இலக்கியச்சோலை

“கடலும் கப்பலும் கரையாத சோகமும்”…. வணங்கா மண் – நூன்முகக் குறிப்பு ….. ( அங்கம் 04 ) …. முனைவர் செல்லத்துரை சுதர்சன்

வணங்கா மண் – நூன்முகக் குறிப்பு- அங்கம் 04

முனைவர் செல்லத்துரை சுதர்சன்

( சிரேஷ்ட விரிவுரையாளர்,

தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,

பேராதனை, இலங்கை. )

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பு 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே18 ஆம் திகதிவரை நிகழ்ந்த கொடூரங்களை, நபர்களின் நேரடியான வாக்கு மூலங்களைக் கொண்டு வெளியிட்டதை அலசுவனவாக ஈழப் படுகொலை – புதிய சாட்சியம், இனப்படுகொலைச் சாட்சியின் நேரடி வாக்கு மூலம் ஆகிய கட்டுரைகள் அமைகின்றன.

அந்த ஆவணத்தின் பல நீண்ட பகுதிகளை அவர் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். இறுதிப் போரில் நிகழ்ந்த கொடூரங்களை விரிவான முறையில் ஆவணப்படுத்தும் முதலாவது ஆவணம் என்றும் அந்த அறிக்கையை அடையாளம் காட்டுகிறார். போரின் பின்னர் தமிழர் நிலத்தில் நிகழ்ந்த பண்பாட்டு அழிவை, யாழ்ப்பாணம் அல்ல யாப்பா பட்டுவ என்ற கட்டுரை பேசுகிறது.

கறுப்பு ஜூலை – அக்கினி தோய்த்து எழுதிய சொற்கள் என்ற கட்டுரை வரலாற்றில் நிகழ்ந்த கொடுமைகள் வரலாற்று நினைவடுக்குகளில் மீண்டும் மீண்டும் உறுதியாக வேர் கொள்ள, தவறாது நினைவு கூரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குண்டு வெடிப்பு நாள் என்ற கட்டுரை, ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் பேசுவதோடு, இதை வைத்து முஸ்லிம்களை அடக்கும் சனாதன மத அரசியல் குறித்து அச்சமும் கொள்கிறது.

ஈழத்தில் சிவசேனா என்ற கட்டுரை, ஈழத்தில் தமிழர்கள் புதிதாக எதிர்கொள்ளும் மதவாத ஆபத்துப் பற்றிப் பேசுகிறது. உண்மையில் சிவசேனாவின் ஆதிக்கம் ஈழத்தில் ஊன்றி நிலைபெற்றால், தமிழர் மத ரீதியாகப் பிரிவினைக்கு உள்ளாகி, பலமிழந்தவர்களாகி, பௌத்த தேசிய வாதம் போல, சைவத் தேசிய வாதம் என்ற படுகுழிப்

பாதையில் பயணிக்கலாம் என்பது புலப்பட அச்சிறு கட்டுரை பேசுகிறது.

இந்த நூலில் உள்ள, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்து அகதிகளின் உரிமைகள் தொடர்பான ரவிக்குமாரின் எழுத்துகள் மிகுந்த முக்கியத்துவமுடையவை. தமிழகத்தில் வாய்ச் சொல் வீர அரசியல்வாதிகள் சிலர், மேடைகளில் ஈழத் தமிழர்களைத் தொப்புள் கொடி உறவென இடிமுழக்கமிடுவது உண்டு. ஆனால், தங்களது நாட்டின் கடலோரக் கரை வாசல்களில் ஈழத் தமிழர்கள் ‘உயிருள்ள பிணங்களாக’ ஒதுங்கும்போதோ, முகாம்களில் அடிப்படை வசதிகளற்றுத் துன்புறும்போதோ அவர்கள் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அந்த உறவை வசதியாக மறந்துவிடுகிறார்கள். தொப்புள்கொடி உறவைப் பேச்சுக்காக ஈழத் தமிழர்களை நோக்கி அவர்கள் கூறினாலும், புலம்பெயர் தமிழர் வாசல்களில்தான் அவர்கள் யாசிக்கிறார்கள்.

தமது வாசலில் ஈழ அகதிகள் இருக்க, கண்டம் விட்டுக் கண்டம் தாண்டித் தொப்புள் கொடி உறவைத் தமது லாபத்துக்காகப் பயன்படுத்துவோர் மத்தியில் ரவிக்குமார் வேறானவர். அவரது எழுத்துகள், செயற்பாடுகள் பெரும்பாலும் ஈழ அகதிகளின்பால் பரிவைக் காட்டுபவை.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, 2006 இல், ரவிக்குமார் தயாரித்துக் கையளித்த ‘தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாம்களின் நிலை குறித்த அறிக்கை’ வரலாற்றுச் சிறப்புடையது. 1995 இல் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, ஈழத் தமிழ் அகதிகள் நலன் குறித்த கவனத்தை ஈர்க்க, நிறப்பிரிகை சார்பில் புலம்பெயர் தமிழர் நல மாநாட்டை ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். அதன் தொடர்ச்சியாகவே, 2006 இல் அவர் சட்டமன்ற உறுப்பினராகியதும், ஈழத்து அகதிகள் பிரச்சினை தொடர்பான அவரின் பணி முன்னெடுப்பைப் பார்க்கவேண்டும்.

