“அம்பரம்” – சிங்கப்பூர் எழுத்தாளராகிய ரமா சுரேஷ் எழுதிய முதல் நாவல்! … நூன்முகக் குறிப்பு … நடேசன்.
நாவலில் கதாநாயகன் யூசுப், 1930 இல் பர்மாவில் பேகு என்ற இடத்தில் நடந்த நில நடுக்கத்தில் தனது தாயை இழக்கிறான். அதேபோல் அவனது மனைவியை, ஜப்பானியர் பிரித்தானியரிடம் இருந்து சிங்கப்பூரை கைப்பற்றிய காலங்களில் அவர்கள் செய்த கொலைகளால் பறி கொடுக்கிறான் என்ற வரலாற்றோடு கையறு நிலையில் சிங்கப்பூரில் இருந்து ரங்கூனுக்கு மீண்டும் கப்பல் ஏறுகிறான். யூசுப் வாழ்க்கையோடு தொடரும் நில நடுக்கம், போர் முதலான இரண்டு சம்பவங்கள், நாவலை வாசிக்கும் எங்களையும் வைரசாக தொற்றுகிறது.
இனிப்பான உணவை உண்டபின், அந்த நினைவுகள் நாக்கைவிட்டு அகலமறுப்பதுபோல், ஒரு நாவல் வாசித்தபின்னர், அதில் வரும் ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்கள் நமது சிந்தனையில் நாட்கள் நினைவிருந்தால், அந்த நாவல் வெற்றியடைந்ததாக நினைப்பேன். இதுவே காலம் காலமாக காவியங்களின் அளவீடாகும். பாரதம் வாசிக்காதவர்களும், என்னடா வீமனைப்போல் தின்கிறாய் என்பார்கள். எந்தப் பெண் தனக்கு ராமர் போன்ற கணவனை விரும்பாதவர்கள்? இவை எல்லாம் கற்பனைக் கதைகளானாலும் பாத்திரங்களது குணம், செயல்கள் நம்மைப் பாதிக்கிறது. இப்பொழுது ராமனை, வெறுப்பவர்களும் கம்பனது பாதிப்பின் தழும்பைத் காவுகிறவர்களே.
இதைவிட ஒரு நிலத்தில் நிகழ்வோடு நாவல் பின்னும்போது, எங்களை அந்த நிலத்திற்கு கையை இறுகப்பிடித்து அழைத்துச் செல்லும் ரமா சுரேஷின் உத்தி வெற்றியளிக்கிறது. ஜோர்ஜ் ஓர்வலின் பர்மிய டேய்ஸ் (Burmese Days ) என்ற நாவலில் கதாநாயகன் தனது காதலைச் சொல்ல முயலும்போது, பர்மாவில் நில நடுக்கம் ஏற்பட்டு, அதன் களேபரத்தில் அந்தக் காதல் நசிந்துவிடுகிறது. அந்த நாவலில் வரும் இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதுவும் என்னை பர்மாவிற்கு பயணம் செய்ய தூண்டிய விடயங்களில் ஒன்று. எனது முதல் நாவல் வண்ணாத்திக் குளத்தில் வவுனியா சந்தை எரியும்போது இராணுவத்தினர், அதுவரையும் தம்பதியாகாத தமிழ் ஆணை, துப்பாக்கியால் அடிக்க முயன்றபோது, சிங்கள பெண்ணான சித்திரா “மகே சுவாமி புருசயா” ( எனது கணவன்) எனச் சிங்களத்தில் சொல்லி அணைத்து இராணுவத்தினரிடம் இருந்து அவனைப் பாதுகாப்பாள் . இந்தச் சம்பவம் நிச்சயமாக வண்ணாத்திக்குளத்தை வாசித்தவர்களது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
முஸ்லிம் இந்திய பெண்ணுக்கும், பவுத்த பர்மிய இளைஞனுக்கும் பிறந்து, சகோதரனைப் பலி கொடுத்த யுசுப் என்ற சிறுவன் தாயுடன் வாழ்கிறான்.
அக்காலத்தில் தந்தை, குடும்பத்திலிருந்து விலகி துறவியாகிறான். தாயின் அரவணைப்பில் யூசுப் வளரும் போது , நில அதிர்வினால் தாயை இழந்து அனாதையாகிறான். அவன் சிவராமன் என்ற தமிழரால் சொந்த மகனாக வளரும்போது குத்துச் சண்டை பயிலும் வீரனாகி, அதில் நடந்த பயிற்சியில் , தனது நண்பனைக் குத்தியபோது அவன் இறந்துவிடுகிறான்.
யூசுப், நண்பனை இழந்த சோகத்தால் குத்துச்சண்டையை மறந்திருந்தான். ஆனால், திருமணமாகியபின்னர் அவனது மனைவி, அவனைக் குத்துச்சண்டையில் கலந்துகொள்ளும்படி கேட்கிறாள். அவளது வேண்டுகோளுக்கிணங்க பர்மாவில் குத்துச்சண்டையில் ஈடுபட்டுப் புகழ்பெற்ற யூசுப், பின்லாந்தில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் வாய்ப்புப் பெறும் நோக்கில் சிங்கப்பூர் செல்லுவதும், அங்கு ஒலிம்பிக் பந்தயம் ;, யுத்தத்தால் நடக்காததால் யூசுப் கப்பலில் மாலுமியாகிறான்.
