“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 30 …. – செங்கதிரோன்.
இன்னொருநாள் காலையிலே ஆரம்பித்துக் காரைதீவு – அட்டப்பள்ளம் – திராய்க்கேணி – மீனோடைக்கட்டுக் கிராமங்களுக்குச் சென்று அங்கு பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பிரச்சாரவேலைகள் முடிய நடுநிசியாகிவிட்டது. நடுநிசியைத் தாண்டிவிட்டாலும்கூடப் பொத்துவில் போய்ச் சேருவது என்ற தீர்மானத்துடன் பொத்துவில் நோக்கிய இரவுப் பயணம்.
கனகரட்ணத்தின் வெள்ளைநிற ‘வக்ஸோல்’ காரில் அவரும் கோகுலனும்தான். கனகரட்ணம்தான் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் முன்சீட்டில் கோகுலன் அமர்ந்திருந்தான்.
கார் தம்பட்டையைக் கடந்து பெரியமுகத்துவாரம் தாம்போதியைத் தாண்டி தம்பிலுவில் கிராமத்தின் வடக்கு எல்லையில் நுழையும்போது வைகறை நேரம்.
பூமி மடந்தை போர்த்தியிருந்த இருட்போர்வை இன்னும் முற்றாக விலகவில்லை. தம்பிலுவில் கிராமத்தில் அமைந்திருந்த தருமலிங்கத்தின் வீட்டை அண்மிக்கும்போது முன்னால் சுமார் நூறுயார் தூரத்தில் பெருங்கூட்டம் ஊர்வலமாக முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. ஒலிபெருக்கிச் சத்தமும் கேட்டது. கோகுலன் காதைக் கொடுத்தான்.
“ஆற்றோரம் சிறாம்பி கட்டி அங்கே நின்று படைபொருதி
தோற்றுவாறான் வடசேரியான் துடைப்பங்கட்டால அடியுங்கடி”
எனும் கொம்புமுறிப் பாடல் வரிகள் கோகுலனின் காதில் தெளிவாக விழுந்தன.
கனகரட்ணத்திடம் காரை உடன் நிறுத்தச் சொன்னான் கோகுலன்.
தம்பிலுவில் கண்ணகை அம்மன் கோயில் வருடாந்த கண்ணகியம்மன் குளிர்த்திச் சடங்கும் கொம்புமுறி விளையாட்டும் முடிந்து வீதியில் வடசேரி – தென்சேரியினர் கொம்புமுறிப் பாடல்களைப் பாடிக்கொண்டுவரும் வீதி ஊர்வலக் கூட்டம்தான் அது என்பதைப் புரிந்துகொள்ளக் கோகுலனுக்கு நேரம்
எடுக்கவில்லை. ஊர்வலத்தில் வருபவர்களில் பெரும்பான்மையினர் தருமலிங்கத்தின் ஆட்கள்தான். அதுவும் முன்பொருநாள் காரை மறித்துக் கலாட்டா பண்ணியதுடன் கண்ணகியம்மன் கோயில் வளவுக்குள் நின்று மேளத்தைத்தட்டியும் கல்லெறிந்தும் கூட்டத்தைக் குழப்பியவர்களும் அக்கூட்டத்தில் இருப்பார்களென்பது கோகுலனின் கணிப்பு. அதுவும் தருமலிங்கத்தின் வீட்டை அண்மித்த இடம். தம்பிலுவில் கிராமத்தின் முக்கியஸ்தர்களான ‘மணியத்தார்’ என அழைக்கப்பெற்ற கண்ணகையம்மன் கோயில் வண்ணக்கர் – திருக்கோவில் கிராமசபையின் முன்னாள் தலைவர் சங்கரப்பிள்ளை – துரைசிங்கம் – சுந்தரமூர்த்தி – வேலாச்சிப்போடி – ஆர்.டி.ஓ.குமாரசாமி எனப்பலரும் தருமலிங்கத்தை ஆதரித்தே பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நேரம்.
