“தித்திக்கும் முத்தொள்ளாயிரம்” …. பாகம் 6 …. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
எனது அழகினால் என்ன பயன்?
பெண்களையே கவர்ந்திழுக்கும் பேரழகு வாய்த்தவள் அந்த மங்கை. வசந்தம் வீசுகின்ற பருவமும், வாளிப்பான உடலும் கொண்ட அவளின் அங்கங்களின் செழுமையில் இளைஞர்கள் தங்கள் இதயங்களை இழந்துநின்றார்கள். ஆனாள் அவளோ தன் உள்ளத்தைப் பாண்டிய மன்னனிடம் பறிகொடுத்திருந்தாள். தென்னாட்டு மன்னனோடு சேர்ந்துகொள்ளும் கனவிலேயே அவள் எந்நாளும் மிதந்திருந்தாள். தனது அழகை அடிக்கடி பார்த்து, அவளே வியந்தாள். மகிழ்ந்தாள். ஆனால் இந்த அழகெல்லாம் இருந்தென்ன பயன் என்று அவள் அடிக்கடி கவலைப்பட்டாள். ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தில் உருண்டு, திரண்டு காய்த்துக்கிடக்கும் இளங்காய் (நுங்கு) களைப்போல தனது மார்பகங்கள் இரண்டும் அழகு பொலிந்து திரண்டு இருந்தும் அவற்றால் தனக்கு என்ன பயன் என்று பெருமூச்சு விட்டாள்.
தென்னவனான மன்னவன் தன்னைத் தழுவவேண்டும், அப்போது அவனின் மார்பிலே பூசியிருக்கும் சந்தனத்தில் தன் மார்பகங்கள் தோயவேண்டும், இல்லையென்றால் இவற்றின் அழகால் என்ன பயன்? எதுவும் இல்லையே என்று நினைத்து வேதனைப் பட்டாள். அழகான இந்தக் காட்சியைத் தருகிறது, அடுத்த பாடல்.
வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந்து அணியகலக்
கோட்டுமன் கொள்ளா முலை ( பாடல் இல: 79)
உயர்ந்து நிற்கின்ற பனைமரத்தில் காய்த்திருக்கும் புதிய நுங்குகளைப்போல எனது மார்பகங்கள் அழகுள்ளவையாக இருக்கின்றன. ஆனால், கூர்மையான கொம்புகளையுடைய யானைப்படைகளை வைத்திருக்கும் பாண்டியனுடைய அழகான மார்பினைத் தழுவி அழுத்தமாகப் பதிந்து, அந்த மார்பில் பூசப்பட்டிருக்கும் குளிர்மையான சந்தனத்தை அப்பிக்கொள்ளவில்லையென்றால், எனது இந்த மார்பகங்களால் பயன் என்ன?
என்பது நேரடிக் கருத்து.
தூது செல்வாயா என் தோழியே?
மன்னனை நினைத்து மனதில் கவலையைச் சுமந்து கொண்டிருப்பதிலே பயனேதுமில்லை. அவனைக் காணவேண்டும், அவன் தன்னோடு பழகவேண்டும், தன்னைத் தழுவவேண்டும் அப்போதுதான் தனது தீராக் காதலுக்குத் தித்திப்பு உண்டாகும் என்று அவளது மனம் நினைக்கிறது. அதற்கு என்ன செய்யலாம் என்று முனைகிறது. எப்போதும், எதிலும் அவளுக்கு உற்ற துணையாக இருப்பவள் அவளின் தோழி. அவளிடம் பேசினாள். தன் மனங்கவர்ந்த பாண்டிய மன்னனிடம் தனக்காகத் தூது செல்ல முடியுமா என்று கேட்டாள். உயிர்த் தோழியல்லவா? மறுப்பாளா? செல்கிறேன், சென்று உன் நிலைய விரிவாகச் சொல்கிறேன் என்றாள் தோழி.