அப்படி சென்றவன்,ஜப்பானியர் தென்கிழக்காசியப் பிரதேசத்தை பிடிக்கும் வரலாற்றின் கொடுமையான கரங்களில், இவனது குடும்பம் சிங்கப்பூரில் சிதையும் வரலாறுதான் இந்த நாவல் எனச் சுருக்கமாகச் சொல்ல முடியும்.
நாவலின் ஆரம்பம் , ஆங்கிலேயர் புத்த கோயிலின் மணியைத் திருட முயலும் உண்மைச் சம்பவம் நடந்த வருடத்திலிருந்து ஆரம்பிப்பதால் , நாவல் நமக்குள் இந்தக் கதை உண்மையானது என்ற பிம்பத்தை மனதில் உருவாக்குகிறது. இந்தச் சம்பவம் நாவலுக்குத் தொடர்பற்ற போதிலும், பர்மியரது மனநிலையை ஆரம்பத்திலேயே நமக்கு விளக்குவதால், நாவல் உண்மையான கதைதான் கற்பனையல்ல என்ற தோற்றத்தைக் கொடுத்து எம்மை நாவலின் பக்கங்களின் உள்ளே இழுக்கிறது.
புதிய பிரதேசத்தில், வித்தியாசமான பாத்திரங்கள் இன- மத- சாதி வித்தியாசமும் அற்று ஒன்றுடன் ஒன்று இணைவது, இதுவரையில் பார்த்த தமிழகத்து நாவல்களில் இல்லாதது. அங்கு ஒவ்வொருவரும் தங்களது சாதி மதங்கள் என்ற கூட்டுக்குள் இருந்து, முடிந்தால் இரை தேடிப்போன தாய்ப் பறவையைக் காணாமல் எட்டிப்பார்க்கும் குஞ்சுகளாக கூட்டிலிருந்து அங்கும் இங்கும் எட்டிப் பார்த்து கதை எழுதுவார்கள். தமிழர்கள் வெளிநிலத்தில் வாழும்போது சாதி இன மதக்கூறுகள் தளர்கின்றன.
இந்த நாவல், தென் கிழக்காசியாவில், பிரித்தானியர்களது இறுதிக் காலத்தில் இந்தியர்கள், அதிலும் முக்கியமாக தமிழர்களது அலைவுகளின் காலக்கண்ணாடியாகிறது. அத்துடன் பவுத்த பர்மியச் சமூகத்தின் முக்கிய கூறுகளை நமக்குப் புரியவைக்கிறது.
இலங்கை, இந்தியா போன்று பர்மாவையும் ஆங்கிலேயர் ஆண்டபோதிலும், பர்மியர்கள் தங்களது விழுமியம், மொழி, விளையாட்டு, மற்றும் கலாச்சாரங்களை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள் என்பதைப் நாவல் புரியவைக்கிறது . அதேபோல் சிங்கப்பூரில், சீன சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் தொன்ம நம்பிக்கைகளை நமக்குத்
தெரியவைக்கிறது. இந்த விளக்கங்கள் நாவலுக்கு மானிடவியல்(Anthropology) சாயலைக் கொடுக்கிறது. இது நாவல் விமர்சகர்கள் சிலருக்குப் பிடிக்காத போதிலும், மனிதர்கள் வாழும்போது அங்குள்ள கலாச்சாரமே, பாத்திரங்களது அக, புற நிகழ்வுகளை மட்டுமல்ல, மனவோடையையும் தீர்மானிக்கிறது. புதிய நிலத்தை வைத்து நாவல் எழுதும்போது அந்த மண்ணின் கலாச்சாரத்தை வாசகர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். குடும்பம் பிடிக்காத பர்மியன் துறவியாவதும், ஐரோப்பியன் மறு திருமணம் புரிவதும், நம்மவர் மதுவில் மூழ்குவதும் அந்தத்தந்த சமூகத்திற்கு உரியது.
நாவலின் முதல் பாதி பர்மாவிலும், மறுபாதி சிங்கப்பூரிலும் நடக்கிறது.
பர்மாவில் சம்பவங்கள் நடக்கும்போது, உறவுகள்- சிநேகங்கள் என விட்டுக் கொடுப்புகள், நமக்கு சாமானிய மனிதரை பிரதிபலிக்கிறது. அதேபோல் நாவலில் , தமிழர்கள், மலையாளிகள் வங்காளிகள் என்ற பேதமற்று வாழும் வாழ்வு அமைதியாக , இரங்கூன், ஐராவதி என்ற இரண்டு ஆற்றை அண்டிய பிரதேசங்களில் ஓடுகிறது.