கூட்டத்தில் வருபவர்கள் நிச்சயமாகக் காரைமறித்துப் பிரச்சினைப்படுத்துவார்கள். அதுவும் அதிகாலை இருள் விலகாத நேரம். அவர்களை எதிர்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுவதே புத்திச்சாலித்தனமானது என்றெண்ணினான் கோகுலன்.
பிரதான வீதியிலிருந்த தருமலிங்கத்தின் வீட்டைக் கடந்ததும் அதன் அருகில் அமைந்திருந்த விவசாய விளைவுப் பெருக்கக் குழு நிலையத்தை – ‘ஏ.பி.சி’ ஐத் தாண்டி அதன் ஓரமாக இடதுபுறம் பிரதான வீதியிலிருந்து இடதுபுறமாகக் ‘கிறவல்’ குறுக்கு வீதியொன்று பிரிந்து ஊருக்குள் செல்கிறது.
அக்குறுக்குவீதியைக் கனகரட்ணத்திற்குச் சுட்டிக்காட்டி “அதுக்குள்ள விட்டுக் காரத் திருப்புங்க” என்றான் கோகுலன்.
கனகரட்ணம் மின்னல் வேகத்தில் இயங்கினார்.
கார் குறுக்கு வீதியுள் நுழைந்து திரும்புவதைக் கண்டதும் ஊர்வலத்தில் முன்னால் வந்த கூட்டமொன்று “நில்லுங்கடா” என்று சத்தமிட்டுக் கொண்டு காரைநோக்கி ஓடிவருவது தெரிந்தது.
திரும்பிய கார் வேகமாகச் சென்று தம்பட்டையில் கனகரட்ணத்தின் ஆதரவாளரான வேலுப்பிள்ளை என்பவரின் வீட்டில் முன் தரித்தது.
அவரது வீட்டில் தங்கி நன்றாக விடிந்ததும்தான் பொத்துவில் நோக்கிய பயணம் தொடர்ந்தது.
மற்றொருநாள்,
தம்பிலுவில் சீனித்தம்பி ஆசிரியர் காலையிலேயே கனகரட்ணத்தைச் சந்திக்கப் பொத்துவில் வந்திருந்தார். தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு அருகில் பிரதான வீதியையொட்டி அமைந்திருந்த சீனித்தம்பி ஆசிரியர் வீடுதான் கனகரட்ணத்தின் தேர்தல் அலுவலகமாக அப்பிரதேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் பின்பகுதியில் அவரது குடும்பம் குடியிருந்தது. முன்பகுதி தேர்தல் அலுவலகமாகப் பாவிக்கப்பட்டது.
கோகுலன் கனகரட்ணத்தின் பொத்துவில் வாசஸ்தலத்திற்குக் கோமாரியிலிருந்து அன்று காலையிலேயே சென்றிருந்தான். அப்போது வீட்டின் வெளி ‘விறாந்தை’யில் சாய்மனைக் கதிரையில் வழக்கம்போல் கனகரட்ணம் சாய்ந்திருக்க பக்கத்தில் நாற்காலியிலமர்ந்தபடி கனகரட்ணத்தின் காதருகில் மெதுவாக ஏதோ கூறிக்கொண்டிருந்தார் சீனித்தம்பி ஆசிரியர். அவரது முகம் சற்றுக் கலவரமடைந்திருந்தது. அன்றிரவு சீனித்தம்பி ஆசிரியரின் வீட்டுக்குத் தருமலிங்கத்தின் ஆட்கள் குண்டெறிய உள்ளார்களாம் என்பதுதான் அவரது கலவரத்திற்குக் காரணம் என்பது பின்னால் அவரோடு பேச்சுக்கொடுத்தபோது கோகுலன் தெரிந்து கொண்டான். அன்றைய பகல்பொழுதைப் பொத்துவிலிலேயே தனது அக்காமார்களின் வீட்டில் கழித்தான் கோகுலன்.
