“உரி பொருளும் அதன் உரை பொருளும்” … பகுதி.5 …. சங்கர சுப்பிரமணியன்.
திங்கள், செம்பரிதி, விண், உடுக்கள், மங்குல் மற்றும் கடல் போன்றவை மிகவும் பழைமையானவை. தமிழும் அத்தகைய பழைமை வாய்ந்தது. அத்தகைய தமிழை தாய்மொழியாக கொண்டு பிறந்தோம் நாங்கள் என்கிறார் புலவர்.
முதலில் இப்பாடல் எத்தகு சூழலில் பாடப்பட்டிருந்தது என்பதை அறிந்திடல் வேண்டும். மாற்றானினிடம் அடிமைப் பட்டுக்கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பி வீரமூட்ட பாடப்பட்ட எழிச்சிப் பாடல். அடிமைப் பட்டுக்கிடப்பதில் இருந்து மீண்டுவிட்டோமா? மீண்டுவிட்டோம் என்றால் இப்பாடலைப் பற்றிய கவலையோ ஆய்வோ நமக்குத் தேவையில்லை.
அடுத்தது இலக்கியத்தை அலச
இலக்கணமும் அவசியம். இந்த இலக்கணத்தை புலவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள். அது அவர்களுக்கே உரிய உரிமை. அதன் பேரில் எவரும் கேள்வி கேட்கமுடியாது.
இந்த இலக்கணத்தில் குறிலை நெடிலாக்குவது நெடிலை குறிலாக்குவது, சொல்லையே மாற்றக் கூடிய அளபெடை, எதுகை, மோனை, உயர்வு நவிற்சி அணி, இடவாகு பெயர் என பலவற்றை தங்கள் திறமைக்கேற்பவும் வசதிக்காகவும் புலவர்கள் கையாள்வார்கள். இங்கே நான் எடுத்துக் கொண்ட இரண்டு செய்யுட்களுக்காக இடவாகு பெயர் மற்றும் உயர்வு நவிற்சி அணி இரண்டை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் உலகளவு. அதில் நான் கற்றதோ கைமண் அளவே. இதைவைத்துக் கொண்டு என் சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்கியுள்ளேன். ஆதலால் பேரறிவாளர்கள் பொருத்தருள்க.
இதில், பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் என்ற செய்யுளை உயர்வு நவிற்சி அணியின் துணைகொண்டு அதில் தவறில்லை என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் புலவரை அப்படி ஒன்றும் நான் காப்பாற்றத் தேவையில்லை.
நல்ல தமிழறிந்த சான்றோர்கள் காப்பாற்றியுள்ளார்கள். அவர்கள் சொன்ன விளக்கத்தை மட்டும் தந்துள்ளேன். ஆதலால் அறிவியலோடு இலக்கியத்தை சம்பந்தப் படுத்த முடியாது என்பதை மட்டும் தெரியப்படுத்திக் கொற்கிறேன்.
அடுத்ததாக இடவாகு பெயர், திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் என்ற செய்யுளுக்காக எடுத்துக் கொள்வோம். ஊர் சிரிக்கிறதென்றால் ஊர் எங்காவது சிரிக்குமா? ஊரிலுள்ள மக்கள்தானே சிரிப்பார்கள். இதுதான் இடவாகு பெயர்.
இதைப் போன்று இவற்றோடு பிறந்த தமிழ் என்றால் இவற்றுடன் தமிழ் சேர்ந்து பிறக்கவில்லை. என் கூடப்பிறந்தவர்கள் ஐந்துபேர் என்றால் ஐந்து பேரும் ஒரே பிரசவத்தில் பிறக்கவில்லை. ஒன்றன்பின் ஒன்றாகத்தான் பிறந்தார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
முதலில் பிறந்தவருக்கும் கடைசியில் பிறந்தவருக்கும் வயதில் வேறுபாடு இருக்கும். அவர்களில் மாநிறத்தவர் கருப்பு நிறத்தவர் உயரமானவர் உயரம் குறைந்தவர் பருமனாக இருப்பவர்கள் மெலிந்து இருப்பவர்கள் ஆண் பெண் என்றெல்லாம் இருப்பார்கள் அல்லவா?
அதுபோல் உவமைக்காக திங்கள், செழும்பருதி, விண், உடுக்கள், மங்குல் மற்றும் கடல் போன்றவைகளை் கையாளப் பட்டுள்ளன. அவ்வளவே. அதேபோன்று திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் பிறந்த தமிழுடன் என்றால் திங்களைப் போன்றும் செழும்பரிதி போன்றும் தமிழும் தோன்றியதில் பழமையானது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
அல்லது உயர்வு நவிற்சி அணியாகவும் எடுத்துக் கொள்ளலாம். சங்ககாலத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியது என்றால் சாலைகளில் ஆறுபோல் தேனும் பாலும் ஓடியதாக பொருள் கொள்ள முடியுமா? சங்ககாலத்தில் மக்கள் செழிப்பாக வாழ்ந்தனர் என்றே பொருள் கொள்ளவேண்டும் அல்லவா? அதைப்போல் திங்கள் போன்றும் செழும்பரிதி போன்றும் தமிழும் பழமையானது என்று உயர்வு நவிற்சி அணியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக புலவர்களிலும் ஆத்திகப் புலவர் மற்றும் நாத்திகப் புலவர் என்று தரம் பிரித்து முத்திரை குத்தி இருக்கிறார்களா என்ன? நீதி என்றால் அது எல்லா உயிர்களுக்கும் பொது என்பதால் ஆராய்ச்சி மணியை மாடு அடித்ததும் மனுநீதிச் சோழன் தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றான். அவ்வாறிருக்க அவன் வழிவந்த நாம் உனக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயம்
என்பது சரியா?