நாவலின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் நிகழும் விடயங்கள், இரண்டாவது உலகயுத்தம் பற்றிய திரைப்படக் காட்சிகளை மனதில் நிறுத்துகிறது. ஆனால் , அவை ஐரோப்பாவில் நடந்ததாக நான் பார்த்தவையே . ஐரோப்பியர் எழுதிய வரலாற்றை மட்டுமே நாம் படித்ததால் ஆசியாவில் நடந்த அழிவுகள் நமக்கு அதிகம் பழக்கமில்லை . முக்கியமாக ஜப்பானியர், சீனர்களை உள்மங்கோலியாவில் (inner Mongolia) இலட்சக்கணக்கில் கொலை செய்ததை இலகுவாக உலகம் மறந்துவிட்டது .
சிங்கப்பூருக்கு வந்த யூசுப்பின் மச்சான் (மனைவியின் தம்பி ) சிங்கப்பூரில் மறைந்து விடுவதால், அவனது முழுக் குடுப்பமும் பர்மாவுக்குத் திரும்பாமல், அவனைத் தேடி அலைவதாகக் கதை தொடர்கிறது. இங்கு கதையில் நடக்கும் சம்பவங்கள், தற்செயலாக நடக்காமல், காரணங்கள்( Causality) தரப்படுவது ஒரு சிறந்த நாவலாசிரியரது திறமை . இங்கே ஆசிரியரே கதைகளின் முடிச்சுகளைத் தருகிறார் .
ஜப்பானியர்கள், சிங்கப்பூரைக் கைப்பற்றி வைத்திருந்த காலத்தில் செய்த கொடுமைகள், திரைக்கதைபோல் பக்கங்களில் மட்டுமல்ல நம் மனதிலும் விரிகின்றது. தரையில் நடக்கும் போர்க்களக் காட்சிகள் மட்டுமல்ல, கடலில் நடக்கும் போரில், பெரிய கடற்படை கப்பல் மெதுவாக மூழ்குவதும், சாதாரண போர் வீரர்களை வெளியகற்றிவிட்டு இறுதியில் கப்டன் கப்பலுடன் மூழ்குவதும் திரைக்காட்சியாகிறது.
நாவலில் சில இடங்கள் தத்துவமானவை.
உதாரணமாக:
“சிவராமா , அவன் நம்மைப்போல் எந்த சித்தாந்தங்களுக்கும் பைத்தியகாரத்தனமாக அடிமையாகவில்லை. நாமெல்லாம் மனுசர்களுக்கு ஏத்த மாதிரி வாழ்வதுபோல் நடித்துக் கொண்டிருக்கிறோம். அவனாவது சரியாக வாழ்ந்துபோகட்டும் “
“ உன்னைத்தாய நான், தம்பி- ஐயா -ராசா -யூசுப்- என் குலசாமி என்று எப்படிக் கூப்பிட்டாலும் அத்தனை பெயர்களும் உன்னைத்தான் சேரும். அது போலத்தான சாமியும் உன்னைத்தான் வந்து சேரும் “ என்கிறார் அவனை எடுத்து வளர்த்த தந்தை,
இதை விட மத நல்லிணக்கத்தை அழகாக யாராவது பேசமுடியுமா?
இது முதலாவது நாவல் எழுதியவரது எழுத்துப் போலவா இருக்கிறது?
பா. சிங்காரத்தின் இரு நாவல்கள்: கடலுக்கப்பால், புயலிலே ஒரு தோணி முதலான நாவல்களைப் படித்தவன் . அவை புதிய தளம் என்று பலரால் புகழப்பட்டது. என்னைப் பொறுத்தவரை அம்பரம் புதிய தளத்துடன் வசனங்களைக் காட்சியமைப்பாகத் தருவதில் முன்னிற்கிறது.
நாவலில் குறை இல்லையா என்றால் உள்ளது. அவை நாவலது நோக்கத்தை பாதிக்காதவை . ஒன்று மட்டும் என்னைப் பாதித்தது : ஒரு அத்தியாயத்தின் இறுதியில் யூசுப் , நண்பனைக் குத்துச்சண்டையில் அடித்தபோது அவன் மயங்கி விழுகிறான் . அடுத்த அத்தியாயத்தில் யூசுப் திருமணமாகி, முதலிரவின்போது மயங்கிய நண்பனைப் பற்றிய எந்த சிந்தனையும் அற்று மகிழ்கிறான். அடுத்த அத்தியாயத்தில் மயங்கிய நண்பன் மரணமடைகின்றான். இச்சம்பவங்கள் நாவலில் வரும்போது யதார்த்தமாக இல்லை.
பல வருட ஆய்வின் பின்பாக வெளிவந்த நாவல். அத்துடன் இதில் மேற்கு நாட்டு நாவலது சாயலும் உள்ளது . தமிழகத்திற்கு வெளியே இருக்கும் களத்தை சித்திரிக்கும் நாவல் என்பதால் பலரும் வாசிக்கவேண்டும். நாவலாசிரியர் ரமாவுக்கு எனது வாழ்த்துகள் .
அம்பரம் கரிகாற்சோழன் விருது பெற்றது.
–0—