அன்று மாலை கனகரட்ணம் முன்னால் அமர்ந்திருக்க அவரது காரை இராஜகோபால் ரி.ஏ. செலுத்திவர பின்னால் ‘அரபாத்’ என்று அழைக்கப்படும் பொத்துவில் முஸ்லீம் இளைஞனும் கோகுலனும் கனகரட்ணத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த கனகரட்ணத்தின் மைத்துனர் சுந்தரமும் அமர்ந்திருந்தார்கள். தம்பிலுவிலுக்கு வரும்வழியில் கோமாரியில் கனகரட்ணத்திற்கு உறவு முறையில் தம்பியான கோமாரி உபதபால் அலுவலகப் ‘போஸ்ற்மாஸ்ரர்’ ராஜூ என அழைக்கப்படும் இராஜவரோதயத்தையும் ஏற்றிக்கொண்டு தம்பிலுக்கு வந்துசேர்ந்தார்கள். பொத்துவிலிருந்து புறப்படும்போதே காருக்குள் எடுத்துப்போட்ட கனகரட்ணத்தின் துவக்கும் வரும்வழியில் ராஜூ போஸ்ற்மாஸ்ரர் எடுத்துவந்த துவக்கும் ஆக இரண்டு துவக்குகள் இருந்தன.
அரபாத்தின் கையில் ஒரு துவக்கும் ராஜூ போஸ்ற்மாஸ்ரரின் மடியில் மறு துவக்குமாக சீனித்தம்பி ஆசிரியர் வீட்டு முற்றத்தில் பரவியிருந்த வெள்ளைமணல் பரப்பில் கனகரட்ணமும் உடன் அமர்ந்திருக்கத் தரையில் அமர்ந்தபடி இராஜகோபால் ரி.ஏ. – அரபாத் – ராஜூ போஸ்ற் மாஸ்ரர் – கோகுலன் – சீனித்தம்பி ஆசிரியர் – கனகரட்ணத்தின் மைத்துனர் சுந்தரம் எல்லோரும் கதைத்துக் கொண்டு மறுநாள் காலைவரை விழித்திருந்தனர். சீனித்தம்பி ஆசிரியரின் மனைவியார் அவ்வப்போது விடியவிடியத் தேனீர் போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
தருமலிங்கத்தின் ஆட்களுக்கு இவர்கள் வந்திருக்கும் தகவல் எட்டியிருக்கவேண்டும். ஒரு குருவியும் அன்றிரவு அப்பக்கம் தலைகாட்டவேயில்லை.
ஒருநாள் கனகரட்ணத்தின் தமையனார் இராஜரட்ணத்தின் ‘மொரிஸ் மைனர்’ காரைக் கோமாரிக்கு அனுப்பியிருந்தார் கனகரட்ணம். கோகுலனைக் கூட்டிவரும்படி காரைச் செலுத்தி வந்த அவரது மைத்துனர் சுந்தரம் வியளம் சொன்னார். கோகுலன் உடன்புறப்பட்டுச் சுந்தரத்துடன் பொத்துவில் போய்ச் சேர்ந்தான்.
கோகுலனை உள்ளே அறைக்குள் அழைத்துச் சென்ற கனகரட்ணம்,
“தம்பி! கோகுலன்! என்னைத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளராகப் போட அன்று கல்முனை ரெஸ்ற் ஹவுஸ்சில வைத்து விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து கதிரவேற்பிள்ளை எம்.பி. யிடம் விருப்பம் தெரிவித்தவர்தானே டாக்டர் பரசுராமன்” என்று நிறுத்தினார்.
“ஓம்! அதற்கென்ன இப்போது?” என்ற கேள்விக்குறியுடன் கனகரட்ணத்தை நோக்கினான் கோகுலன்.
