தாய்வானை சுற்றி இன்றும் போர் பயிற்சியில் இறங்கியுள்ள சீனா!
தாய்வானைச் சுற்றி இரண்டாவது நாளான இன்றும் சீனா தனது போா் ஒத்திகையை முன்னெடுத்து வருகிறது.
தாவானின் புதிய ஜனாதிபதி லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு தண்டனையாக அந்தத் தீவைச் சுற்றி, சீனா நேற்று முதல் தனது போர் ஒத்திகையை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, இந்த போர் ஒத்திகையில் சீன இராணுவம், கடற்படை, விமானப் படை, ஏவுகணைப் படை ஆகியவை பங்கேற்றுள்ளன.
தாய்வான் பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகள், தைவான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கின்மென், மாட்சு மற்றும் டோங்கி போன்ற பிரதேசங்கள் உட்பட தீவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது.
தாய்வானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று, கடந்த 20 ஆம் திகதி (திங்கள்கிழமை) ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அதன்பின்னர் உரையாற்றிய அவர், தாய்வானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், தனது அரசு இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும் என்று உறுதியளித்தாா்.
சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த லாய் சிங்-டே பலமுறை முன்வந்த போதிலும், சீனா மறுத்துவிட்டது. இதனால் தைவானின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தாய்வானின் புதிய ஜனாதிபதி லாய் வலியுறுத்தினார்.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சீனா, லாய் சிங்-டேவை “பிரிவினைவாதி” என்று முத்திரை குத்தி, அவரது தொடக்க உரையை விமர்சித்ததுடன், ‘தைவானின் சுதந்திரம் என்பது முடிந்துபோன ஒன்று’ என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தாய்வானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக சீனா தனது போர் ஒத்திகையை ஆரம்பித்துள்ளதாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறினாா்.
மேலும், சீனாவின் உள்விவகாரங்களில் ஒன்றான தைவான் விவகாரத்தில் தலையிடும் அந்நிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுப்பது மற்றும் முக்கிய பகுதிகளை கைப்பற்றுவதற்காகவும் இந்தப் போா் ஒத்திகை நடத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்தள்ளார்.