ரவிக்குமார் தயாரித்த அந்த அறிக்கைதான் தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள ஈழ மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்கவும், பிள்ளைகள் உயர் கல்வி பெறவும், அவர்களது பணக்கொடை உயர்த்தப்படவும் காரணமாக அமைந்தது. ரவிக்குமாரின் அறிக்கையை அங்கீகரித்த கலைஞர், அகதிகள் நலனுக்காக நூறு கோடி ரூபாயை ஒதுக்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றும் சரியான புள்ளிவிபரங்கள் இல்லாமல் இருக்கும் ஈழத்து அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு, மிகத் துல்லியமான புள்ளிவிபரங்களோடும் முகாம்களில் கள ஆய்வில் பெறப்பட்ட தகவல்களோடும் இதனைத் தயாரித்திருக்கிறார், ரவிக்குமார்.

இந்தியாவில் அகதிகள், தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் ஆகியவற்றை வரலாற்று ரீதியாக எடுத்துரைத்து, தமிழ் நாட்டில் அகதிகளின் நிலையைக் கூறி, அகதி முகாம்களின் அவல நிலையை விரிவாக விளக்கிச் செல்கிறார். குடியிருப்புக்கள், கழிப்பிடங்கள், குடிநீர், மருத்துவம், மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு, அனாதரவான முதியோர், உடல் ஊனமுற்றோர், பணக்கொடை, ரேஷன் பொருட்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பிறப்பு இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள், குடியுரிமை முதலாய பல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனக் கடப்பாட்டு உணர்வோடு அவர் அறிக்கையிடுகிறார்.

அத்துடன் 33 பரிந்துரைகளையும் அந்த அறிக்கையில் தருகிறார். அதில் 32 ஆவது பரிந்துரையில் ‘இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள், இந்தியர்களைத் திருமணம் புரிந்துகொண்ட அகதிகள், இந்தியாவில் தொடர்ந்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அகதிகள் ஆகியோரிடம், அவர்களது குடியுரிமை தொடர்பாக விருப்பத் தேர்வினைக் கேட்கும் விதமாக, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ எனக் கேட்பது அவரது அரசியல் அறநெறியைக் காட்டிநிற்கிறது.

இந்த அறிக்கையில் கலப்பு மணம் பற்றி ரவிக்குமார் கூறுகையில், ‘வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைத்தான் நாம் கலப்பு மணம் என்று கூறுவோம். ஒரு அகதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்து கொள்வதையும் நாம் கலப்பு மணம் என்றே குறிப்பிடலாம்’ எனக் கூறுவது இருநிலச் சமூக இணக்கப்பாட்டை அவர் வெளிப்படுத்துவதற்குத் தக்க உதாரணம் எனலாம்.

‘இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் – சிந்திக்க வேண்டிய சில வினாக்கள்’ என்ற கட்டுரை, ஆதரவுக் குரல் எழுப்பாத, ஈழத்துத் தமிழ் அரசியல் தரப்புகளின் கூட்டுப் பொறுப்பின்மையைச் சாடுவதாகவும் அமைகிறது. ‘தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோதெல்லாம் ஈழத்து இயக்கங்கள் குரல் எழுப்பவில்லை’ என்ற இந்தக் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்.

தமிழகத்தைத் தமக்கான பலமானதொரு ஆதரவுக் களமாகக் கருதிய புலிகள் இயக்கம்கூட அந்தத் தவறை விட்டிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்கும் மனப்பக்குவம் வரவேண்டும்.

‘ஈழத்தில் போராளிக் குழுக்களை இந்திய அரசு உருவாக்கியபோது, அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, தளபாடங்களை அனுப்புவது ஆகியவற்றுக்கான பின் தளமாக தமிழ்நாடு பயன்படுத்தப்பட்டது. அந்தப் பின்தளம் என்ற மனோபாவத்திலிருந்து இன்னும் ஈழத்தமிழர்கள் விடுபட்டது போலத் தெரியவில்லை. தமிழ்நாடு என்பது தமக்கான ஆதரவைப் பெறுவதற்கான நிலப்பகுதி என்று மட்டுமே கருதும் இந்த மனோபாவம் சரியானதுதானா? தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கை அரசால் பாதிப்புக்கு ஆளாகும்போது மௌனம் காப்பது சரிதானா?’ என்று ரவிக்குமார் கேள்வி எழுப்புவது நியாயமானது.

ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி அதை ஈழ – தமிழகத் தமிழர்களின் பிரிவினைக்கான மோதலாக உருவாக்கும் அரூப அரசியலின் உள்நோக்கத்தையாவது ஈழத்து இயக்கங்கள் புரிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழகமெங்கும் ஜல்லிக் கட்டுப் போராட்டம் பேரலையாக எழுந்து, அது மெரீனாவில் வரலாறு காணாத பெரும் மாணவர் புரட்சியாக மையம்கொண்டபோது, அதற்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் கலை இலக்கியச் செயற்பாட்டு இளைஞர், யுவதிகள் திரண்டு குரல் கொடுத்தனர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழகத்தின் மீதான இத்தகைய சகோதரத்துவக் குரல் எழுகிறது எனில், அது எமக்கு எதனை உணர்த்துகிறது?

ரவிக்குமாரின் இந்த நூலில் உள்ள அரசியல் எழுத்துகளின் இன்னொரு சிறப்பம்சம், அவை கராரான அரசியல் எழுத்தாக அமையாமல், கவித்துவமாக அமைவதே. அதனால், இயல்பான ஒரு வாசிப்புக் கவர்ச்சியையும் வாசக மனதைச் சலிக்கச் செய்யாப் பண்பையும் அவை பெற்றுள்ளன. ‘தீயின் நாக்குகள் மேலேறிக் காற்றை நசுக்குகின்றன. கரும் புகை சூழ்கிறது. அந்தக் காட்சி, அந்தச் சாம்பலோடு பறந்து செல்லும் ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவல ஓலத்தை நமக்குச் சொல்வதாக இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது’ போன்ற கவித்துவக் கோடுகள் பெற்ற அரசியல் எழுத்துக்களாக அமைவது, அவரது எழுத்துக்களுக்கு, இலக்கிய அந்தஸ்தை வழங்கிவிடுகிறது.

இந்த நூல், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத் தமிழரின் கலாசார நிறுவனங்களின் ஒரு பகுதியாகவும், போராட்ட மேடையின்

பதிவாகவும் அமைகிறது. உடலை வருத்திப் பணிய வைக்கும் துப்பாக்கி ரவைக்கு மாறாக, மனப் பரப்பில், ஆன்மீகத் தளத்தில் அசைக்க முடியாத – ஆதிக்கசக்தி வெல்ல முடியாத நிலையை உருவாக்குகிறது. மாபெரும் நியாய அரசியலைச் சார்ந்திருக்கிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான பெரும்படியான கருத்தியற் சமரின் பகுதியாக அமைந்திருக்கிறது. நம் சகபயணியின் தார்மீகக் குரலாய் ஒலிக்கிறது. இன்னும், அழிப்பு நிலையிலிருந்து (Destruction) கட்டுமான நிலைக்கு (Construction) வழிவகுக்கிறது.

‘ஈழப்போராட்டத்தை, அதன் சாதக பாதகங்களை, வெற்றிப் பயணம் தோல்வியில் முடிந்ததை – ஈழப் போராட்டத்தை முறையாக ஆராயக்கூடியவர்கள் நம்மத்தியில்’ இல்லை என்று தமிழ்ச் சூழலின் புலமை வறுமை பற்றிக் கவலைப்படும் அவரே அந்த வறுமையை நீக்கி வருகிறார்.

ரவிக்குமார் அவர்கள் எழுதிவெளியிட்ட முதல் அரசியல் சிறுநூலே, ஈழம் குறித்ததுதான். ‘இலங்கையில் ஒரு தேசிய இனம்’ என்ற அந்த நூல் 1985 இல் வெளியானது. அதன் பின்னர் ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு குறித்து அ.மார்க்ஸ் அவர்கள் எழுதி, ரவிக்குமார் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட, ‘ தென்னாசியாவில் இந்தியா’ என்ற சிறுநூலை, அவர்கள் செயற்பட்டுவந்த மார்க்சிய லெனினியக் கட்சி தடைசெய்தது. அதனால் அவர்கள் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறினார்கள். அத்துடன் அந்த இயக்கமும் பலவீனப்பட்டு, இன்று இல்லாமலே போனது வேறுகதை. ரவிக்குமார் அவ்வாறு வெளியேறாது போயிருந்தால் ஈழத்து அரசியல் எழுத்துக்கள் இழக்கப்பெற்றிருக்கும். அவரது வெளியேற்றம் ஈழத்து அரசியல் வயலில் பெருவிளைச்சலாக அமைந்திருக்கிறது. அதற்கு இந்த நூலும் ஒரு சாட்சி.

ரவிக்குமார் அவர்கள், யாழ் நூலக எரிப்புக் குறித்துத் தனது நூலொன்றில், ‘நூல்களை எரிக்கும் நாட்டில், எப்போதும் இரவுதான். நிலவுகூட இல்லாத இரவு’ என்று தார்மீகக் கோபத்தோடும் கனத்த துக்கத்தோடும் எழுதுகிறார். அவரது கூற்றில் எனக்கும் உறுதியான நம்பிக்கை உண்டு. மழையில் தீப்பெட்டி நனைந்திருந்தாலும் இருக்கட்டும் என்று இருளில் மூழ்க இயலுமா? இறுதிக் குச்சி இருக்கும் வரையிலும் சுடரேற்றத்தானே வேண்டும். அதை அவர் தொடர்ச்சியாக ஏற்றிக்கொண்டிருப்பார். மூத்த சகோதரருக்கு எனது வாழ்த்தும்….

நன்றியும்..

( முற்றும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.