“இப்போது மனம்மாறித் தருமலிங்கத்திற்கு வேலை செய்கிறாராம். அது அவரின் விருப்பம். அதப்பற்றி நான் கதைக்கக் கூப்பிடல்ல. நான் மது அருந்திவிட்டுக் குடிவெறியில காரதீவு நூலகத்துக்குள்ள போய் அங்க இருந்த ஒருவரத் தாறுமாறாகப் பேசியதாக ஒரு அப்பட்டமான பொய்யை மற்றவர்களிட்ட பரப்புவதாகக் கேள்வி. நான் அவரோடு பேசுவதைவிட நீ அவரிட்டப் போய் இந்த விசயத்தக் ‘கிளியர்’ பண்ணி இனிமேல் இப்படியான பொய்யான அவதூறுகளை என்னைப்பற்றி கூறாதபடி செய்து போட்டு வா தம்பி. சுந்தரத்தைக் கூட்டிக் கொண்டு அந்தக் காரிலேயே காரதீவுக்குப் போய்ற்று வா” என்றார்.
கனகரட்ணம் சொன்னது உண்மையாக இருக்குமாயின் டாக்டர் பரசுராமன் ஏன் மனம் மாறினார் என்பது கோகுலனுக்கு விளங்காத புதிராயிருந்தது.
காரைதீவில் பரசுராமன் வீட்டையடைந்ததும் சுந்தரத்தைக் காரிலேயே இருக்கும்படி சொல்லி விட்டுக் கோகுலன் மட்டும் காரிலிருந்து இறங்கி டாக்டர் பரசுராமன் வீட்டினுள்ளே சென்றான். வீட்டு முன் மண்டபத்தில் இருந்த பரசுராமன் கோகுலனைக் கண்டு “வாங்க தம்பி! இரிங்க” என்றார்.
அவரும் கோகுலனுமே தனியே இருந்ததால் வேறு ஆட்கள் வருவதற்கு முன்னர் பேசிமுடிக்க வேண்டுமென்று எண்ணிய கோகுலன் தாமதியாது பேச்சைத் தொடங்கினான்.
“உங்களோட கொஞ்சம் அதுவும் நீங்க மட்டும் தனியா இருக்கிறதால பேசலாமா?” என்றான் கோகுலன்.
“இதென்ன தம்பி! நாம சொந்தக்காரர். பேசுவதற்கு என்ன? பேசத்தானே வந்த நீங்க. பேசுங்களன். இப்போதைக்கு ஒருத்தரும் வரமாட்டார்கள்” என்றார் பரசுராமன் இலேசாகப் புன்னகைத்தவாறே.
“உங்களுக்கு நான் சொல்லத் தேவயில்ல எனக்கு வயதுக்கு மூத்தவர். உங்களுக்கு எல்லாம் தெரியும். இருந்தும் அவற்ற இப்ப ஞாபகப்படுத்திப் பேசோணும் போலரிக்கி. நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்தவை. பின்னாளில எனக்கும் உங்களப்போல மூத்தாக்கள் சொல்லித்தான் தெரிய வந்திது” என்ற பீடிகையோடுதான் கோகுலன் பேச்சை ஆரம்பித்தான்.
1959 இல் இலங்கையில் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் நடப்பதற்கு முன்னர் 1946 இலிருந்து 1959 வரை காரைதீவு – சம்மாந்துறை எல்லாம் அப்போதைய கல்முனைத் தொகுதியின் கீழ்தான் இருந்தன. அப்போதைய பட்டிருப்புத் தொகுதியின் எல்லைகள் பெரிய நீலாவணை – மருதமுனையை உள்ளடக்கியதாகக் கல்முனைத் தாளவெட்டுவான்வரை பரவியிருந்தன. அப்போது அம்பாறைத் தொகுதியோ அம்பாறை மாவட்டமோ உருவாகி இருக்கவில்லை. கல்முனை, பொத்துவில், பட்டிருப்புத் தொகுதிகள் தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழேயே இருந்தன. தற்போதைய அம்பாறை மாவட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாக இருந்தது. இந்தத் தென்பகுதியில்தான் அப்போதைய கல்முனை, பொத்துவில் தொகுதிகள் அடங்கியிருந்தன.
