அமெரிக்கா பிரிட்டன் ரஸ்யா சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம் ஆனாலும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை
அமெரிக்கா பிரிட்டன் ரஸ்யா சீனா போன்ற நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றம் சென்றமையும் சர்வதேச அளவில் இடம்பெறும் காசா தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டசர்வதேச ஒழுங்குமுறையின் வீழ்ச்சி ஐநா போன்ற அமைப்புகளின் மீதுமக்கள் நம்பிக்கைஇழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
1948ம் ஆண்டு புதிய ஒழுங்குமுறையை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தவர்களே அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா பிரிட்டன் ரஸ்யா சீனா போன்ற நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன.
காசாவில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்கும் போது இது புலப்படுகின்றது.
ஆனாலும் இதற்கு எதிராக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளமை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் இது சர்வதேச அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
1948ம் ஆண்டின் இனப்படுகொலைகள் தொடர்பான பிரகடனம் மிகவும் அவசியமான விடயம் என்பதை தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகள் உலகிற்பு தெளிவுபடுத்தியுள்ளன.
உலக நாடுகளில் இதற்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இதற்கு பெரும் ஆதரவு காணப்படுகின்றது.
காசாவில் யுத்தநிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவதில் வழமையாக இந்த விடயத்தில் ஆர்வம் காண்பிக்கும் நாடுகளிற்கு பதில் வேறு நாடுகள் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்க விடயம்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பல்கலைகழகங்களில் காசா விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
பெருமளவு மக்களும் பல்கலைகழக மாணவர்களும் வீதியில் இறங்கியுள்ளனர்
சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் பெருமளவு மக்கள் உள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.