இலக்கியச்சோலை
செம்பியன் செல்வன் எனும் இராஜகோபால் : ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை சிற்பி !! தமிழின் முற்போக்கு இலக்கிய முன்னோடி !!!
அத்தியடியிலும் , நீராவியிடியிலும் என் இலக்கிய ஆசான் செம்பியன் செல்வனுடன் அளவளாவிய தருணங்கள் ஆயிரம். ஈழத்தின் பன்முக ஆளுமை கொண்ட எழுத்துக்கலைஞன் செம்பியன் செல்வன் எனது நான்காவது கவிதை தொகுதியான 1989 இல் வெளியான “உறக்கந்தேடும் உலகிற்காய்” முன்னுரையையும் எழுதியுள்ளார்.
நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். ஈழத்தின் பன்முக ஆளுமை கொண்ட எழுத்துக்கலைஞன் செம்பியன் செல்வன் ஆவார். இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (ஜனவரி 1, 1943 – மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற எழுத்தாளர்.
பல்கலைக்கழக மறுமலர்ச்சி:
செம்பியன் செல்வன் இளம் வயதிலேயே சிறந்த வாசிப்பாளனாக இருந்தார். அத்துடன் பல்வேறு இலக்கிய சஞ்சிகைகள் பெற்று நிறைந்த வாசிப்பாளனானார். செம்பியன் செல்வன் 1960 ஆம் ஆண்டுகளில் பேராதனை பல்கலைக்கழகக் கழகத்துக்கு அனுமதி பெற்று புவியியல் சிறப்புக்கலைப் பட்டதாரியானார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இலக்கிய மறுமலர்ச்சியால் உருவாக்கப்பட்டவர்களில் செம்பியன் முக்கிய மானவர். இந்தப் பல்கலைக்கழகச் சூழலில் ஆற்றல்மிக்க எழுத்தாளர் கூட்டம் செம்பியன் செல்வனின் நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
ஈழத்தமிழ் இலக்கிய உலகின் புத்தெழுச்சிக் காலமாகத் திகழ்ந்த 1960களுக்குப் பிந்திய காலத்தில் ஒரு முக்கியமான படைப்பாளியாகத் திகழ்ந்தவர் செம்பியன் செல்வன். சிறுகதை, குறுங்கதை, உருவகக் கதை, நாவல், இதழியல், அரங்கியல், ஆய்வு, உரைச்சித்திரம் எனப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாகவும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர் இவர்.
பட்டப் படிப்பிறக்காக 1960களில் பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் இவருடன், செங்கை ஆழியான், துருவன், அங்கையன் கைலாசநாதன், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், கலாபரமேஸ்வரன், நவசோதி, குந்தவை, ஆகியோர் இணைந்து பல்கலை வெளியீடு என்னும் அமைப்பை உருவாக்கி ஆண்டுக்கொரு சிறுகதைத் தொகுதியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம், என்னும் நான்கு தொகுதிகளையும் வெளியிட்டனர். இவர்கள் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் ஒன்பது சிறுகதைகளைத் தாங்கிய ‘காலத்தின் குரல்கள்’ எனும் தொகுப்பு மார்ச் 1961 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இதில் ‘புதிய பரம்பரையின் துருவ நட்சத்திரம்’ என்னும் அவரது சிறுகதை பிரசுரமாகியது. 1962 ஜனவரியில் பன்னிரண்டு சிறுகதைகள் தாங்கிய ‘கதைப்பூங்கா’ என்னும் தொகுப்பு வெளிவந்தது. இதில் ‘பாதிமலர்’ எனும் அவ ரது சிறுகதை பிரசுரமாகியது. மேலும் 1963ஆம் ஆண்டு ஜனவரியில் பத்து சிறு கதைகளைத் தாங்கி வெளிவந்த ‘விண்ணும் மண்ணும் செம்பியன் செல்வனால் தொகுக்கப்பட்டது.
