இலங்கை

எந்நேரமும் மது போதையில் இருப்பவரே நாட்டின் இராணுவத் தளபதி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

எந்நேரமும் மது போதையில் இருப்பவரே இந்த நாட்டின் இராணுவத் தளபதி என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புத்துறையின் அதி உயர் பதவிகளை வகித்து வரும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன மற்றும் மேஜர் ஜெனரல் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோரை சந்திம கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வயோதிப பாதுகாப்பு பிரதானிகள்

“நாட்டில் இராணுவத்தளபதி என்று ஒருவர் இருக்கின்றார். அவர் எப்போதும் மது அருந்திய வண்ணம் இருப்பவர். இராணுவத்தில் சிறந்த திறமையானவர்கள் உயர் பதவிகளை வகிக்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

இவ்வாறு வயோதிபர்களை அரசியல் ரீதியாக பதவிகளில் அமர்த்துவதனால் அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாது.

முன்னாள் ஜனாதிபதி விரட்டியடிக்கும் வரையில் இவர்கள் என்ன செய்தார்கள்? புலனாய்வுப் பிரிவினதும், வயோதிப பாதுகாப்பு பிரதானிகளும் என்ன செய்தார்கள்?

அனைவரும் 55 வயதை கடந்தவர்கள். இந்த செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போர்

இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் பலத்தினைக் கொண்டு வயோதிபர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களை சிறையில் அடைத்தார்கள். எனினும் நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டதா?

தங்களுக்கு எதிரானவர்களுக்கு மட்டும் இவர்கள் எதிராக செயற்படுகின்றனர், நாட்டில் நடக்க வேண்டியது எதனையும் இவர்கள் செய்வதில்லை.

யுத்த வீரர்கள் எனப் போற்றப்படும் படையினர் இன்று பலிக்கடாக்களாக மாற்றப்பட்டுள்ளனர், உக்ரைன் – ரஷ்ய போரில் வாடகைப்படையாக ஈடுபடுத்தப்படுகின்றனர்

பாதுகாப்புச் செயலாளர் அவன்கார்ட் பிரதானியுடன் உலகின் எத்தனை நாடுகளுக்குச் சென்றார், என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஆராய தனியான புலனாய்வுப்பிரிவு நிறுவப்பட வேண்டும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.