இளைஞர்களின் எதிர்காலத்தினை பலிக்கடாவாக்கும் சஜித் : மனுஷ நாணயக்கார!
அணிசேரா நாடு என்பதனால் இலங்கை ஏனைய நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இல்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல்களுக்கு தீர்வு எட்டப்படும் எனும் எதிர்பார்ப்புடன் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இஸ்ரேலுடனான அரசாங்கத்தின் உறவுகளை பாதுகாத்து, இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை திசை மாற்ற முயற்சிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் வாக்குகளை பெறமுயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்
விருந்தோம்பல், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கூடுதலாக 40,000 இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சில அரசியல் குழுக்கள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்தினை பலிக்கடாவாக்க முயல்வதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.