“தேடிக்கொண்டே இருக்கிறேன்” …. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
ஒன்று என்றேன் காதலியிடம்
ஆம் நம் உயிர் ஒன்றென்றாள்
இரண்டு என்றேன் என்னவளிடம்
ஓருயிர் ஈருடல் என்றாள்
மூன்று என்றேன் முறுவலித்தபடி
காதலில் எழுத்து மூன்றுதானே என்றாள்
நான்கு என்றேன் என்னை காதலித்தவளிடம்
நமக்கிருவர் வந்தால் நால்வர்தானே என்றாள்
ஐந்து என்றேன் அழகி அவளிடம்
ஐம்பெருங் காப்பியங்கள் நம் பேறு என்றாள்
ஆறு என்றேன் அன்பைத் தருபவளிடம்
ஆறே வற்றினாலும் நம் அன்பு வற்றாதென்றாள்
ஏழு என்றேன் எழிலரசியாம் அவளிடம்
ஏழ் பிறப்பும் உன்னோடென்றாள்
எட்டென்றேன் அவளைப் பார்த்து
எட்டாத் தூரத்துக்கு போகவேண்டாம் என்றாள்
ஒன்பதென்றேன் ஜாதகத்தை நம்பும் அவளிடம்
உங்களுக்கு ஒன்பதாம் இடத்தில் சனி இருக்கிறதா என்றாள்
ஆம் அதனாலென்ன என்றேன்
ஒன்பதாம் இடத்தில் சனி இருந்தால் பணியும் பதவியும் போய்விடுமென்றாள்
பத்தென்று சற்று பதற்றத்துடன் சொன்னேன்
பசி வந்தால் பத்தும் பறந்துபோம் என்றாள்
ஆம் அவளிடமிருந்த பற்றும் பறந்து போக
பசி வந்தால் நான் தாங்கமாட்டேன்
உங்கள் பணிபோனால் நான் என்ன செய்வேன் என்றவள்
பாராமுகமாய் பறந்து சென்றாள்
திடமாய் இருந்தவள் தடம் மாறிப்போக
சோதிடம் சொன்னவனை
தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
-சங்கர சுப்பிரமணியன்.