கட்டுரைகள்

புலம்பெயர்ந்தோர் தொடர்பிலான விம்பம் எதனை நினைவுபடுத்துகிறது? …. நியூசிலாந்து சிற்சபேசன்.

 இலங்கையிலே பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெற்றோலுக்காக பொதுமக்கள் வீதியில் தவம்கிடந்தனர். “அறகலய” எழுசியடைந்தது. அதனுடைய தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் என்னும் நாடகம் அரங்கேறியது. அந்த நினைவுகளைக்கூட கடந்து வரமுடியவில்லை. அதற்கிடையே தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. தமிழர் தரப்புக்கூட பரபரப்பாகியிருக்கின்றது. தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் முன்வைக்கப்படுகின்றது. இத்தகையதொரு காலகட்டத்திலே, புலம்பெயர்ந்தோர் மீதும் கவனம் திரும்பியிருக்கின்றது.

தற்காலத்திலே “அடிமுடி” காணமுடியாத விஷயம் என ஒன்றைச் சொல்லவேண்டுமெனில், அஃது “புலம்பெயர்ந்தோர்” தொடர்பானதேயாகும். எதிரானதும், சார்பானதுமெனத் துருவத்தன்மையதான கருத்துநிலைகளே புலம்பெயர்ந்தோர் தொடர்பில் காணப்படுகின்றன.

நெருக்கடியான யுத்தகாலம், அதன்பின்னரான மீட்சி, கோவிட்பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களின்போது புலம்பெயர்ந்தோர் தோள்கொடுத்தனர். அதுதொடர்பில், தாயகத்திலேயும் புளகாங்கிதமுண்டு. அதேவேளையில், புலம்பெயர்ந்தோரிடமிருந்து வரக்கூடிய அபிப்பிராயம் தொடர்பில் தாயகத்தில் காணப்படுகின்ற பாராமுகமும் யதார்த்தமாகும்.

இத்தகையதொரு பின்னணியிலேயே, சனாதிபதித் தேர்தலை நோக்கிய தமிழ் பொதுவேட்பாளர் கருத்துருவாக்கத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு வேண்டும் என்பதான குரல்களையும் கேட்கமுடிகின்றது.

அதற்கு முன்னுதாரணமாக, கோத்தபாயவின் தேர்தல் வெற்றியிலே வெளிநாடுவாழ் சிங்களமக்களின் கருத்துருவாக்கப் பங்களிப்பு சுட்டிக்காட்டப்படுகின்றது. அதேபோன்று, அனுரகுமார திசநாயக்காவின் நகர்வுகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

தாயகக் கருத்துருவாக்கத்தில், புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு சாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கான பதில் சிக்கலானது. பேச்சுவழக்கில் சொல்வதெனில், இரண்டுகைகளுமே சேர்ந்து தட்டாவிட்டால் சத்தம் ஏற்படாது. அதேதோரணையில் சொல்வதெனில், தாயகத்திலுள்ளோரும் புலம்பெயர்ந்தோரும் பரஸ்பர புரிந்துணர்வுடனான சம்பாஷனைக்குத் தயாராகவில்லை என்பது வெள்ளிடைமலையாகும். ஒருதரப்பின் கருத்தை, மற்றையதரப்புக் கவனிக்கக்கூடிய இயல்பான சூழல்கூட கிடையாது.

புலம்பெயர்வு ஆரம்பமாகி நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனாலும்கூட, தாயகத்தமிழரும் புலம்பெயர்தமிழரும் இயல்பான

உறவுநிலையை வளர்த்துக்கொள்ளவில்லை. இரண்டுதரப்பினரிடையேயான பரஸ்பரபுரிதல் கானல்நீராகவேயுள்ளது.

இத்தகையதொரு நிலை ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கான பதில் இடியப்பச் சிக்கல்போன்றதாகும்.

