இலக்கியச்சோலை

கலைக்குடும்பத்தின் வாரிசு கலையரசி சின்னையா ! வளரிளம் பருவம் முதல், புகலிட நாடுகள் வரையில் இலக்கியம் பேசும் ஆளுமை ! ! முருகபூபதி.

முதல் சந்திப்பு:

கலைக்குடும்பத்தின் வாரிசு கலையரசி சின்னையா !

வளரிளம் பருவம் முதல், புகலிட நாடுகள் வரையில் இலக்கியம் பேசும் ஆளுமை ! !

முருகபூபதி

எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த ஸ்ரான்லி கல்லூரி ( பின்னாளில் இக்கல்லூரி கனகரத்தினம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது ) ஆண்கள் விடுதியிலிருந்து ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.

நவராத்திரி காலத்தில் நடந்த கலைமகள் விழாவில் ஒரு பெரியவர் கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசினார். அவர்தான் வித்துவான் வேந்தனார் என்று கல்லூரி அதிபர் மண்டலேஸ்வரன் அறிமுகப்படுத்தினார்.

“ வித்துவான் வேந்தனார், கொழும்புத்துறை ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையிலும் விரிவுரையாளராகப்பணியாற்றியவர். “ என்று அவரிடம் கற்ற எழுத்தாளர் தெணியான், பின்னாட்களில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் வித்துவான் வேந்தனார் குழந்தை இலக்கியத்திற்கு வளமூட்டியவர். அவரது

“ காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா,

பள்ளிக்கூடம் விட்டபோது பாதி வழிக்கு வந்து துள்ளித் குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில் போடும் அம்மா…

என்ற பாடலை நாம் ஓசைநயத்துடன் பாடமுடியும். இலங்கையில் பல தமிழ்ப்பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த பிரபல்யமான பாடல் !

கொழும்பு கட்டுப்பெத்தை ( மொரட்டுவை ) பல்கலைக்கழகத்தில் இயங்கிய மாணவர் தமிழ் மன்றம் 1980 இல் வெளியிட்ட நுட்பம் மலரில் ஈழத்து குழந்தைப்பாடல்கள் என்ற கட்டுரையை எழுதியிருந்த திருமதி கலையரசி சின்னையா அவர்கள், வித்துவான் வேந்தனாரின் மகள் என்ற தகவல் காலம் கடந்துதான் எனக்குத் தெரியவந்தது.

2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மெல்பனில் நாம் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியபோது, அதன் கருத்தரங்கிற்காக கட்டுரை அனுப்பியிருந்த கலாநிதி இளங்கோ, வித்துவான் வேந்தனாரின் மற்றும் ஒரு மகன் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

இலங்கையில் நான் பார்த்துப்பேசியிராத கலையரசி சின்னையா அவர்களை அவுஸ்திரேலியா சிட்னியில்தான் முதல் முதலில் சந்தித்தேன்.

இவர் பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி எனவும், கொழும்பு , யாழ்ப்பாணம் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப்பணியாற்றியவர் எனவும், பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், பொன். பூலோகசிங்கம் ஆகியோரின் அபிமான மாணவி எனவும் நண்பர் த. கலாமணி சொல்லித் தெரிந்துகொண்டேன்.

2002 ஆம் ஆண்டு கலையரசி அவர்களின் தொலைபேசி இலக்கத்தை தேடிப்பெற்று தொடர்புகொண்டேன்.

அந்த வருடம் எனது சில நூல்கள் வெளியாகியிருந்தன. அவற்றுக்கு சிட்னியில் அறிமுக நிகழ்வு நடத்துவதற்கு தீர்மானித்து, நாளும் குறித்துவிட்டு, கலையரசியை அதற்கு தலைமை தாங்குமாறு கேட்டேன். அவர் முதலில் தயங்கினார்.

பின்னர் எனது அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அப்போதும் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.

அந்த நிகழ்வில் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்களையும் உரையாற்ற அழைத்திருந்தேன். அவரும் சம்மதித்தார். நிகழ்ச்சி நிரலை தபாலில் அவருக்கு அனுப்பினேன். அதனைப்பார்த்த பேராசிரியர் உடனே என்னைத் தொடர்புகொண்டு, “ என்னடாப்பா…. கலையரசி எனது மாணவி. அவவின்ட தலைமையில் என்னை பேசப்போட்டிருக்கிறாயே…? ! “ என்றார்.

உடனே நான், “ சேர்… ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் புதல்விதான் சந்திரிக்கா. புதல்வி ஜனாதிபதியானபோது, மகளின் முன்னிலையில்தான் ஶ்ரீமாவோ சத்தியப்பிரமாணம் செய்து பிரதமர் பதவி ஏற்றார் . “ என்றேன்.

“ நீ…பத்திரிகையாளன். உன்னிடம் பேசித் தப்பிக்க முடியாது “ என்று சொல்லி அட்டகாசமாகச்சிரித்தார்.