1947 ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அப்போதைய கல்முனைத் தொகுதியில் காரைதீவைச் சேர்ந்த ‘ஆனக்கிளாக்கர்’ என அழைக்கப்பெற்ற கணபதிப்பிள்ளை சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஆனால் அப்போதைய கல்முனைத் தொகுதி வாழ் தமிழ் மக்கள் ஆனக்கிளாக்கருக்கு வாக்களிக்காமல் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் எம்.எஸ் காரியப்பருக்கு, வாக்களித்து அவரையே வெல்ல வைத்தார்கள்.
அதேபோல்தான் 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அப்போதைய கல்முனைத்தொகுதியில் பிரான்சிஸ் சேவியர் லங்காசமஜமாஜிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் அப்போதைய கல்முனைத் தொகுதிவாழ் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் தமிழரசுக்கட்சி வேட்பாளராக நிறுத்திய எம்.எஸ் காரியப்பருக்கே வாக்களித்து அவரையே வெல்ல வைத்தார்கள்.
1956 ஆம் ஆண்டுத் தேர்தலில்தான் அப்போதைய பொத்துவில் தொகுதியிலே தமிழரசுக்கட்சி வேட்பாளர் முஸ்தபாவும் வென்றவர்.
1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் பொத்துவில் – நிந்தவூர் – கல்முனை – அம்பாறை ஆகிய தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. சம்மாந்துறை பொத்துவில் தொகுதியின் கீழ் கொண்டுவரப்பட்டது. பெரியநீலாவணை, மருதமுனை என்பன கல்முனைத் தொகுதியின் கீழ் கொண்டுவரப்பட்டன. காரைதீவு,
அக்கரைப்பற்று என்பன நிந்தவூர்த் தொகுதியின் கீழ்வந்தன. அம்பாறையிலிருந்து சிங்களவரொருவரும் மற்றைய பொத்துவில் – நிந்தவூர் – கல்முனை ஆகிய மூன்று தொகுதிகளிலுமிருந்தும் முஸ்லீம்களுமே எம்.பி யாக வரமுடிந்தது. இதனால், 1947 இலிருந்து 1977 வரை அம்பாறை மாவட்டத் தமிழர்கள் முப்பது வருடங்கள் தங்களுக்கென்று ஒரு தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமலே இருந்துள்ளார்கள். 1961 இல் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப்பெற்று அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், அதிர்ஸ்டவசமாக 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய பொத்துவில் – சம்மாந்துறை – கல்முனை – அம்பாறை ஆகிய நான்கு தொகுதிகளிலும் பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்துவர் தொகுதியாக ஆக்கப்பட்டுத் தமிழர் ஒருவரும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் தவறவிட்டுவிடக் கூடாதல்லவா? என்று கோகுலன் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அது காலவரையிலான அரசியல் வரலாற்றையே கூறிமுடித்தான்.
கோகுலன் கூறிமுடித்த அத்தனை விடயங்களையும் அமைதியாகச் செவிமடுத்த பரசுராமன்,
“நீங்க சொன்னது எல்லாம் உண்மதான் தம்பி! எனக்கும் அவை தெரியும். இப்ப நான் என்ன செய்யோணும் தம்பி” என்றார்.
கோகுலன் தன்னைக் கனகரட்ணம் அவரிடம் அனுப்பிய நோக்கத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னான்.
“நான் அப்படியொண்டும் கனகரட்ணத்தப்பத்திப் பிழயாக ஒருடத்திலும் சொல்லல்ல தம்பி” என்றார் பரசுராமன்.
