“ஆலமரம் நிற்கிறது” …. கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
அழகான ஆலமரம்
கிளைவிட்டு நின்றதங்கே
விழுதெல்லாம் விட்டுஅது
வேரோடி நின்றதங்கே
ஆலமர நிழல்தேடி
அனைவருமே வருவார்கள்
வேலையில்லா நிற்போரும்
விரும்பி வந்திருப்பார்கள்
காலைமாலை என்றின்றி
காளையரும் வருவார்கள்
சேலையுடன் பெண்கள்வந்து
சிரித்து விளையாடிடுவர்
நாலுமணி ஆனவுடன்
ஆளரவம் கூடிவிடும்
ஓடிடுவார் ஆடிடுவார்
உல்லாசம் கூடிவிடும்
பந்து விளையாடிடுவர்
சிந்து கவிபாடிடுவர்
கெந்தி அடித்துநிற்பர்
கிட்டிப் புள்ளும்ஆடிடுவர்
பெரியவரும் வருவார்கள்
சிறியவரும் வருவார்கள்
பேசாமல் ஆலமரம்
பெருமையுடன் வரவேற்கும்
விழுது பற்றியாடிடுவர்
மேல்மரத்தில் ஏறிடுவார்
அழுங்குழந்தை ஆடுதற்கு
அங்கூஞ்சல் கட்டிடுவார்
சீட்டு விளையாடிடுவர்
சிரித்து விளையாடிடுவர்
ஆர்ப்பரித்துச் சிறுவரெலாம்
அங்கங்கே ஓடிநிற்பர்
வேர்க்கடலை கொறிப்பாரும்
வெற்றிலையை மெல்வாரும்
பாற்பொருளை உண்பாரும்
பார்த்திடலாம் மரநிழலில்
ஆயிரம் பேரமர
ஆலமரம் நிழலைத்தரும்
அனைவருமே இளைப்பாறி
அகமகிழ்வு பெற்றிடுவர்
சித்திரை பிறந்துவிட்டால்
எத்தனையோ கொண்டாட்டம்
நித்திரையே கொள்ளாது
நீண்டகூத்து நடக்குமங்கே
வடமோடி தென்மோடி
வகைவகையாய் கூத்தங்கே
பாய்விரித்துப் பார்த்தபடி
பார்த்திடுவார் ஊரார்கள்
தேனீர்க்கடையும் வரும்
தித்திப்புக்கடையும் வரும்
அப்பம்சுட்டு விற்கின்ற
ஆச்சியும் வந்திடுவார்
கடலையும் வறுப்பார்கள்
கச்சானும் வறுப்பார்கள்
கமகமக்கும் வாசனையால்
களைகட்டும் ஆலையடி
குடும்பமெலாம் ஒன்றாக
குதூகலமாய் இருப்பார்கள்
குழந்தைகளும் குறும்புசெய்து
குதூகலத்தில் மிதப்பார்கள்
அமைதியாய் பார்த்துநிற்கும்
அதையெல்லாம் ஆலமரம்
ஆர்வந்து போனாலும்
ஆலமரம் அகமகிழும்
போரொன்று வந்ததனால்
ஊரெல்லாம் ஓடிற்று
யாருமே ஊரிலில்லை
ஊரிப்போ உறங்கிறது
களைகட்டி நின்றவிடம்
நிலையிழந்து நிற்கிறது
ஆருமே வருவதில்லை
ஆலமரம் நிற்கிறது
ஆலமரம் மட்டுமிப்போ
அப்படியே இருக்கிறது
ஆலடியைப் பார்ப்பதற்கு
அழுகைதான் வருகிறது
மரம்மட்டும் பேசிவிடின்
வக்கிரங்கள் தெரிந்துவிடும்
மரமாக இருப்பதனால்
வக்கிரங்கள் தொடர்கிறது
ஆலமரம் அழுதுவிடின்
ஆறாக ஆகிவிடும்
அதுமரமாய் நிற்பதனால்
நாமழுது நிற்கின்றோம்
அருமையான கவிதை ஐயா.ஆலமரத்தடி அன்றும் இன்றும். … மகிழ்ச்சியும் துன்பமும்…
பெருமூச்சு விடத் தோன்றுகிறது
எங்கள் ஊர் ஆலமரமும் இப்படித்தான்.
காரணங்கள் வேறுபடுகின்றன.
நன்றி ஐயா
அருமை