றைக்கு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாகக் காரணமாக இருந்த ஜெர்மனி ஹிட்லரின் ரகசிய பாதுகாப்புப் படை தளபதியாக இருந்தவர் (Adolf Eichmann) ஹெச்மன். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்ததில் முதன்மைப் பங்காளியாக இருந்தவர்.
இதுவே 1960-களில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு நடத்திய ‘ஒபரேஷன் பினாலே’ இன்றைக்கும் உலகை பிரம்மிக்க வைத்தது.
2-வது உலகப் போரில் ஜெர்மனி தோற்றுப் போய் ஹிட்லர் மரணித்துப் போக ஹெச்மன் கதி என்ன என தெரியாமல் போனது. அவ்வப்போது பிடிபட்டார் என்கிற செய்திகள்தான் வந்தன. இந்த பின்னணியில் ஆர்ஜென்டினாவில் பதுங்கியிருக்கிறார் ஹெச்மன் என்ற தகவலை ‘யூத’ உளவாளிகள் மூலம் பெற்றது மொசாட்.
பல மாதங்கள் காத்திருந்து ஐக்மனை தூக்கிய மொசாட், ஆர்ஜென்டினாவுக்கு சென்ற இஸ்ரேலிய அமைச்சரின் விமானத்தில் அந்த நாட்டுக்குத் தெரியாமலேயே இஸ்ரேலுக்கு கொண்டு வந்து தூக்கில் போட்டு பழிதீர்த்தது. ஹெச்மனை பிடிக்க மொசாட் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் ஒபரேஷன் பினாலே.
பாலஸ்தீன படுகொலைகள்:
ஜெர்மனியின் மியூனிக்கில் 1972-ல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சென்ற 11 இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன விடுதலைப் படை சுட்டுக் கொன்றது. இதற்கு மொசாட் அமைப்பு பழிதீர்க்க மேற்கொண்ட உளவு நடவடிக்கைகள் பயங்கரமானவை.
1970களில் யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கம்் தீவிரமாக யுத்தம் நடத்தியது.
1977-ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் பாலஸ்தீன போராளிக் குழுவின் ஒவ்வொரு தலைவரையும் இலக்கு வைத்து அழித்துக் கொண்டே இருந்தது மொசாட் என்பது பின்னாளில்தான் தெரியவந்தது.
சிரியாவை சிதைக்க சதி:
சிரியாவின் துணை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படக் கூடிய அளவுக்கு செல்வாக்கான நபராக இருந்தவர் கோஹன். அப்படி செல்வாக்கு மிக்க நபருக்கு சிரியாவின் அத்தனை ராணுவ ரகசியங்களும் தெரியும்.
சிரியாவில் கோஹன் என்பவர் தேசத்துரோகி; இஸ்ரேலில் ஒரு தேசபக்தர். இஸ்ரேலின் மொசாட் எந்த எல்லைக்கும் ஊடுருவலை மேற்கொள்ளும் என்பது கோஹன் ஒரு நல்ல உதாரணம்.
இஸ்ரேலுக்கு எதிரான சிரியாவின் தும்மல் கூட மொசாட்டுக்கு சென்று சேர அந்த நாடு ரொம்பவே குழம்பிப் போனது. இதனால் சிரியாவின் ‘தோழன்’ அன்றைய சோவியத் யூனியன் உதவியை நாடியது.
சோவியத் யூனியன் சந்தேகத்தின் அடிப்படையில் கோஹனை உளவு பார்க்க இறுதியில் கையும் களவுமாகவே அவர் சிக்கிவிட்டார். பின்னர்தான் பல ஆண்டுகளாக மொசாட்டால் வளர்த்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உளவாளி கோஹன் என்பது அம்பலமானது.
இதனால் சிரியா அரசு கோஹனை தூக்கிலிட்டுக் கொன்றது. இஸ்ரேல் தேசபக்த மாவீரனாக போற்றுகிறது.
ஈரான் அணு விஞ்ஞானிகள் படுகொலைகள்:
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை நாசமாக்க, ஈரான் கருவிகளை கொள்முதல் செய்யும் ஐரோப்பாவில் போலி நிறுவனங்களை உருவாக்கியது இஸ்ரேலின் மொசாட். பல்வேறு முறைகேடுகள் மூலம் ஈரான் அரசுடன் நெருங்கி அணுசக்தி திட்டங்களுக்கு போலி கருவிகளை கொடுத்தது மொசாட்.
ஈரானின் அணு விஞ்ஞானிகள் இன்றளவும் அடுத்தடுத்து மொசாட் உளவுப் படையினரால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஹமாஸ் யுத்தத்தின் காரணம்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸுடன் மோதுகிறது இஸ்ரேல். இந்த மோதல்களுக்கு அதாவது இஸ்ரேலை ஹமாஸ் வன்மம் தீர்க்க ஒரு காரணம் ஹமாஸின் அறிவியல் தொழில்நுட்ப மூளை- அல் ஸ்வாரியை துனிசியாவில் வைத்து கதையை முடித்ததுதான் எனவும் சொல்லப்படுகிறது.
இத்தகைய அபாயகரமான மொசாட் அமைப்புதான் ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரை சதி செய்து அழித்திருக்கும் என வலுவான சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.