சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வு பெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் காலமர்டிடம் (Agnes Callamard) வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திற்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் முல்லைத்தீவில் (Mullaitivu) நேற்று (17) நடைபெற்றுள்ள சந்திப்பொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் எமக்கான நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் உள்நாட்டு ஆணைக்குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதை சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளரிடம் எடுத்துக்கூறியுள்ளோம்.
இந்நிலையில், சர்வதேச நீதிபதிகளின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்ற பொறிமுறையில் உள்ளக விசாரணை மூலம் நீதியைப் பெற்றுத்தருவது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் எம்மிடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
இருப்பினும் நாம் அதை மறுத்துள்ளதுடன், சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், எமக்கு புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்கள், போராட்டங்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதேவேளை தற்போது தமிழர் பகுதிகளில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாதிப்பு நிலை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டதாகவும்” வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.