இலங்கை போர் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி
இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் (Labour Party) தலைவரும், பெண்கள் மற்றும் சமத்துவத்துக்கான நிழல் மாநிலச் செயலாளருமான அமைச்சர் அன்னெலிஸ் டொட்ஸ் (Anneliese Dodds) இதனை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இலங்கை போர் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போது தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை அவர், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைப் போரின்போது நடந்த கொடுமைகளை மறக்கக் கூடாது எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம், உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்ற வேண்டும் என Anneliese Dodds குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஒரு விரிவான அரசியல் தீர்வு ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு நாளானது, போரின் கொடூரம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதுடன், போர் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும்,, அரசியல் தீர்வைக் கண்டறிவதில் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல் போன்றவற்றை கோடிட்டுக் காட்டுவதில் தொழிற்கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் அன்னெலிஸ் டொட்ஸ் மேலும் தெரிவித்தார்.