இலக்கியச்சோலை

படைப்பின் இலட்சியமே சமுதாயத்தின் தேவை: மலையக இலக்கியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய அந்தனி ஜீவா! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும்அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும்கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும்” என்ற தமது கூற்றின் வழி நின்று இலக்கியம் படைத்து வரும் அந்தனி ஜீவாவின் புகழ் ஈழத்து மலையக இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்மே 26 இல் 80 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் அந்தனி ஜீவாவை (மே 26, 1944) வாழும் போதே வாழ்த்துவோமாக ! )
                         ஐங்கரன் விக்கினேஸ்வரா —– >
எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப்பன்முக ஆளுமைப் படைத்த அந்தனி ஜீவா 2010இல் எதிர்வு கூறலால் மலையகத்தில் விழிப்பணர்ச்சி உருவாகியது.
மலையக மக்களின் வாசிப்புத்திறன் மிகக் குறைந்து விட்டது. வாசிப்பதே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. ஒப்பிட்டளவில் இலக்கியம் மொழி ஆகிய துறைகளில் ஏனைய சமூகங்களைவிட மிக பின்தங்கிவிட்டதாக மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா 2010 ஆகஸ்டில் அன்றைய நிலமையினை எடுத்துக் கூறினார்.
பாடசாலை மட்டத்தில் மொழி வளர்க்கப்படுவது குறைந்து விட்டது. வாசிப்பும் இல்லை தமிழ் மொழி வளர்க்கப்படுவதுமில்லை என்றால் இலக்கியவாதிகளால் என்ன செய்யமுடியும்? நாமே பாதை வெட்டி பயணிக்கும் காலத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
ஏனைய சமூகங்கள் ஏற்கனவே வெட்டப்பட்ட பாதையில் நீண்ட தூரம் சென்று கொண்டிருக்கின்றனர். அதுவும் கரடு முரடு இல்லாத பாதை. எமது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஓரிரு நல்லெண்ணம் படைத்த பெரும் தகைகளால் ஏதோ பயணம் தொடர்கிறது என
கொழுந்து சஞ்சிகை கண்டி இந்து காலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது உரை நிகழ்த்திய சஞ்சிகையின் ஆசிரியர் அந்தனி ஜீவா விசனப்பட்டார்.
மலையகத்தில் நீண்ட காலமாக ‘கொழுந்து’ சஞ்சிகையை 31 ஆவது இதழ் வரை  20க்கும் மேற்பட்ட வருடங்கள் தனிமனிதனாக இருந்து வெளியிட்டு வருவது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும்.
மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வரும் அந்தனி ஜீவா 1944 மே 26இல் பிறந்தார். கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாது, சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டு வருபவர்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளரும் கவிஞருமாக அந்தனி ஜீவா விளங்குகிறார்.
சமூக விழிப்புணர்வின் ஊடகர்:
கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்ற அந்தனி ஜீவாவின் தந்தை செபஸ்டியன்; தாய் லட்சுமி அம்மாள் ஆவார்.
1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
நாடகத்துறையிலும் பங்களித்துவரும் இவர் எழுதிய முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார்.
இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு சிறிலங்கா அரசு தடை விதித்ததும் நாடே அறிந்ததே.அத்து 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தி உள்ளார்.
மலையக இலக்கியத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்:
மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமையும் அந்தனி ஜீவாக்கு உண்டு.
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களிடம் உரத்த சிந்தனைகளை விதைத்தோரும், மலையக மக்களின் விடுதலைக்கு உழைத்தோரும் எனப் பன்னிருவர் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘மலையக மாணிக்கங்கள்’ என்னும் நூலை 1998 ஆம் ஆண்டு கொழும்பு துரைவி வெளியீடாக கொண்டு வந்தார்.
அந்நூலில், மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளான கோ. நடேசய்யர், மீனாட்சி அம்மையார், பெரி. சுந்தரம், இராமானுஜம், ஜெ.எஸ். பெரோ, ஜார்ஜ் ஆர். மேத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே. வெள்ளையன்,      சி.வி. வேலுப்பிள்ளை, ஏ. அஸீஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி. ராஜன் ஆகியோர் பற்றிய சிறப்பான பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
மலையக இலக்கியச் சுடர்
கொழும்பு நாவல திறந்த பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்புளோமா பட்டம் பெற்ற அந்தனி ஜீவா தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
கொழுந்து, குன்றின் குரல் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 31.10.1984 அன்று சுட்டுகொல்லப்பட்டதன் எதிரொலியாக தினகரன் இதழின் வாரமஞ்சரியில் ‘அன்னை இந்திரா’ தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பானது நூலாகவும் வெளிவந்தது.
அத்துடன் ஈழத்தில் தமிழ் நாடகம் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசையர் (1990), மலையகமும் இலக்கியமும் (1995), முகமும் முகவரியும் (1997), மலையக மாணிக்கங்கள் (1998), அக்கினிப் பூக்கள் (1999), சி. வி. சில நினைவுகள் (2002) குறிஞ்சிக் குயில்கள் (2002), மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகம் வளர்த்த கவிதை (2002), கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002), திருந்திய அசோகன் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2003), மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம் (2007), ஒரு வானம்பாடியின் கதை (2014) போன்ற நூல்களை அந்தனி ஜீவா எழுதியுள்ளார்.
கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர்:
மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வரும் அந்தனி ஜீவா, தான் செயலாளராகப் பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அந்தனி ஜீவா கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
மலையக பெண்களின் எழுத்துக்களை தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், 2000), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மலையகமும் இலக்கியமும் நூல்:
 ‘மலையகமும் இலக்கியமும்’ என்னும் நூலில் மலையக இலக்கியத்தின் வரலாற்றுப் பின்னணி, வாய் மொழி இலக்கியம், மலையகமும் கவிதையும், மலையகமும் சிறுகதையும், மலையகமும் நாவல்களும், மலையகமும் கலைகளும் முதலிய தலைப்புகளில் மலையக இலக்கிய வரலாற்றை விரிவாக அந்தனி ஜீவா பதிவு செய்துள்ளார்.
மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தாம் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘மலையகம் வளர்த்த கவிதை’ என்னும் நூலை கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் வாயிலாக 2002 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்து வரும் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘குறிஞ்சி மலர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர் அந்தனி ஜீவாவே.
மலையகத்தின் தேர்ந்த 21 பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ‘குறிஞ்சிக் குயில்கள்’ என்னும் நூலினை 2002 ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கொண்டு வந்தார்.
‘அம்மா’ என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து, சென்னை கலைஞன் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தார். ‘புதிய வார்ப்புகள்’ என்ற வரிசையில் இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், ‘பெண் பிரம்மாக்கள்’ என்ற தலைப்பில் பெண் படைப்பாளர்களையும் கொழுந்து இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா.
மலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்த அந்தனி ஜீவா “கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல, உயிர்” என்ற உயர்ந்த லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்பட்ட பெருமைக்குரியவர்.
ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சு:
அந்தனி ஜீவா ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
 மலையகத்தில் 1980 களில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமை அந்தனி ஜீவா அவர்களையே சேரும்.
இவர் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குச் சென்று வீதி நாடக முன்னோடியான பாதல் சர்கார் சென்னையில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றார்.
மக்களுடன் நேரடியானதும், நெருக்கமானதுமான தொடர்பினை ஏற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெரு நாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயில் பெற்றது.
இவரின் ‘வீணை அழுகிறது’ என்ற சமூக நாடகம் பெரிய இடத்து அரசியல் வாதிகளின் தோலை உரித்துக் காட்ட முனைந்ததால், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதும் தெரிந்ததே. அலைகள்’ நாடகம் இலங்கை கலாச்சாரப் பேரவை 1978ஆம் ஆண்டு நடத்திய தேசிய நாடக விழாவில் இரு விருதுகளைப் பெற்றது.
அத்துடன் கொழும்பிலும், மலையகத்திலும் பல வீதி நாடகங்களை நடத்தியுள்ளார். இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 1994 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் நாடக விழாவில் இவரது ‘ஆராரோ ஆரிவரோ’ என்ற நாடகம் விருது பெற்றது. மகாகவி பாரதி, ஆராரோ ஆரிவரோ, கவிதா, பறவைகள், வெளிச்சம், சாத்தான் வேதம் ஓதுகின்றது, ஒன்று எங்கள் ஜாதியே, அக்கினிப் பூக்கள், தீர்ப்பு, வீணை அழுகின்றது, முள்ளிள் ரோஜா, அலைகள், பறக்காத கழுகுகள் முதலிய நாடகங்கள் உட்பட 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
ஈழத்தில் தமிழ் நாடகம் :
 