ஐயாரினாதரும் பாரதிதாசனும் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கொரு நியாயம் அறிவியலையே வியக்க வைத்த
அருணகிரிநாதருக்கு ஒரு நியாயமா?
கோபுரத்தில் இருந்து குதித்தவரை இரு கரங்களிலும் தாங்கிப் பிடித்து காப்பாற்றியதும் அறிவியலுக்கு புறம்பான செயல் அல்லவா?
அதன்பின் அவர் திருந்தி வாழ ஆரம்பித்தார்.
இறைவனைப் போற்றி பாடல்கள் பாடினார்.
அப்படி பாடிய பாடல்களில், ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே என்ற
பாடலும் ஒன்று.
மயிலின் எடை எவ்வளவு இருக்கும் இதன்மேல் ஏறி முருகனால் அமரத்தான் முடியுமா? அமர்ந்து விளையாடத்தான் முடியுமா? எனவே தமிழ் இலக்கியங்களில் உண்மையும் கற்பனையும் மற்றும் இலக்கணமும் உள்ளது என்பதால் இலக்கியத்தை இலக்கியமாக மட்டுமே பார்க்க வேண்டுமேயொழிய அதை அறிவியலுடன் சேர்த்து பார்க்கக்கூடாது.
1991ல் நான் மெல்பனில் குடியேறினேன். அப்போது இலங்கைத் தமிழர் நட்பு எனக்கு கிடைத்தது. எங்களுக்கு தமிழ் மேல்
இருந்த பற்றால் தமிழ்ச் சங்கம் ஒன்றை தொடங்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. சுமார் பத்துபேர் இணைந்து விக்டோரியா
தமிழ் கலாச்சார கழகம் என்ற அமைப்பை தொடங்கினோம். தொடங்கிய பத்துபேரில் நானும் ஒருவன்.
இந்த கட்டுரையை எழுதக் காரணம் 1965ல் வந்த கலங்கரை விளக்கம் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சங்கே முழங்கு என்று தொடங்கும் பாடல்தான். இந்த பாடலுக்கும் நாங்கள் தொடங்கிய தமிழ் சங்கத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
சங்கம் தொடங்கிய நாளில் இருந்து
இன்றுவரை சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் முதல் நிகழ்ச்சியாக நடனத்துடன் கூடிய சங்கே முழங்கு பாடல் முழங்கும். டான்டினாங்க் நகரசபை மண்டபம், ஸ்பிரிங்வேல் நகரசபை மண்டபம், மற்றும் டாண்டினாங்க் மேல்நிலைப்பள்ளி போன்ற பல இடங்களில் பெருந்திரளான மக்களுடன்
இரவு நெடுநேரம் வரை நிகழ்ச்சி நடக்கும்.
இலங்கைத் தமிழர் தமிழ்மீது அளவுக்கும் அதிகமான பற்றுடையவர்கள். எனக்கும் தமிழில் பற்றுண்டு என்பதால் பாரதிதாசனின் பாடல் பிழையான பாடல் என்றால் இதுவரை நிகழ்ச்சியில் அனுமதித்திருக்க மாட்டோம்.
திரைப்படத்தின் மூலம் நன்றாக பிரபலமடைந்த இப்பாடலை நாங்கள்
சங்கத்தின் விழாக்களில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக
பயன்படுத்தி வருகிறோம். எவரும் பிழை கூறவில்லை. நன்றாக தமிழறிந்த ஆன்றோர் சான்றோர் என எவருமே பிழை கூறவில்லை. நானும் எனக்குத் தெரிந்த பலரிடம் கேட்டேன். யாரும் தப்பாக எதுவும் சொல்லவில்லை.
ஆதலால் தற்சமயம் நான் இச்சங்கத்தின் புரவலராக இருப்பதாலும் இன்னும் சங்கே முழங்கு பாடலை இச்சங்கம் பயன்படுத்தி வருவதாலும் அமைதி காப்பது அழகல்ல என்ற நோக்குடன் நமக்குத் தெரிந்தவற்றைக் கூறலாம் என்பதே இக்கட்டுரையின்
நோக்கம்.
இக்கட்டுரையை என் தேடலில் கிடைத்த தகவல்களை வைத்தே எழுதியுள்ளேன்.
எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்ததே
சமூகத்திடமிருந்து பெற்ற கருப்பொருள்தான் என்பதையும் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
-சங்கர சுப்பிரமணியன்.
(முற்றும்)