ஈழநாடு வளர்த்த சிறுகதை சிற்பி :
அறுபதுகளில் ஒரு சிறுகதைப் படைப்பாளியாகவே எழுத்துப்பிரவேசம் செய்த இவருடைய பன்முக இலக்கியச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது இவரது சிறுகதைகளே என்பது இலக்கிய உலகின் திடமான கணிப்பாகும்.
செம்பியன் செல்வன் ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய ‘ஈழத்துச் சிறுகதை மணிகள்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது ‘சர்ப்பவியூகம்’ சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாடு பத்திரிகை தனது பத்தாண்டு நிறைவினையொட்டி நடத்திய சிறுகதைப் போட்டியிலும், கலைச்செல்வி சிறுகதைப் போட்டியிலும் முதற் பரிசு பெற்றுள்ள செம்பியன் செல்வனின் ‘சர்ப்பவியூகம்’ சிறுகதைத் தொகுதி 2003ஆம் ஆண்டுக்கான அரசசாகித்திய விருதினைப் பெற்றுள்ளது. ‘அமைதியின் இறகுகள் இவருடைய இன்னொரு சிறுகதை நூல்.
குறுங்கதைகள், உருவகக் கதைகள் ஆகியவற்றிலும் திறமை காட்டியவர் செம்பியன் செல்வன். இவரின் ‘குறுங்கதைகள் நூறு’என்னும் தொகுதி வெளிவந்திருக்கிறது. உருவகக் கதைகள் தொகுக்கப்பட்ட நிலையில் போர்க்காலச்சூழலால் அழித்து போயுள்ளது என்பதும் உண்மையே.
நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு :
செம்பியன் செல்வன் நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு காத்திரமானது. இதற்கு இவரின் நாடக பிரதியாக்கங்களுக்கு கிடைத்த பரிசில்கள் கட்டியம் கூறும். 1966.1967 ஆம் ஆண்டுகளில் இலங்கை கலைக்கழக நாடக எழுத்துப் பிரதிப் படங்களில் ‘இந்திரஜித்’, ‘இருளில் எழும் பெருமூச்சுக்கள்’ இரண்டாம். முதலாம் பரிசுகளைப் பெற்றன. 1975, 1976 ஆம் ஆண்டுகளில் இலங்கைக் கலாசாரப் பேரவையின் நாடக எழுத்துப் பிரதிப் படங்களில் ‘சின்ன மீன்கள்’, ‘எரியும் பிரச்சினைகள் முதற்பரிசுகளைப் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
செம்பியன் செல்வனின் ‘மூன்று முழு நிலவுகள்’ என்னும் நாடக நூல் 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. செம்பியனின் மூன்று முழு நிலவுகள் நாடகம் மகத்தான வெற்றி பெற்றதுடன், மேடைக்கும், வாசினைக்கும் ஒப்பவே உயிரூட்டும் உரைநடையும், நாடக மறை கவர்ச்சியும் கொண்ட நல்ல நாடகம் என்று பலராலும் பாராட்டை பெற்றது.
ஈழநாடு தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய இலக்கியப் போட்டியில் செம்பியன் செல்வனின் ‘விடிய இன்று நேரமிருக்கு’ என்னும் ஓரங்க நாடகம் முதலில் இடம்பெற்றது. இந்த நாடகத்தில் யாழ்ப்பாணத்துச் சமூகம் ஒன்றினை நன்கு படம் பித்துக்காட்டுகிறார். ஏழைக் குடும்பமொன்றின் ஆசா பாசங்களையும், அவலங்களையும் இந்த நாடகம் சித்தரிக்கிறது. ஈழநாடு பரிசு பெற்ற நான்கு நாடக பிரதிகளும் ‘விடிய இன்று நேரமிருக்கு …’ எனும் புத்தகமாக ஜனவரி 1971ஆம் ஆண்டு ஈழநாடு வெளியீடாக வந்தது.
