எஸ். பொன்னுத்துரையின் மொழிபெயர்ப்பு எத்தனங்களை விடுப்புப் பார்த்தல்! …. இரண்டாம் விசுவாமித்திரன்.
(மறைந்த பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் 92வது பிறந்த தினத்தை முன்னிட்டு (24.05.2024) இக்கட்டுரை பிரசுரமாகி;றது.)
எஸ். பொன்னுத்துரையின் மொழிபெயர்ப்பு எத்தனங்களை விடுப்புப் பார்த்தல்
இரண்டாம்விசுவாமித்திரன் —–>
எஸ்பொ என இலக்கிய உலகு நன்கு அறிந்து வைத்திருக்கும் எஸ்.பொன்னுத்துரை தமிழ் இலக்கியத் தளங்களில் ஆற்றிய பணிகள் அளப்பரியன. புதினம் மற்றும் சிறுகதை வெளிகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் உச்சப் பேசுபொருளாகவும் கணிப்புப் பெற்றவர். எனினும் புனைவு வெளிக்கும் அப்பால் மொழிபெயர்ப்பு ஊழியத்திலும் அவர் வியர்வை சிந்தினார். அதுபற்றி விடுப்புப் பார்க்கும் எத்தனமே இக்கட்டுரையின் மையமாகும்.
தமிழ் இலக்கியத்தின் மேன்மையான படைப்புகள் உலக அங்கீகாரம் நோக்கி நகர்வதற்கும் குறி சுடப்பட்ட பிற நாட்டுச் சாத்திரங்கள் நம்மொழியில் இடம் பார்த்து அமர்வதற்கும் மொழிபெயர்ப்புகள் இன்றியமையாத கருவியாக அமைகின்றன. அதன் காரணமாகவே மகாகவி பாரதியாரும் சுவாமி விபுலாநந்தரும் மொழிபெயர்ப்பின் அவசியத்தை நமக்கு அடிக்கடி நினைவூட்டினர். எனினும் நம்மவர்களிடையே அது மிகை ஊழியமாகவே அடையாளம் பெற்றது. ஆனால் எஸ்.பொ அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார். தான் ஈடுபடும் ஏனைய படைப்புத்துறைகளுக்குச் சமதையாக மொழிபெயர்ப்புப் பணிகளையும் தன்னோடு அணைத்துக் கொண்டார். மொழிபெயர்ப்பை இலக்கியக் கலையாக நேசிக்கிறேன் என்று பிரசித்தம் செய்தார்.
எஸ்;.பொன்னுத்துரை ஓதிப் படித்த காலத்தில் ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்டவர். தமிழ் ஆங்கிலம்
இலத்தீன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். எனவே மொழிபெயர்ப்புப் பணிகளில் இயங்குதல் அவருக்கு எளிதாயிற்று. அவரில் சடைத்திருந்த மொழியாற்றல் அவருக்குத் துணையாக சேவகபம் செய்தது.
புதிய சொற்கள் பொன்னுத்துரை ஆங்கில மொழிச் சொற்களுக்கு ஈடாக புதிய பொருத்தமான தமிழ்ச் சொற்களை உருவாக்கினார். தமிழுக்கு ஊறு நேர்ந்து விடாமல் அவற்றை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தார்.
கடல்கடந்து போய் நம்மவர் தந்த இலக்கியத்தை புகலிட இலக்கியம் என்று சிலர் சுமந்து திரிந்தவேளையில் Diaspora என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பகரமாக புலம்பெயர்ந்தோர் என்ற சொல்லே பொருத்தமெனக் கூறி புகலிட இலக்கியத்தைப் புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக வரவு வைத்து அதற்கு முகவரி கொடுத்தவர் எஸ்.பொன்னுத்துரையே. மில்லேனியம் என்பதை தமிழில் புத்தாயிரம் என நமக்குத் தந்தவரும் அவரே.
