ரணிலுடன் இணையாவிட்டால் சஜித்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் : ஹரின் பெர்னாண்டோ
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இணைந்து செயற்படும் முடிவை சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தற்போது எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாசவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் எனவே பிரதமர் வேட்பாளர் பதவியை ரணிலுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறத்த தகவலை அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுமாறு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.
ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அவர் ஐந்து வருடங்கள் கற்றுக்கொண்டால் நிச்சயம் அடுத்த அதிபர் தேர்தலில் களமிறங்க முடியும் அவ்வாறு இல்லாமல் இம்முறை அதிபர் தேர்தலில் களமிறங்க முற்பட்டால் இறுதியில் தோல்வி ஏற்படும்.
இவ்வாறு இரு தடவைகள் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும் எனவே சஜித்துக்கு மூளை இருந்தால் அவர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.