இலங்கை

சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் குற்றவியல் நீதிமன்றில்..! பிரித்தானியாவில் எதிரொலித்த குரல்

சிறிலங்காவின்(Sri lanka) போர்க் குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான ஆதரவை பிரித்தானிய தொழிற்கட்சி(Labour Party )தலைவர் கியர் ஸ்ராமர்( Keir Starmer )வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில்  தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்விலேயே அவர் அதனை தெரிவித்தார்.

ஈழத்தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்டு, கொடூரமான அனைத்துலக குற்றமீறல்களுக்கு ஆளாக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்களை நினைவில் நிறுத்தி, அவர்களை மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தொழிற் கட்சி

இவ்வாண்டு பிரித்தானியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியே வெற்றி பெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த இரங்கலையும் ஸ்ராமர் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாள் மட்டுமன்றி, அவசரமாக நீதி கிட்ட வேண்டியதை நினைவூட்டும் பதிவு என்பதையும் ஸ்ராமர் வலியுறுத்தினார்.

ஈழத்தீவில் தமிழ் மக்கள்

அத்தோடு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்கள் மறக்கப்பட முடியாதவை என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார். தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான அனைத்துலக குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலமே மடிந்த மக்களை நினைவேந்தி மதிப்பளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஈழத்தீவில் தமிழ் மக்கள் முகம்கொடுத்த கொடூரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றத் தவறியதையும், கடந்த கால அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும், விமர்சித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துலகக் குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல் தீர்வு

அத்தோடு, தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் ஸ்ராமர் நினைவூட்டியதோடு, ஈழத்தீவில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும், தமிழ் மக்களுக்குப் பரிபூரணமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் டேம் சிபோன் மக்டொனா, வெஸ் ஸ்ரிறீற்ரிங் (நிழல் சுகாதார மற்றும் சமூக நலப் பராமரிப்பு அமைச்சர்), கத்தரின் வெஸ்ற் (ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிழல் அமைச்சர்), சேர் ஸ்டீபன் ரிம்ஸ் (முன்னாள் நிதித்துறைத் தலைமைச் செயலர்), கரத் தொமஸ் (நிழல் பன்னாட்டு வணிக அமைச்சர்), ஜேமரஸ் முறே (நிழல் நிதித்துறை செயலர்), சாறா ஜோன்ஸ் (தொழில்துறை மற்றும் கரிமநீக்க நிழல் அமைச்சர்), ஜோன் மக்கொனெல் (முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சர்), டோன் பட்லர் (முன்னாள் அமைச்சர்), வீரேந்திர சர்மா, பரி காடினர் (முன்னாள் காலநிலை மாற்ற நிழல் அமைச்சர்) போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

போரின் கொடூரங்களையும், நீதியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் திகழ்கையில், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திக் கடந்த காலக் கொடூரங்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிசெய்வதிலும், ஈழத்தீவில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வைக் காண்பதிலும் தொழிற் கட்சி கொண்டுள்ள ஆதரவை உறுதிசெய்யும் வகையில் ஸ்ராமரின் உணர்வுபூர்வமான கோரிக்கை வெளிப்படுத்துகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.