நாடாளுமன்றம் கலைப்பு? : சபாநாயகர் வெளியிட்ட தகவல்!
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா இடம்பெறும் என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் உட்பட பொது மக்களுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடாத்தப்பட வேண்டும் எனவும் ஆனால், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடாத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவும் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
ஆனால், அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்படுமாயின் நிலையற்ற அரசாங்கமே உருவாகும் என மற்றுமொரு தரப்பினர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.