ஐயையோ..அப்படியெல்லாம் செய்துவிடாதே. என் பெயரை அவரிடம் சொல்லாதே. என் விபரங்களையும் அவருக்குச் சொல்லிவிடாதே. எனது ஊர் எதுவென்றும் சொல்லாதே. என் தாய் கொடுமையானவள் என்பதையும் சொல்லாதே. அவரை நினைத்துக்கொண்டு ஒருத்தி தூக்கமில்லாமல் ( அவரின் நாட்டில்) தவித்துக்கொண்டிருக்கிறாள் என்று நான் படும் துன்பத்தைப் பற்றி மட்டும் அவரிடம் சொல்லிவிடு. என்று தோழியிடம் நிபந்தனைகளை விதித்து அனுப்புகிறாள். நாடாளும் மன்னவன் அல்லவா? நாலும் தெரிந்தவன் அல்லவா? அவன்மீது காதல் கொண்டிருக்கும் தன்னை அவனாகக் கண்டுபிடித்துத் தன்னிடம் வரவேண்டும். அதுதான் தன் காதலின் வெற்றி என்று அந்தப் பேதை நினைக்கிறாள்.
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல்
அன்னையும் இன்னன் ஈ உரையல் பின்னையும்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என்
கண்படா வாறே உரை (பாடல் இல்: 82)
“கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் போர்க் களத்தில் எதிரிகளைக் கொல்லும் யானையை வைத்திருப்பவனும், தமிழர்களின் தலைவனுமாகிய பாண்டிய மன்னனிடம் போய், “உன்னை நினைத்துக் கன்னியொருத்தி
தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருக்கிறாள்” என்று சொல்லிவிடு. ஆனால், என்னைப் பற்றிச் சொல்லாதே, என்பெயரையும் சொல்லாதே, என் அன்னை என்னைக் கொடுமைப்படுத்துவதையும் சொல்லாதே” என்று தோழியிடம் சொல்வதாக இந்தப் பாடலின் கருத்து அமைந்துள்ளது.
மங்கையரின் மயக்கமும் இரவின் குழப்பமும்!
இரவு நேரத்தில் காதலர்களோடு கூடியிருக்கும் பெண்களின் உள்ளத்தில் எழுகின்ற ஒய்யார எண்ணங்களையும், தங்கள் காதலர்களோடு கூடுவதற்கு வாய்ப்பில்லாமல் தனித்திருந்து தவிப்பவர்களின் எண்ணங்களையும் அழகாக எடுத்துரைக்கிறது அடுத்த பாடல். சிலர் தங்கள் காதலர்களைத் தழுவிக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தழுவல் நழுவிவிடக்கூடாதே என்ற இன்பக் கலக்கத்தில், அந்த இரவு முடிந்துவிடக் கூடாதே மறுநாள் விடிந்துவிடக் கூடாதே என்று தவிக்கிறார்கள். அதே வேளை, காதலர்களோடு தழுவக் கிடைக்காதவர்களோ ஏன் அந்த இரவு இப்படி நீடிக்கிறது, இன்னும் ஏன் விடியாமல் இருக்கிறது என்று துடிக்கிறார்கள். இவ்வாறே, பாண்டிய மன்னனின் மார்பைத் தழுவிக்கொண்டிருப்பதாகக் கனவு காணும் மங்கையர்களும், தமது கனவு கலைந்துவிடக்கூடாதே என்பதற்காக இரவே போய்விடாதே என்றும், கனவிலும் தழுவாதவர்கள் இரவே போய்விடு என்றும் விரும்புவார்கள்.
இப்படி, காதலர்களைத் தழுவிக் கிடப்பவர்கள் இரவே செல்லாதே என்பதாலும், தழுவக் கிடைக்காதவர்கள், இரவே நில்லாதே என்பதாலும் அந்த இரவு இரண்டு பகுதியினருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு செய்வதறியாது குழம்பிக்கொண்டிருக்கிறது என்ற சுவையான காட்சியை இந்தப்பாடல் நம் நெஞ்சத் திரையிலே ஓட விடுகிறது.
