இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மிரட்டல் : விசாரணைகள் ஆரம்பம்!
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அதனையும் மீறி தேர்தலில் போட்டியிட்டால் கொலை செய்துவிடுவேன் என மர்ம நபர் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பரண பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்றும் அதன் பின்னரே ஏனைய தேர்தல்கள் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.