தாயகத்திலே யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் கொடியது. அதற்கு ஒப்பீடு கிடையாது. அதேவேளையில், வலிகளையும் வேதனைகளையும் சுமந்ததே புலம்பெயர்வு என்பதுவும் யதார்த்தமாகும். அதுதொடர்பில், தாயகத்தில் உள்ளோருடைய புரிதல் எத்தகையது என்பது பெரிய கேள்வியாகும்.

புலம்பெயர்வு இலேசானது அல்ல. புலம்பெயர்வின் வழித்தடம் தெளிவற்றது. மிகக்கடினமான வழிமுறைகளிலேயே புதியபுலம் கண்டடையப்படுகின்றது. மாறுபட்ட சுவாத்தியங்களை எதிர்கொள்ளவேண்டும். புதியவாழ்க்கையைப் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். குடும்ப உறவுகளிலிருந்து பிரியவேண்டும். வெவ்வேறு தேசங்களில் வாழவேண்டும். உறவுகளின் இன்பதுன்பங்களில் பங்குகொள்ளமுடியாது என்பதாகப் புலம்பெயர்வின் வலிகள் தொடர்கதையாகின்றன.

ஒவ்வொருவருடைய அனுபவமும் வேறுபட்டது. பெருவெட்டில் சொல்வதெனில். புலம்பெயர்விலேயும் விரலுக்கு மிஞ்சிய வீக்கமும் வலியும் உண்டு.

காலவோட்டத்திலே, புதியபுலங்களிலே வாழ்வதற்குப் பழகிக்கொள்கின்றனர். இருப்பிடம், தொழில் போன்ற அடிப்படைகள் பூர்த்தியாகின்றன. புதியதலைமுறை தலையெடுக்கின்றது. வாழும்சூழலுடன் இயல்பான இணைவு புதியதலைமுறைக்கு வரமாகின்றது. அதனால் கல்வி, புலமை, தொழில் என முன்னோக்கிய பாய்ச்சல் சாத்தியமாகின்றது. அந்தவகையிலே, இயல்பான வாழ்க்கைக்கான உத்தரவாதம் புலம்பெயர்ந்தோருக்குக் கிடைக்கின்றது.

புலம்பெயர்ந்தோரிடையே, தாயகம் தொடர்பான ஆத்மார்த்தமான அக்கறையைக் கொண்டவர்கள் உள்ளனர். ஆனால், அதிலே கணிசமானோர் பார்வையாளர்களாகவே கடந்துவிடுகின்றனர். ஏதோவொருவகையிலே செயற்பாட்டாளர்களாக உள்ளோரின் எண்ணிக்கை குறைவானதாகும். அதிலேகூட தொய்வு ஏற்படத்தொடங்கிவிட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்கூட, தாயக ஈர்ப்புடைய புலம்பெயர்ந்தோர் ஓய்வுக்காலத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டமை முக்கியமானதாகும்.

எதுஎப்படியாகிலும், புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய சவாலே, ஒரு சமூகமாகத் திரளமுடியவில்லை என்பதாகும். அவர்களிடையே நிலைபேறான திரட்சி சாத்தியப்படவில்லை.

மொழியால் ஒன்றுபடலாம். மதத்தினால் ஒன்றுபடலாம். பிறந்தஊர் அல்லது கல்விகற்ற பாடசாலை என்ற அடிப்படையில் ஒன்றுபடலாம். ஆனால், அவையெல்லாம் புலம்பெயர்ந்த சமூகத்தைத் துண்டாடுகின்றன.

எங்கும், எதிலும், எப்போதும் முரண்பாடுகளே ஏற்படுகின்றன. தனிமனித முனைப்பு மட்டுமே துருத்திக்கொண்டு தெரிகின்றது. ஒவ்வொருவரும், தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பதை நிறுவுவதற்கே முயல்கின்றனர். அதனால், ஒருவரிடமிருந்து மற்றவர் எளிதில் அன்னியப்படுகின்றார்.

இதற்கான மூலகாரணங்களைக் கண்டறிவது எளிதானதல்ல. புலம்பெயர்வின்வலிகள் ஒருபுறத்தில் உள்ளன. தாயகச்சூழலிலிருந்து சுமந்துவந்த எச்சசொச்சங்கள் மறுபுறத்தில் உள்ளன. இவ்விரண்டின் கலவையே, புலம்பெயர்ந்த சமூகத்திலே காணப்படுகின்ற முரண்பாடுகளின் உந்துவிசையெனலாம்.

உதாரணத்திற்கு சொல்வதெனில், விடுதலை இயக்கங்களிடையேயான முரண்பாடுகளின் பிரதிபலிப்பை, யுத்தம் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகளின் பின்னரும், புலம்பெயர்ந்தோரிடையே காணமுடிகின்றது.

புலம்பெயர்ந்தோர் என்று விளிக்கும்போது, அது தொடர்பில் ஒரு பிரமாண்டமான விம்பம் தாயகத்தில் கட்டமைக்கப்படுகின்றது. யதார்த்தம் அதுவல்ல.

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமானதாக இருக்கலாம். ஆனால், தாயகம் தொடர்பிலான கரிசனை கொண்டவர்களுடைய எண்ணிக்கை குறைவானதாகும்.

அத்தகையதொரு குறைந்த எண்ணிகையிலானவர்கள்கூட உதிரிகளாகவே காணப்படுகின்றனர். ஒரு சமூகமாகத் திரட்சியடையவில்லை. அதற்கான சான்றுகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. திரும்பிய திசையெல்லாம் சிந்திக்கிடக்கின்றன.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் வகைதொகையின்றிப் பெருகியுள்ளன. கலாதியான பெயர்களை அமைப்புக்குச் சூட்டிக் கொள்கின்றனர். எடுத்தார் கைப்பிள்ளையாகிவிடுகின்றனர். அதனால் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை. வீதியிலே இறங்கி ஆர்ப்பாட்டம்கூட நடாத்துகின்றனர். அமைப்புக்கான தேர்தல் வரும்போதெல்லாம் பிரச்சினைகள் உச்சம் தொடுகின்றன. கைகலப்புகள் சர்வசாதாரணமாகின்றன. உடைப்பு மட்டுமே முக்கியெடுத்த முத்தாகின்றது. இத்தைகைய போக்குகளினால், இளைய தலைமுறையினர் விலகியோடுகின்றனர்.

ஆக, சமூகமாகத் திரட்சியடையவே திணறுகின்ற மக்கள்கூட்டம் தொடர்பில், தாயகத்தில் கட்டமைகின்ற “புலம்பெயர்ந்தோர்” தொடர்பிலான விம்பம், வயல்வெளிப் பொம்மையையே நினைவுபடுத்துகின்றது.

Loading

3 Comments

  1. Thanks Sabes
    It is sad we left with kanji in a coconut shells
    For our Elam Tamils after losing lives and property

  2. Very good observations of the conduct of Tamil diaspora. I am one of them. What I have in common is the hardships I faced, just like everyone emigrated. I still carry all the biases and prejudices I had, which explains my conduct. Should the diaspora speak with unanimous voice? We didn’t do it in Sri Lanka. So, how can we do so now? Yet, all emigrated have a yearning for better life for those left behind. Most of us help our friends and relatives in SL. This is great. What I wish for is the absence of animosity amongst us.

  3. Thanks Team who love Tamil and our Culture
    As a person I have been suffering these cast Racism Provincial discrimination from five years till now, I was beaten by for having Subramaniam as my name, fortunately my honest sincere hard working father made me to study with all these discrimination in Jaffna and came to Jayawardene University 1977 riots my sinhala land lord brought me to hindu college Refugee camp there I was treated as a dog after reading my father’s name as Moothan, I am not going to temple because they will not allow me to carry umberalla or Chariot

    One Coconut shells were used to serve to suppressed people in Jaffna now those shells have gone all over world to serve Kanji This is prompt Karma what we have done to others it will come back to us, we do not qualify for freedom unless respect our own people with dignity
    Hope people will realise before it is too late

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.