செம்பியன் செல்வன் படைப்புகள் :
சர்ப்பவியூகம் – சிறுகதைத்தொகுதி
அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்)
குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்)
கானகத்தின் கானம் – நாவல்
நெருப்பு மல்லிகை (நாவல்)
விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்)
மூன்று முழு நிலவுகள் (நாடகம்)
ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்)
நாணலின் கீதை (தத்துவம்)
மண் வாசனை வீசிடும் நாவலாசிரியர் :
செம்பியன் செல்வனின் ‘நெருப்பு மல்லிகை’ என்ற நாவலும் மிக உன்னத படைப்பாகும். இந்த நாவல் அதிசிறந்த பிரதேசப் பரிசு நாவல் ஆகும். வீரகேசரியின் 73 ஆவது பிரசுரமாக நவம்பர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவலின் கருவூலத்தைப் பற்றி அவர் குறிப்புரையில் ‘பிரதேச நாவல்களில் கிராமியம் சார்ந்தவை ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெறியில் இயங்கும் தன்மைய தனித்துவ மானவை.
‘நெருப்பு மல்லிகை’ நாவல் வீரகேசரி பிரதேச நாவல் போட்டியில், 81 நாவல்களிடையே கலாநிதி பொன். பூலோகசிங்கம், திரு.இ.இரத்தி னம். திரு.மு.பொன்னம்பலம் ஆகியோரால் ஏகமனதாக முதலாவதாகத் தெரியவருகிறது. அதிசிறந்த பிரதேசப் பரிசு நாவல் என இரட்டை முதல் பரிசு பெற்றது இந்த நாவல்.
போர்க்கால சூழலில் விடியலைத் தேடும் வெண்புறாக்கள்’ எனும் நாவலை செம்பியன் செல்வன் ஈழமுரசில் தொடராக எழுதிவந்தார். இது 300 பக்கங்கள் கொண்ட நூலாக அச்சாகியிருந்தது. 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக் காரணமாக ‘விடியலைத் தேடும் வெண்புறாக்கள்’ நாவலின் அச்சான பிரதிகள் அழிந்து போயின.
‘நிழல்கள்’ 1963 ஆம் ஆண்டுகளில் சுதந்திரனில் செங்கை ஆழியானும், செம்பியன் செல்வனும் ஒருவர் மாறி ஒருவராக எழுதிய தொடர்தான் ‘நிழல்கள்’. இந்த இருவரும் இணைந்து எழுதிய ‘நிழல்கள்’ யாழ்ப்பாண சமூகத்தின் முதிரா இளைஞர்களின் மனப் போராட்டங்களைச் சுவையாகச் சித்தரிக்கும் நாவல், செங்கை ஆழியான் எழுதிய அத்தியாயங்கள் சுவைப்படக் கதையைச் சொல்லி நகர்த்துவனவாக அமையும். செம்பியன் செல்வனின் அத்தியாயங்கள் கருத்துக்களைச் சொரிந்து நாவலின் இறுக்கத்தினைப் பேணியுள்ளன. மேலும் செம்பியன் செல்வன் ‘நேரங்கள்’ ‘கர்ப்பக்கிரகம்’ஆகிய நாவல்களையும் படைத்துள்ளார்.
வரலாறு படைத்த இதழாசிரியர்:
செம்பியன் செல்வன் இதழியியல் துறையிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். 1964 – 1970 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ‘விவேகி’ சஞ்சிகையின் இணை ஆசிரியராக இருந்துள்ளார்.
1966லிருந்த வெளிவரத்தொடங்கிய விவேகி குறுகிய காலத்தில் ஆற்றியுள்ள பணிகள் வரலாற்றுமுக்கியத்துவம் கொண்டவை. விவேகி மற்றும் அமிர்த கங்கை ஆகியவவை இவருடைய ஆசிரியத்துவத்தில் வெளிவந்து வரலாறு படைத்த இதழ்கள். ஈழத்தமிழ் சிறுகதை மணிகள் இவர் பதிப்பித்த நமது சிறுகதை முன்னோடிகள் பற்றிய வரலாற்று ஆய்வு நூலாகும்.
புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். விவேகி 1970களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது தரமான இலக்கியபடைப்புக்களை வெளியிட்டது.
மேலும் ஈழமுரசு தினசரியின் மாதாந்த இலக்கியச் சஞ்சிகையாக ‘அமிர்த கங்கை’ 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘அமிர்தகங்கை 12 இதழ்களே வெளிவந்தது. ஆனால் இந்த இலக்கிய சஞ்சிகை இன்றும் இலக்கிய உலகில் பேசப்படுகின்ற தரமுடையதாக இருக்கிறது.
இந்தச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர் செம்பியன் செல்வன். இங்கு இவரது பணி ஒரு இலக்கிய சஞ்சிகை எப்படித் தரமுடையதாக வெளியிட வேண்டும் என்பதை இதழியல் உலகுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தமையே ஆகும்.
அமிர்த கங்கை இதழ் யாழ்பாணத்தில் இருந்து 80 களின் நடுப்பகுதியில் வெளிவந்தது. அமிர்த கங்கை ஆசிரியராக செம்பிய செல்வன் விளங்கினார். சிறுகதை, கவிதை, கட்டுரை, செங்கை ஆழியான் இந்த தொடர் நாவல், வாசகர் கடிதங்கள், நகைசுவை துணுக்குகள் இதில் வெளியாகின.
கல்வி பணியில் செம்பியன் செல்வன்:
ஒரு புவியியல் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய செம்பியன் செல்வன் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியிலும் செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதன்பின்னர் யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியின் அதிபராக சிலகாலம் பணியாற்றிய பின் யாழ்ப்பாணம் கோட்டக்கல்வி அதிகாரியாகப் பதவியேற்று ஓய்வு பெறும்வரை கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
1963 ஆம் ஆண்டு ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களை கொழும்புத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தமிழறிஞர் கா.பொ.இரத்தினம் அவர்களுக்குக் கொண்டு விருது ஆடை போர்த்திக் கௌரவித்தபோது செம்பியன் செல்வனும் கௌரவிக்கப் பட்டார்.
அப்போது அவருக்கு வயது இருபது ஆகும். 2003 ஆம் ஆண்டு இவர் தனது மணிவிழாவினைக் கொண்டாடிய போது யாழ். கத்தோலிக்க கலைஇலக்கிய வட்டம் ‘இலக்கிய வித்தகர்’ என்னும் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது.
வாடைக்காற்று திரைப்படம்:
வீரகேசரி வெளியீடான செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று’ நாவலை மூலக் கதையாகக் கொண்டு, அவரது அனுமதியுடன் செம்பியன் செல்வன் திரைக் கதை உரையாடல் எழுத்துப் பிரதியை தயாரித்தார். இந்த எழுத்துப் பிரதியை பின்னர் திரைப்படமாக தயாரித்தனர்.
செங்கை ஆழியான் எழுதிய வாடைக் காற்று திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனங்களை எழுதிய செம்பியன் செல்வன் இலங்கை அரச திரைப்படக் கூட்டுத்தாபனம் ஈழத்திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக A தரமுடையதாகத் தெரிந்து ரூபா 1.84,000 மான்யம் வழங்கியது. இவர் தொடர்ந்தும் ஈழத்திரைப்படக் குறும்படங்களிலும், அவை தொடர்பான வழிகாட்டல் விரிவுரைகளிலும் கணிசமான பங்களிப்புச் செய்துள்ளார்.
ஈழத்து நவீன இலக்கிய உலகின் ஈடிணையற்ற இலக்கியவாதியாகத் திகழ்ந்த நாட்டுப் பற்றாளர் செம்பியன் செல்வன் மே 20, 2005இல் காலமானார். ஈழத்தின் இன்றைய படைப்பாளர்களுள் செம்பியன் செல்வன் மிகவும் வெற்றிகரமான காத்திரமான இலக்கிய முத்திரையை பதித்துள்ளார் என்பது உண்மையே.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா