முச்சந்தி
சர்வதேச நீதிக்காக அங்கீகாரம் பெறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! … நவீனன்.
இனஅழிப்பு போரை முன்னெடுத்த ஒரு முன்னாள் தலைவரே, அதனை ஏற்றுக் கொள்வதானது சர்வதேச அளவில், ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதொரு முக்கிய சாட்சியமாகவே இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சாட்சியம்:
முப்பது ஆண்டுகளாக நடந்த ஈழப்போரை, சந்திரிகா குமாரதுங்க “இனப்படுகொலைப் போர்“ (genocide war) என்று அடையாளப் படுத்தியிருப்பது முக்கியமானதொரு விடயம். அப்படி குறிப்பிடுகின்ற, இனப்படுகொலைப் போரை அவர் அந்தக் காலகட்டத்தில் வழிநடத்தியிருக்கிறார் என்பதும் உண்மையே.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இனப்படுகொலைப் போர் நடந்ததாக குறிப்பிடும், முப்பது ஆண்டுகளில், 1994 தொடக்கம், 2005 வரையான 9 ஆண்டுகள் நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்.
கடந்த 2022 18ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களுக்காக தனது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட போர் இனப்படுகொலைப் போர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சந்திரிகா குமாரதுங்க தனது முகநூல் பக்கத்தில், “ஒரு நாட்டையோ மனித இனத்தையோ போரினாலோ, வெற்றியாலோ தோற்கடிக்க முடியாது என்றும், முப்பது வருட இனப்படுகொலைப் போரில், நாம் இழந்தவை ஏராளம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் தான், தமிழர்களுக்கு எதிரான போர் முழுவேகம் பெற்றது. தனது ஆட்சியிலேயே 75 சதவீதமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும், எஞ்சிய 25 சதவீதமான போரையே மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தார் என்றும் சந்திரிகா சில ஆண்டுகளுக்கு முன்னர், கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.
இனஅழிப்புப் போர் – முக்கிய சாட்சியம்:
அண்மைக் காலத்தில் சந்திரிகா குமாரதுங்க நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தாலும், இனப்படுகொலைப் போரில் அவரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தாலும், அவரை விட மோசமான இழப்புக்களையும், அழிவுகளையும் தமிழர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதால் தான், அவர் தனது இல்லத்தில் 2022மே 18 நாளை நினைவு கூர்ந்திருக்கிறார். நடந்தது இனப்படுகொலைப் போர் என்ற அவரது பதிவு, இன்றைய நிலையில் இனஅழிப்புப் போர் என்பதற்கு முக்கியமானதொரு சாட்சியம்.
2009 மே 19ஆம் திகதி இனப்படுகொலை மூலம், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அடையாளத்துடன் முன்னெடுத்த போர் முற்று முழுதாக தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்டது.
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போரில் தமிழரின் இருப்பையும், அடையாளங்களையும் அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.
அவுஸ்திரேலிய மாநில பாராளுமன்ற அங்கீகாரம்:
நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு மே 18 ஆந் திகதியைத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்துள்ளது.
இந்த மிக முக்கியமான நாளில், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் நியூ சவுத் வேல்ஸ் முதல் அவுஸ்திரேலிய மாநில பாராளுமன்றமாகும்.
2022 மே 18ஆம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது தமிழ் சமூகத்தின் பல உறுப்பினர்களின் பல வருட கடின உழைப்பு மற்றும் வாதத்தின் உச்சகட்டத்தின் விளைவாகும்.
இலங்கைத் தீவில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பல மனித உரிமை மீறல்களையும், நீதியை நாடும் சர்வதேச சமூகத்தையும் எதிர்கொள்கிறது. இந்த அட்டூழியங்களுக்குக் காரணமானவர்கள் கணக்குக் காட்டப்படுவதை உறுதிசெய்ய நிறைய வேலைகள் காத்திருக்கின்றன.
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தில், தீவில் அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் மீண்டும் உறுதியளிக்கிறோம் என நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் 2022 மே 18ஆம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி :
அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது, முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி தினத்தை அங்கிகரித்ததோடு இங்கு வாழும் தமிழர்கள் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்புகளையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.
18 மே 2009இல் இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவின் நிறைவைக் குறிக்கிறது. இலங்கை உள்நாட்டுப் போரில் குறைந்தது 100,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.
அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் அகதிகள் மற்றும் அவர்கள் நமது பன்முக கலாச்சார சமூகத்திற்கு செய்யும் பங்களிப்புகள் அளம்பெரியவை.
கனடா நாடாளுமன்றும் தமிழ் இனப்படுகொலைய அங்கீகரித்தது:
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்த உலகின் முதல் நாடாளுமன்றமாக கனடா நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதற்கான பிரேரணையை ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி (Scarborough-Rouge Park) கனேடிய-தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) 19/5/2022 முன்வைத்தனர்.
இந்த பிரேரணேயை நாடாளுமன்றில் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ் இனப்படுகொலை தீா்மானம் ஏகமனதாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக ஏற்று அங்கீகரிக்கும் உலகின் முதலாவது நாடாளுமன்றம் கனடாவாகும் என ஹரி ஆனந்தசங்கரி தெரிவிததுள்ளார்.
கனடா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பல வருடகால உழைப்பாகும். தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலரது உழைப்பின் உச்ச விளைவாக இது நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.