புல்லாதார் வல்லே புலர்கென்பார், புல்லினார்
நில்லாய் இரவே நெடிது என்பார் நல்ல
விரா அமலர்த் தார்மாறன் ஒண்சாந்து அகலம்
இரா அளிப்பட்டது இது (பாடல் இல: 95)
இதன் கருத்து:
தழுவாது இருப்பவர்கள் இரவே விடிந்து விடு என்று சொல்வார்கள். தழுவியிருப்பவர்கள், விடியாமல் இப்படியே நீண்ட நேரம் தொடர்ந்திரு என்பார்கள். பல மலர்களைச் சூடியும், சந்தனம் பூசியும் உள்ள பாண்டியனின் அகன்ற மார்பின் நிலையும் இதுவே அதைத் தழுவிக்கொண்டிருப்பவர்கள் இரவே போகாதே என்பார்கள், தழுவக்கிடக்காதவர்களோ போய்விடு என்பார்கள்.
சிந்திய கள்ளும், சேறான மண்ணும்!
சேரநாடு மிகவும் செல்வம் நிறைந்தது. வளத்தில் செழித்த மக்கள் நன்கு உண்டு களித்தார்கள். மதுவை அருந்தி மகிழ்ந்தார்கள். தென்னம் பாளையில் இருந்து கிடைக்கும் கள்ளை மக்கள் பெரிதும் விரும்பினார்கள். கடைவீதிகளிலே கள் குடித்து மகிழ்வோரெல்லாம் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். அவர்களில் சிலர் கள்ளுண்ட போதையில் மயங்கிக் கிடப்பார்கள். அதனால் கடைவீதி எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும். இதனை நமக்கு அறியத்தரும் பாடல் ஒன்று இப்படியிருக்கின்றது.
களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்
களிகள் விதிர்த்திட்ட வெம்கள் துளிகலந்து
ஓங்கொழில் யானை மிதிப்பச் சேறாயிற்றே
பூம்புனல் வஞ்சி அகம் (பாடல்இல: 4)
இதன் கருத்து:
வஞ்சி நகரம் நீர்வளம் நிறைந்தது. அங்கே, கள் குடிப்பவர்கள், கள் குடிக்கும் பாத்திரத்திலே அதனை வாங்கி, கள்ளின் மேற்பரப்பில் மிதக்கும் நுரையைக் கையால் வழித்து வெளியே எறிந்துவிட்டுக் கள்ளைக் குடிப்பார்கள். அவ்வாறு நுரையை வழித்தெறியும் போது கள்ளும் நிலத்தில் சிந்தும். அந்த வீதியால் அரசனின் அழகிய யானைகள் செல்லும்போது அவ்வாறு நிலத்தில் சிந்திக்கிடக்கும் கள்ளிலும், நுரையிலும் யானைகளின் கால்கள் பட்டு மிதிபடும். அப்போது கள்ளும், நுரையும், மண்ணும் கலந்து வீதியெங்கும் சேறாகிவிடும். அவ்வளவு செழிப்பானது வஞ்சி நகரம்!
மது அருந்துபவர்கள் சிலர் அருந்தத் தொடங்கு முன்னர் சிறுதுளி மதுவைக் கையால் எடுத்து நிலத்தில் தெளித்துவிட்டு, அல்லது சிந்திவிட்டு மதுவை அருந்துவது சில இடங்களில் இப்பொழுதும் வழக்கத்தில் உள்ளது. இந்தப் பழக்கம் பண்டைக்காலத்தில் எப்படி ஏற்பட்டது என்பதை இந்தப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் கொள்ளலாம்.
இவ்வாறு முத்தொள்ளாயிரத்தின் ஒவ்வொரு பாடலுமே தித்திக்கும் சுவையைக் கொடுக்கும். இப்போதுள்ள நூற்றுப் பத்துப் பாடல்களையும் ஒவ்வொன்றாகப் படித்து, உளமாரச் சுவைப்பதற்கே பலநாட்கள் எடுக்கும். அப்படியிருக்கும் போது முத்தொள்ளாயிரத்தின் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களும் கிடைக்கப்பெற்றிருக்குமானால் அவை தமிழ் அன்னைக்கு எவ்வளவு அழகான அணிகலன்களாக இருந்திருக்கும் என்று எண்ணும்போது நமக்கு உண்டாகும் ஏக்கத்தைத் தடுக்க முடியவில்லை.
வாழ்க தமிழ் வணக்கம்.