“தெரியாதா. தேர்தல் காலம். ஆரும் உங்கள்ல பொறாம கொண்டாக்கள் அவரிட்டப் போய் கோள் மூட்டியிருப்பானுகள். அப்படிக் காரைதீவு நூல்நிலையத்தில் ஒரு சம்பவமும் நடக்கல்ல. கனகரட்ணம் காரைதீவு நூல்நிலையப்பக்கம் போனதேயில்ல. ஆரோ கத கட்டியுட்டிருக்கானுகள். நீங்க அப்பிடிப் பிழையாகச் சொல்லல்ல எண்டபடியால விசயம் ‘கிளியர்’ ஆகித்து. நான் வந்த பிரச்சினையும் தீர்ந்த மாதிரி. நான் கனகரட்ணத்திற்கு போய்ச் சொல்லுறன்” என்றான் கோகுலன்.
“ஓம்! தம்பி. கட்டாயம் கனகரட்ணத்திடப் போய்ச்சொல்லுங்க. இல்லாட்டி அவரும் என்னப் பிழயாக நினைப்பாரு. அவரோட எனக்கொரு மனஸ்தாபமும் இல்ல” என்று முடித்தார் பரசுராமன்.
பரசுராமனின் பதிலால் கோகுலன் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தாலும்கூட, அவர் தருமலிங்கத்திற்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகள் செய்வதாகக் கனகரட்ணம் கூறிய கூற்று கோகுலனின் நெஞ்சை நெருடிக்கொண்டிருந்தது. அதைப் பரசுராமனிடம் நேரடியாகக் கேட்டுவிடலாமா என்று எண்ணியவன் நல்ல சூழ்நிலையைக் கெடுத்துவிடக்கூடாது என்பதால் அதனைத் தவிர்த்துக்கொண்டு பரசுராமனுக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்துவிட்டு வெளியே வரும்போது பரசுராமன் வீட்டுக் ‘கேற்’றடியில் வந்துநின்ற காரிலிருந்து தருமலிங்கம் இறங்குவதையும் அவருடன் பின்னால் சில காரைதீவு ஆட்களும் ‘கேற்’றால் நுழைவதையும் எதிர்கொண்டான்.
தர்ம சங்கடமான சூழ்நிலை,
கோகுலனைக் கண்ட தருமலிங்கம் ஒப்புக்காகச் சிரித்துக்கொண்டு “என்ன தம்பி! சுகமாயிருக்கின்றீர்களா?” என்றார்.
“கோகுலனும் ஒப்புக்கு “ஓம் அண்ணன்” என்று கூறிச் சிரித்துவிட்டு அவருக்குப் பின்னால் வந்தவர்கள் காரைதீவைச் சேர்ந்த தனது உறவினர்களென்பதால் அவர்களையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு அவர்களிடம் “போய்ற்று வாறன்” என்று கூறிவிட்டுக் காரில் வந்து ஏறிச் சுந்தரத்துடன் பொத்துவில் திரும்பினான்.
பொத்துவிலுக்குத் திரும்பிப் பயணிக்கும்போது டாக்டர் பரசுராமன் வீட்டுக்குத் தருமலிங்கம் சென்ற விடயமே மனதைக் குடைந்து கொண்டிருந்தது. பரசுராமன் தருமலிங்கத்தை ஆதரித்து வேலை செய்கிறார் என்ற விடயம் பாதி உண்மையாகிவிட்டதை உணர்ந்தான். எதற்கும் அதனை இன்னொரு தடவை பரசுராமனைச் சந்தித்துப் பேசி ஊர்ஜிதம் செய்துகொண்டு அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற வைராக்கியம் அவன் மனதில் வேரூன்றியது.
பொத்துவில் சென்று நடந்தவை எல்லாவற்றையும் கனகரட்ணத்திடம் ஒப்புவித்தான். தருமலிங்கத்தைக் கண்டவிடயத்தைக் கூறும்போது அவருடைய மைத்துனர் சுந்தரமும் பக்கத்தில் வந்து நின்று அவரும் தான் அவதானித்த விடயங்களையும் சொன்னார். கனகரட்ணம் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாரே தவிர எந்தப் பதிலோ – எதிர்வினையோ காட்டவில்லை.
கோகுலன் அன்றிரவே கல்முனை திரும்பினான்.
(தொடரும் …… அங்கம் – 31)