புதியவர்களை ஊக்குவித்தல் தன்னாலான மொழிபெயர்ப்பு வேலைகளை அவராகவே செய்த அதேவேளை புலம் பெயர்ந்து வாழும் புதிய தலைமுறையினரும் அத்துறையில் ஈடுபட ஊக்கமளித்தார். தான் வாழும் நாட்டின் இலக்கியங்களை மொழிமாற்றம் செய்தலின் ஊடாக குறிப்பிட்ட நாட்டவரிடமிருந்து நமக்குக் கௌரவமும் அந்தஸ்;தும்; கிடைக்குமென்றார். டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து மொழி பெயர்ப்புகள் வெளிவர அவர் உந்து சக்தியாகத் திகழ்ந்தார்.
“1996இல் வெளிவந்த தாய் என்ற எனது சிறுகதைத் தொகுதியில் டென்மார்க் நாட்டின் தேசிய விருது பெற்ற அனசன் என்பவரின் பதினேழு கதைகளை தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டேன். இதற்கான
தூண்டுதலைத் தந்தவர் எஸ்பொ அவர்களே” என்று த.தர்மகுலசிங்கம் (டென்மார்க்) எழுதிய தேடல் சில உண்மைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கைலாயமாலை எஸ்.பொன்னுத்துரையின் மொழிபெயர்ப்புப் பணியின் தொடக்கமாக கைலாயமாலை என்ற நூல் வெளிவந்ததாகத் தெரிகிறது. அது தமிழில் இருந்து ஆங்கிலத்தில் அவர் தந்தது. குறிப்பிட்ட நூல்பற்றியோ வெளியிட்ட காலம் மொழிபெயர்ப்புக்கான பின்னணித் தகவல் போன்ற எந்தத் தகவலும் வெளிச்சத்தில் இல்லை. ஆனால் சென்னையிலிருந்து மித்ர பதிப்பகம் 2002இல் வெளியிட்ட இஸ்லாமும் தமிழும் என்ற நூலின் பக்(34) இல் “கைலாயமாலை என்ற நூலினை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உள்ளேன்” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. இது கைலாயமாலையின் சாட்சியமாகும்.
காந்தி தரிசனம் பொன்னுத்துரையின் மொழிபெயர்ப்பு முயற்சிகளின் அடையாளங்களில் ஒன்றாக காந்தி தரிசனம் என்ற நூலைக் கருதலாம்.
இலங்கையில் 1969ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா இடம் பெற்றது.அரசு வெளியீட்டு நிறுவகத்தின் அதிபராகவிருந்த இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் மேற்படி நூற்றாண்டை முன்னிட்டு தனது சஞ்சிகையான இளம்பிறை மகாத்மா காந்தி சிறப்பிதழ் வெளியிடவும் காந்தி தொடர்பில் ஐந்து நூல்களை அரசு வெளியீடு சார்பாக பிரசுரம் செய்யவும் சித்தம் கொண்டு ஏற்பாடு செய்தார். அவ்வாறான ஐந்து நூல்களுள் ஒன்றுதான் காந்தி தரிசனம் என்ற நூல் ஆகும்.
மகாத்மா காந்தியை உலகப் பெரும் பிரபலங்கள் எவ்வாறு பார்த்தன என்ற அடிப்படையில் எழுதப்பட்ட தனித்தனியான இருபத்தொன்பது ஆங்கிலக் கட்டுரைகளை
எஸ்.பொன்னுத்துரை தமிழ் செய்து இந்நூலை வெளியிட்டார். கம்யூனிச சிந்தனைகளை நெஞ்சிலே தாங்கி வாழ்ந்த எஸ்பொ அஹிம்சை மேவிய காந்திய போதனைகளையும் சரி கண்டார் என்பதை ருசுப்படுத்தும் சாட்சியமாகவும் காந்தி தரிசனம் என்ற நூலைக் கருதலாம்.
இந்நூலின் அனைத்துப் பிரதிகளும் இலங்கையிலேயே விற்று முடிந்ததால் இந்தியாவில் அதனை பகிர வேண்டிய தேவை எழுந்தது. மித்ர வெளியீட்டகம் மேலும் ஐந்து பேரின் கட்டுரைகளைச் சேர்த்து முப்பத்து நான்கு பேரினால் எழுதப்பட்ட கட்டுரைகளோடு காந்தி தரிசனம் மீண்டும் 2008 இல் சென்னையிலிருந்து வெளியானது.
ஜவகர்லால் நேரு இந்திரா காந்தி ஜாகிர் ஹ{சைன் போன்ற இந்தியத் தலைவர்களாலும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநா தாகூர் மாட்டின் லூதர் கிங் போன்றவர்களாலும் ஹரோல்ட் வில்சன் போன்ற வெளிநாட்டுத் தலைவர்களாலும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன.
இந்நூலுக்கு முன்னீடு எழுதிய எஸ்பொ தனது கைப்பட எழுதிய குறிப்பு இது.
“மூலத்தின் முழுமையை பிறிதொரு மொழியில் பூரணமாகத் தரிசித்தல் சாலாது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அதேசமயம் மூலத்தின் வார்ப்பு முறையையும் தரிசன நெறியையும் சிதைக்காமல் இருப்பதுதான் மொழிபெயர்ப்புக்குரிய இலக்கணம் என்பது என் கட்சி. இக்கருத்துக்கிசையவே இத்தமிழ்ப்பணி நிகழ்ந்துள்ளது”
தோதுப்பட்டவாறெல்லாம் மொழிபெயர்ப்பில் ஈடுபடுதல் ஆகாது என்பதை மேற்படி எஸ்பொவின் கூற்றின் ஊடாக நாம் தெளிந்து கொள்ளலாம்.
மகாவம்சம் எஸ்பொவின் மொழிபெயர்ப்புப் பணிகளின் கிரீடமாக விளங்குவது மகாவம்சத்தை தமிழ் செய்தமையாகும்.
எஸ்.பொன்னுத்துரை பிரபல இலக்கியவாதி என்ற தளத்திலேயே அவரை பலரும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர் வரலாற்றின் கட்டித்த மாணவன். பல்கலைக்கழகங்களிலே கிரேக்க பிரத்தானிய இந்திய வரலாறுகளைக் கற்றவர் வரலாற்றின்மீதான உந்துதலால் இலங்கை வரலாற்றை தானே முயன்று பெற்றவர். கலாநிதி வில்ஹெம் கெய்கர் என்பவரின் Mahavamsa or the great chronical of Ceylon என்ற நூலை மகாவம்ச சிங்களர் கதை என்று அவர் தமிழுக்குத் தந்தார்.
மொழிபெயர்ப்பு தொடர்பான கட்டுரை என்ற படுதாவில் மூலநூலான மகாவம்சம் மற்றும் அதன் மொழிபெயர்ப்புப் பின்னணிபற்றி சிறிது பேசுதல் எஸ்பொவின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள ஏதுவாக அமையும். .
மகாவம்சம் என்ற நூல் மகாநாம தேரரால் கி.பி 5ம் நூற்றாண்டில் தொகுக் கப்பட்டது. இவர் இலங்கையை அரசாண்ட தாதுசேன மன்னனின் சகோதரராவார். இத்தொகுப்பு நூல் கிமு 543 இல் இருந்து கிபி 361 வரையான 900 வருடகால இலங்கையின் ஆதிவரலாற்றை செய்யுள் வடிவில் 37 அத்தியாயங்களாக பாளி மொழியில் தருகிறது. இலங்கையின் முதல் அரசனான விஜயன் தொடங்கி மகாசேனன் வரையான ஆட்சிக்காலத்தை இந்நூல் பேசுகின்றது.
இத்தொகுப்பு நூலை இலங்கை வரலாற்றின் முதல் தொகுதியாகக் கொண்டால் 2010 ஆண்டுவரையான
வரலாற்றைத் தொகுத்து இதுவரை ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன.
வெள்ளையர் ஆட்சியில் இலங்கையில் பணியில் இருந்த ஜோர்ஜ் ரேனர் என்பவர் 1837 இல் முதன்முதலில் மகாவம்ச தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இது முதலியார் எல்.சி.விஜயசிங்க என்பரால் 1889இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
ரேனரின் மொழிபெயர்ப்பின் மீதான திருப்தியின்மை காரணமாக வேறொரு மொழிபெயர்ப்புக்கு முயற்சிக்கப்பட்டது. புதிய மொழிபெயர்ப்பாளரைத் தேடும் பணி ரி.டபிள்யு.றைஸ் டேவிட் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த மகாவம்ச மொழிபெயர்ப்பாளரே வில்ஹேம் கெய்கர் ஆவார்.
வில்ஹேம் கெய்கர் மகாவம்ச தொகுப்பினை ஜேர்மன் மொழியில் மொழிமாற்றம் செய்தவர். பாளி மொழியின்மீதும் மகாவம்சம் மீதும் தீராத ஆவல் கொண்டவர். அவர் 1912இல் கலாநிதி மாபெல் ஹயர்ஸ் பொடே என்ற மற்றொரு மகாவம்ச மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு மகாவம்சம் தொகுப்பை ஆங்கிலத்தில் வெளிக்கொண்டு வந்தார். இன்றுவரை கெய்கரின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பே உத்தியோகரீதியான மகாவம்சவின் ஆங்கில மொழி பெயர்ப்பாகக் கொள்ளப்படுகிறது.
வில்ஹேம் கெய்கரின் ஆங்கில மொழிபெயர்ப்பையே எஸ்பொ தமிழில் தந்தார். இந்நூல் 23.10.2009 இல் மித்ர வெளியீடாக சென்னையில் இருந்து வெளிவந்தது.
எஸ்பொவின் மகாவம்ச மொழிபெயர்ப்பு பின்னணியின் கதை இதுதான்.
1960களின் முன்தொங்கலில் பொன்னுத்துரை மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் ஆசிரியராக இருந்தார். அவ்வேளை
கல்லூரியின் நிதி சேகரிப்புக்காக துட்டகைமுனு எல்லாளன் வரலாற்றுக் கதையை முதல்முழக்கம் என்ற பெயரில் நாடகமாகத் தயாரித்தார். இந்நாடகமே மகாவம்ச நூலை தமிழில் மொழிபெயர்க்கும் எண்ணத்தை அவருள் உண்டாக்கிற்று. மகாவம்சத்தை தமிழில் கைப்பிரதியாக எழுதி வைத்துக் கொண்டார்.
இம்மொழிபெயர்ப்புக்கு அவரின் நண்பரும் பாளி மொழி வல்லுநருமான குலசிங்க என்பவர் அரிய ஆலோசனைகளை வழங்கியதாக எஸ்பொ கூறியுள்ளார். மட்டக்களப்பில் 1978இல் வீசிய சூறாவளியில் இக்கைப்பிரதி தொலைந்து போனது.
பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியபோது மீண்டும் மகாவம்ச தொகுப்பின் தமிழ் பெயர்ப்புக்கு முயற்சித்தார்.அதுவும் தொலைந்ததாக எஸ்பொவின் பதிவுகள் உள்ளன.
மகாவம்சம் என்ற நூலைத் தவிர்த்து இலங்கையின் ஆதிவரலாற்றை அறிவதற்கு தமிழிலோ அல்லது வேறுமொழிகளிலோ நுர்ல்கள் இல்லை என்ற தளத்தில் நின்றே தமிழில் மகாவம்சம் நூலைப் பெயர்க்கும் எண்ணத்தில் அவர் வாழ்ந்தார்
எனவே மூன்றாவது முயற்சியாகவும் மகாவம்ச மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். ஒரு நாளைக்கு பத்து மணித்தியாலம் வீதம் ஐந்து மாதங்கள் உழைத்து மகாவம்ச தமிழ் பெயர்ப்பை வெளிக் கொண்டு வந்தார்.
இம்மொழிபெயர்ப்பு நூலின் இன்னுமொரு விசேசம் ஆங்கில நூலை அடியொற்றிய மொழிபெயர்ப்புக்கும் அப்பால் அவர் எழுதிய பெரும்பாலான பக்கங்களிலுள்ள அடிக்குறிப்புகளாகும். வில்ஹேம் கெய்கரின்
மொழிபெயாப்புத் தவறுகள் சிலவற்றை அடிக்குறிப்பில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையின் ஆதிவரலாற்றை தமிழில் வாசிக்கும் அரிய வாய்ப்பை எஸ்பொவின் மொழிபெயர்ப்பு நூல் நமக்குத் தருகிறது.
வத்ஸாயநரின் காமசூத்திரம் எஸ்பொவின் எழுத்தாளுமை என்ற முழுமையின் ஒரு பின்னத்தைத் தரிசிக்க உதவும் நூல்களில் வத்ஸாயநரின் காமசூத்திரம் என்ற நூலும் அடக்கம். அது எஸ்பொவின் மொழிமாற்றுகைப் பணியின் உழைப்பில் வெளிவந்த ஒரு நூல்.
வத்ஸாயநர் என்ற தத்துவஞானி வாழ்ந்த காலம்பற்றி தெளிவான பதிவுகள் இல்லை. எனினும் கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கும் கி.பி ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என உறுதியாகியுள்ளது.
நம்மவர்கள் ஒளித்து மறைத்து வாசித்த புத்தகங்களைத் தந்த கொக்கோக முனிவரின் காலத்துக்கு முன்னரே வத்ஸாயநரின் காமசூத்திரம் வடமொழியில் உலா வந்தது. கி.பி 4ம் நூற்றாண்டு என்ற தகவலும் உண்டு. வத்ஸாயநரின் மேற்படி நூல் வெளிவந்த பின்னரே காமம் என்கிற மன்மதக் கலை அறிவியல் அந்தஸ்தைப் பெற்றது.
கணவன் மனைவி ஆகியோருக்கிடையிலான உடல் ஈர்ப்பின் போதான காதல் காமம் எனவாகும் விஞ்ஞான உளவியலை உள்ளடக்கமாகக் கொண்டு இரு பாகங்களாக அது வெளிவந்தது
மேற்படி நூலின் மெய்ப்பொருளை விஞ்ஞான ரீதியாக விளங்கி சரிகண்ட சேர் ரிச்சட் பேட்டன் மற்றும் ஆபட்ஹோனட் ஆகியோர் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். இந்த ஆங்கில நூலிலுள்ள சுவாரஸ்யமான
பகுதிகளையே எஸ்.பொ வத்ஸாயநரியன் காமசூத்திரம் எனும் பெயரில் 2011 இல் கவிதை வடிவில் தமிழுக்குக் கொண்டு வந்தார். 100 பக்கங்களில் 13 அத்தியாயங்கள்
எஸ்பொவின் காமசூத்திர நூல் எழுந்த பின்னணி பற்றியும் அறிந்து கொள்ளத்; தேவை உள்ளது.
1970 களில் எஸ்.பொன்னுத்துரை நாடகம் மற்றும் கவிதைகளை எழுதுவதற்கு தூக்கலான முன்னுரிமை கொடுத்து ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வரவேண்டுமென வாழ்ந்த அவருக்கு பாலியலின் விஞ்ஞான அறிவூட்டலைச் செய்யும் நூலொன்றை எழுதும் எண்ணம் உதித்தது. வத்ஸாயநரின் காமசூத்திர ஆங்கில மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்தார். கவிதை வடிவில் பிரதி தயாரித்து பத்திரமாக வைத்து அச்சில் வெளிவரும் காலத்தைக் காத்திருந்தார். ஆனால் மட்டக்களப்பு சூறாவளியில் தொலைத்த ஆவணங்களில் அதுவுமொன்றாயிற்று. நீண்ட காலத்தி;ன் பின்னர் ஏதோவொரு வழியில் மீண்டும் அது அவருக்குக் கிடைத்தது. அதன் பலன் இப்போது நமது கையில் தமிழில் வத்ஸாயநரின் காமசூத்திரம்.
இந்நூல்பற்றி அதன் முன்னீட்டின் இறுதிப் பந்தியில் “காமசூத்திரத்தின் பெருமையைப் பரப்புதல் அல்ல என் நோக்கம். அதனை மறைத்து வைத்தல் அறிவு மோசடியின் பாற்படும் என்பது என் கருத்து. மானிட வாழ்வியல் பற்றிய என் தேடல் எப்பொழுதும் பரந்துபட்டதாகவே இருந்தது என்பதற்கும் இதுவே சான்று. கருத்து முழுவதற்கும் வத்ஸாயநரே பொறுப்பு. தமிழ் கவிதை வடிவத்துக்கு மட்டுமே நான் பொறுப்பு” என்று எஸ்பொ பதிவு செய்துள்ளார்.
எஸ்பொன்னுத்துரையின் பாலியல் அணுகுமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இம்மொழிபெயர்ப்பு நூல்.
ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் ஸ்ரீலங்காவில் நீண்ட நெடுங்காலம் கல்விப் புலத்தில் பணிபுரிந்த எஸ்.பொன்னுத்துரை 1981இல் நைஜீரியா சென்றார். அங்கு ஆபிரிக்க தேசத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் கற்பித்தார். எட்டு ஆண்டு கால வாழ்க்கையில் ஆபிரிக்க இலக்கியங்களைக் கற்கவும் கற்பிக்கவும் முன்னாகினார். கிடைத்த ஓய்வு நேரங்களில் பிரசித்தம் பெற்ற ஆபிரிக்கப் புதினங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்தார்.
நைஜீரியாவிலிருந்து திரும்பி வந்த அவர் தடம் பதித்த ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் என்ற தொடர் வரிசையில் பதினான்கு நூல்களை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.
அவற்றில் அவர் மொழிமாற்றம் செய்த பதின்மூன்று நூல்களின் பட்டியல் இது.
01. கறுப்புக் குழந்தை 02. மக்களின் மனிதன் 03. மிரமார் 04. மானக்கேடு 05. நித்திரையில் நடக்கும் நாடு 06. ஹால 07. வண்ணத்துப் பூச்சி 08. மரணமும் மன்னரின் குதிரை வீரனும் 09. தேம்பி அழாதே பாப்பா 10. காபூலின் தூக்கணாங்குருவிகள் 11. ஜோங்கோ தெருவின் திரிகால ஞானி 12. பிள்ளைப் பராயம் 13. சாக்கே
கடைசி இருநூல்களும் அச்சில் வந்ததாயினும் நம்மவர்களிடையே அவை பகிரப்பட முன்னரே அவுஸ்திரேலியாவில் அவரின் உயிர் பிரிந்தது.
எஸ்பொவின் ஆபிரிக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் தொடர்பில் மேற்கிளம்பி வரும் பல விடயங்கள் உள்ளன.
எஸ்பொ சென்ற்.பெற்றிக்ஸ்; கல்லூரியிலும் பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி பெற்றவேளையில் ஆங்கில இலக்கியப் பிரமாண்டங்களான மில்ரன் செக்ஸ்பியர் போன்றோரின் படைப்புகளையும் ஆங்கில இலக்கியத்தையும் கற்றார். அதன் மூலம் முதலாம் உலக இலக்கியத்தை தெளிவுற விளங்கிக் கொண்டார்.
1947 இலிருந்து கம்யூனிச சித்தாத்தத்தில் நம்பிக்கை கொண்டவராக வாழ்ந்த அவர் இரண்டாம் உலக இலக்கியப் பிரபலங்களான லியோ டால்ஸ்டாய் மாக்சிம் கோக்கி ஆகியோரின் படைப்புகளில் மூழ்கித் திளைத்தார்.
மூன்றாம் உலகப் படைப்பாளியாக இருந்த அவர் 1980களில் இருந்து மூன்றாம் உலகின் ஆபிரிக்கக் கண்டத்துப் படைப்புகளைச் சுவைத்து மகிழ்ந்தார். எனவே எஸ்பொ மூவுலக இலக்கியங்களிலும் அநுபவம் பெற்றவர். மொழியாற்றலும் ஆங்கிலப் புலமையும் அவரை வழிநடத்தின. ஆபிரிக்க இலக்கியங்களை மொழிமாற்றும் செயற்பாடுகள் முளை கட்டின.
இருண்ட கண்டம் என அழைக்கப்பட்ட ஆபிரிக்காவின் இலக்கியங்கள் நான்கு வகைத்து என்பதை நைஜீரியாவில் இருந்தபோது விளங்கிக் கொண்டார்.
(அ) ஆபிரிக்க வடபுலத்து நாடுகளான எகிப்து சூடான் போன்ற மண்ணிலிருந்து அறபு மொழியில் இலக்கியங்கள் வெளிவந்தன.
(ஆ) ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த நைஜீரியா கென்யா போன்ற இடங்களிலிருந்து ஆங்கிலத்தில் படைப்புகள் வெளியாகின. அவை ஆங்கிலோபோன் இலக்கியம் என அழைக்கப்பட்டன.