‘முள்ளில் ரோஜா’ என்ற பெயரில் அந்தனி ஜீவா எழுதி இயக்கிய நாடகம் 1970 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட முதல் நாடகமாகும். இந்நாடகம் அந்தனி ஜீவாவை ஈழத்து தமிழ் நாடக உலகில் பரவலாக இனம் காட்டியது.
‘ஈழத்தில் தமிழ் நாடகம்’ என்னும் நூலில் உலக நாடக மேடை, தமிழ் நாடக மேடை, நாட்டுக் கூத்து முதலிய தலைப்புகளில் நாடகங்களின் வளர்ச்சி மற்றும் நாட்டுக் கூத்தின் செழுமை, வளமை குறித்து பதிவு செய்துள்ளார். மேலும் ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட சி. வை.தாமோதரம் பிள்ளளையவர்களின் புதல்வரான வண.பிரான்சிஸ் கிங்ஸ்பரி, விபுலாந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிபிள்ளை, பேராசிரியர் சரத் சந்திரா, அ. ந, கந்தசாமி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து, நடிகவேல் லடீஸ் வீரமணி முதலியவர்களின் நாடகப் பணிகளையும், நாடகத்திற்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளார்.
“படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும்” என்ற தமது கூற்றின் வழி இன்றும் இலக்கியம் படைத்து வரும் அந்தனி ஜீவாவின் புகழ் ஈழத்து மலையக இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
  – ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

One Comment

  1. படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும் என்பதும் கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாக இருக்க வேண்டும் என்பதும் பெரிய சிந்தனை. அந்தனி ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.