கட்டுரைகள்

இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கின்றதா?….. நியூசிலாந்து சிற்சபேசன்.

 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு, ஏப்ரல் 19ல் ஆரம்பமாகி, ஏழுகட்டங்களாக நடைபெறுகின்றது. ஜூன் 1ல் வாக்குப்பதிவு பூர்த்தியடைகின்றது. அதனைத்தொடர்ந்து, ஜூன் 4ல் முடிவுகள் வெளியாகின்றன.

தற்போது ஆட்சியிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியுமே தேசியமட்டத்திலே பெரிய கட்சிகளாகக் காணப்படுகின்றன. ஆனாலும்கூட, அவை தனிக்கட்சிகளாகத் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. “என்.டி.ஏ” என்று சொல்லப்படுகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாரதிய ஜனதாவும், “இண்டியா” கூட்டணிக்கு காங்கிரசும் தலைமைவகிப்பதாகப் பெருவெட்டில் சொல்லலாம்.

கடந்த இரண்டு பொதுதேர்தல்களிலும் பாரதிய ஜனதாக் கட்சியே வெற்றியீட்டியது. அதனுடைய தொடர்ச்சியாக, மூன்றாவது பொதுத்தேர்தலிலேயும் வெற்றியைச் சுவைக்க ஆலாய்ப்பறக்கின்றது.

மறுவளத்தில், சுதந்திர இந்தியாவிலே பெருமளவுகாலத்தை காங்கிரஸ் கட்சியே ஆட்சிசெய்திருக்கின்றது. அத்தகைய பாரம்பரியமுடைய கட்சியினுடைய நிலையே, தற்போது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகியுள்ளது.

2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி கடைசியாக ஆட்சிப்பீடமேறியது. அந்த தேர்தலிலே, 440 வரையான வேட்பாளர்களைக் காங்கிரஸ் களமிறக்கியது. அதிலே 206 வரையானவர்களே வெற்றியீட்டினர். அதுவே, அண்மைக்காலத்திலே காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த சொல்லிக்கொள்ளும்படியான தேர்தல் வெற்றியாகவும் ஆகிவிட்டது.

2009லே காங்கிரஸ் தனித்து 206 ஆசனங்களை வென்றபோது, பாரதிய ஜனதா தனித்து 116 ஆசனங்களை வென்றது. அதன்பின்னர், 2014லே பாரதிய ஜனதா தனித்து 282 ஆசனங்களை வென்றபோது, காங்கிரஸ் தனித்து 44 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, 2019லே பாரதிய ஜனதா தனித்து 303 ஆசனங்களை வென்றபோது, காங்கிரஸ் தனித்து 52 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இவ்வாறாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விகள் தொடர்கதையாகின. அதனால், கட்சியினுடைய கட்டமைப்புக் குலையத் தொடங்கியது. வற்றிய குளத்திலிருந்து பறந்துபோகின்ற பறவைகள் போன்று, காங்கிரஸ் கட்சியிலே, பெயர் சொல்லிக்கொள்ளக் கூடிய தலைவர்கள் பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தாவிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, கோவா, உத்தராகண்ட், அசாம் போன்ற மாநிலங்களிலேயே பாரதிய ஜனதாக் கட்சியுடன் நேரடிப் போட்டியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த மாநிலங்களிலே 140வரையான பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதிலே 90விழுக்காடு வரையானவற்றிலே பாரதிய ஜனதாக் கட்சியே கடந்த தேர்தலிலே வெற்றி பெற்றது.

“ஹிந்தி பெல்ட்” என்று சொல்லப்படுகின்ற உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தொய்வு துல்லியமாகத் தெரிகின்றது. இவ்விரண்டு மாநிலங்களிலுமே 120வரையான பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பாரதிய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்த இரண்டு மாநிலங்களிலே தனித்துப் போட்டியிடவில்லை. பிராந்தியக் கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. அதிலே, தேசிய ஜனநாயக கூட்டணியின் திட்டவட்டமான தலைமை பாரதிய ஜனதாக் கட்சியிடமே காணப்படுகின்றது. மறுவளத்தில், “இண்டியா” கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை சொல்லிக் கொள்ளும்படி தெளிவாகத் தெரியவில்லை.

டெல்லிக்கு ராசாவாக வேண்டுமெனில், “ஹிந்தி பெல்ட்” உள்ளிட்ட வட மாநிலங்களில் ஒரு கட்சி பலமாக இருக்கவேண்டும். அண்ணளவாக ஐம்பது விழுக்காடு பாராளுமன்றத் தொகுதிகள் அங்கே உள்ளன.

2019 தேர்தலிலே தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக்கொள்ளக்கூடிய வெற்றி கிடைத்திருந்தது. வட மாநிலங்களிலே காங்கிரஸ் படிப்படியாக சோபை இழந்தே வந்திருக்கின்றது. அதனால் தேர்தல் வெற்றி வசப்படவில்லை.

கடந்த பொதுதேர்தலில், 15 வரையான மாநிலங்களில் காங்கிரஸ் ஒற்றை ஆசனத்தைக்கூட பெற முடியவில்லை. இரட்டை இலக்கத்திலேயான தொகுதிகளிலே வெற்றி என்பது கேரளாவில் மட்டுமே சாத்தியமாகியது. ஒருமாநிலம் அல்லது, யூனியன் பிதேசமொன்றில் பதிவாகிய மொத்த வாக்குகளில் ஐம்பது விழுக்காடு பாண்டிச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருந்தது.

அந்தவகையிலே காங்கிரஸ் கட்சியின் சரிவு துல்லியமாகத் தெரிகின்றது. கடந்த இரண்டு பொதுத்தேர்தலிலும் கற்றுக்கொண்டவைகளிருந்து புதிய அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தலிலே பரிசோதிக்கின்றது.

பாரதிய ஜனதாக் கட்சியை நேரடியாகத் தனித்து எதிர்கொள்ள முடியாது என்னும் யதார்த்தம் காங்கிரஸ் கட்சிக்கு உறைத்திருக்கின்றது. அதனாலேயே, பிராந்தியக் கட்சிகளுடன் “விட்டுக்கொடுப்புக்களுடன்” கூட்டணி அமைத்திருக்கின்றது.

இன்னுமொருவகையிலே சொல்வதானால், எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களைத் தேடுவதே காங்கிரஸ் கட்சிக்கு

சவாலகியிருக்கின்றது. அத்தகையதொரு சூழ்நிலையில், பிராந்தியக் கட்சிகளுடன் கைகோர்ப்பதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை என்பதுவும் யதார்த்தமாகும்.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிலேயும் வலுவான பிராந்தியக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்திருக்கின்றது.

300வரையான தொகுதிகளிலே மட்டுமே காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிடுகின்றது. அதிக தொகுதிகளைப் பிராந்தியக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கின்றது. 1951ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில், காங்கிரஸ், நேரடியாகப் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

அந்தவகையிலே காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் மாற்றத்தைக் காணமுடிகின்றது. குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டு, பாரதிய ஜனதாக் கட்சிக்கு சவால் விடக்கூடிய வேட்பாளர்களை ஆதரிக்கின்றது. அதனால், கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கட்சியினுடைய வெற்றிவாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.