(இ) கமரூன் செனகல் போன்ற நாடுகள் பிரான்சின் குடியேற்றத்தின்கீழ் இருந்ததால் பிரான்சிய மொழியில் வெளியாகி பிராங்போன் இலக்கியம் ஆகியது.
(ஈ) ஆங்கிலக் குடியேற்ற நாடுகளாயிருந்து சிறுபான்மையின ஆட்சி நடைபெற்ற சிம்பாப்வே போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர் கறுப்பு இனத்தாரின் இலக்கியங்களும் வெள்ளை இனத்தாரின் இலக்கியங்களும் வெளிவந்தன.
இவற்றையெல்லாம் உள்வாங்கி கருத்தூன்றி வாசித்தார். தனக்கென்று சில கருத்துக்களை உருவாக்கினார்.
ஆபிரிக்க நாடுகள் நம்மைப் போலவே அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்தவை. அடிமை வாழ்வில் கிடந்தவை. போராட்டத்தின் மூலம் சுதந்திரம் பெற்றவை. எனவே ஆபிரிக்க நாட்டு இலக்கியங்கள் நம்மவர் இலக்கியங்களைப் போலவே கோலம் பூண்டவை. எனவே அந்த இலக்கியங்கள் தமிழுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று துணிந்தார்.
கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் சுதந்திரத்தின் பேற்றினையும் தலைமுறை தலைமுறையாக இழந்து விட்டோம் என்ற கருதிய ஆபிரிக்க இலக்கியப் படைப்பாளிகள் அவற்றை மீளப் பெறும்வகையில் ஆவேசத்துடன் இலக்கியத்தை அணுகினர். அந்த வகையிலும் சிறப்பான இலக்கியங்கள் வெளிவந்தன. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுந்த எந்தவொரு இலக்கியத்தை விடவும் ஆபிரிக்காவின் பிராங்போன் இலக்கியம் மேன்மையானது என்பதை உறுதியாக நம்பினார்.
எனவே ஆபிரிக்க இலக்கிய நாவல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து நம்மிடம் ஒப்படைத்தார்.
எஸ்பொ என்ற ஆளுமையின் ஆங்கில நாவல்களின் தமிழ் மொழிமாற்று ஊழியம் கிடைக்கப் பெறாதிருப்பின் ஆபிரிக்கப் பெரும் நிலப்பரப்பில் விளைந்த வளமும் மேன்மையும்
விழுமியமும் கொண்ட இலக்கியங்கள் நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.
முடிவாக எஸ்.பொன்னுத்துரை கவிதை கட்டுரை சிறுகதை புதினம் உருவகக்கதை நாடகம் திறன்நோக்கு அரசியல் வரலாறு என்று எல்லாத் துறைகளிலும் வெற்றி சுவைத்தவர். மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு அத்துறையின் ஊடாக தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லையை மேலும் விசாலமாக்கினார்.
தமிழ் இலக்கியம் சர்வதேசம் நோக்கிப் பயணிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அந்தப் பயணத்திற்கு ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிகள் தோதாக அமையும் என்று கருதினார். அந்த எண்ணத்தின் விளைச்சலே இக்கட்டுரையின் பேசுபொருளாகும்.
எஸ்.பொ எழுத்துகள் அனைத்தையும் வாசிக்க ஆவல். நூல் கிடைக்கவில்லை. ஓரிரு கதைகள் வாசித்திருக்கிறேன். சலூன் கடையில் ஒரு வரை இருக்கையில் அமரவைத்து முடி திருத்துபவர் பேசும் அரசியல் கதை பிரமாதம். இப்படியாக ஓரிரு கதைகள் வாசித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்து அவரது விளக்கம் அருமையானது. புகலிடம் என்பதை விடவும் புலம்பெயர்வு என்பது நல்ல சொல். அதேபோன்று புத்தாயிரம் . நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிடும் (சலூன் கடை) கதையின் பெயர் அணி
ரிங்லோடன் உத்தியில் எழுதப்பட்ட கதை
இந்த உத்தி தமிழ் சிறுகதைப்
பரப்பில் மிகவும் அரிதாகவே பயன்பாட்டில் வரும்
குறிப்புக்கு நன்றி
இரண்டாம் விசுவாமித்திரன்