அந்த இலக்கிய நிகழ்ச்சியை அமரர் சுந்தா நினைவரங்கில் கலையரசி சின்னையாவின் தலைமையில் நடத்தினோம். எஸ். பொ. , த. கலாமணி, செ. பாஸ்கரன், ஓவியர் ஞானம்,  கானா. பிரபா, தன்னார்வத் தொண்டர்கள் கணக்காளர் துரைசிங்கம், மருத்துவர் சின்னத்தம்பி, கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன், எஸ்.பொ.வின் மகன் மருத்துவர் அநுரா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அதன்பின்னரும் கலையரசி, எனது சில நூல்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார். 2002 இல் வெளியான எனது யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூல் மெய்நிகரில் அறிமுகமானபோதும், இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

கலையரசியிடமிருந்த குறிப்பிடத்தகுந்த இயல்பு என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு நூலைப்பற்றி அவர் பேச முன்வரும்போது, முழுமையாகப் படித்து உள்வாங்கிக்கொண்டு, சொல்ல வேண்டிய குறிப்புகளை தெளிவோடு, ஆற்றொழுக்கான நடையில் சொல்வார். ஆனால், அவரது கையில் எந்தவொரு குறிப்பும் இருக்காது. இவரது உரையிலிருக்கும் நினைவாற்றல் எம்மை வியப்பில் ஆழ்த்தும்.

கடந்த 05 ஆம் திகதி சிட்னியில் நடந்த கவிஞர் அம்பியின் இறுதி நிகழ்விலும், இவரையும் இவரது கணவர் சின்னையாவையும் சந்தித்துப் பேசியிருந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் தமது தந்தையாரின் நூல் மற்றும் பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வையும் கலையரசி வெகு சிறப்பாக நடத்தினார். அந்நிகழ்வில் நானும் உரையாற்றினேன்.

இவ்வாறு எமது புகலிட வாழ்வில் எம்மோடு இணைந்து இலக்கியப்பயணம் மேற்கொண்டு வரும் கலையரசி சின்னையா பற்றிய பதிவை எழுத முன்வந்தபோது, முன்னைய நிகழ்வுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன.

கலையரசி, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1967ஆம் ஆண்டில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் படிப்பை மேற்கொண்டு 1970 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் சித்தி பெற்றவர்.

1973 இல் பேராசிரியர் சு. வித்தியானந்தன் , பேராசிரியர் எஸ். தில்லைநாதன் ஆகியோரின்

வழிகாட்டலில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு

முதுகலைமாணிப் பட்டம் ( M A ) பெற்றார்.

தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராக நியமனம் பெறுகிறார்.

தமது 22 வயதில் நிரந்தர உதவி விரிவுரையாளர் நியமனம் இவருக்கு கிடைக்கிறது. அதன்பிறகு 1976 இல் விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்றார்.

அதன்பிறகு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைக்கு மாற்றம் பெற்று வருகிறார்.

அங்கு தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி 1982 இறுதியில் திடீரென மறைந்ததையடுத்து குறுகிய காலம் அங்கு தமிழ்த்துறைத் தலைவராக நியமனம் பெற்று, 1983 இல் முதுநிலை விரிவுரையாளராகிறார். அன்றிருந்த போர்ச்சூழல் காரணமாக, சென்னைக்குப் பயணமாகிறார்.

அத்தோடு இவரது 14 வருடகால பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி நிறைவடைகிறது.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செய்யுள் – கவிதை இலக்கியம் – குழந்தைப் பாடல்கள்.

– தமிழ் இலக்கணம் தொடர்பாகவே இவரது விரிவுரைகளும் ஆய்வுகளும் அமைந்தன.

1974 இல் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, இவரால் வாசிக்கப்பட்ட கட்டுரை: “ஈழத்துப் பள்ளுப் பிரபந்தங்கள்.”

1976 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மாநாடு , மட்டக்களப்பில் நடந்தபோது, இவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை: ” நீலாவாணன் கவிதைகள் – ஒரு மதிப்பீடு”.

1981 இல் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மதுரையில் நடந்தபோது, இவர்

“ஈழத்து இலக்கண முயற்சிகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவை தவிர பல கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார். அத்துடன் இலக்கிய இதழ்கள் மலர்களிலும் இவரது பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

அத்தகைய ஒரு கட்டுரையைத்தான் 1980 ஆம் ஆண்டளவில் நுட்பம் மலரிலும் பார்த்தோம்.

கலையரசி சிறந்த இலக்கிய ஆய்வாளர் மட்டுமல்ல, கருத்தாழத்துடன் உரையாற்றும் சிறந்த பேச்சாளருமாவார்.

தந்தையார் ( அமரர் ) வித்துவான் வேந்தனாரின் வழிகாட்டல் இவருடைய பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆரம்பித்திருக்கிறது. அதனால், பேச்சுத் துறையிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது.

பின்னாளில் 1974 இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகமாக மாறிய யாழ்.

பரமேஸ்வராக் கல்லூரியில் ஐந்தாம் வகுப்புவரையும் கற்றுவிட்டு, பின்னர் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இணைந்தவர்.

சிறுவயதிலிருந்தே மேடைப் பயம் இல்லாத தன்னம்பிக்கை இவரிடமிருந்தமையால், இவரது ஆசிரியர்கள்

பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க

ஊக்கமளித்தனர் . பரிசுகளும்

நடுவர்களின் பாராட்டுகளும் இவரது

ஈடுபாட்டை மேம்படுத்தின.

பல்கலைக் கழகத்திலும் பேராசிரியர் வித்தியானந்தனின் உந்துதலினால் தமிழ்ச்சங்கம் நடத்திய பேச்சப் போட்டி , விவாதப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர். “ தன்னை பொது மேடைகளில் பேசும் நிலைக்கும் பேச்சாளராக அறிமுகப்படுத்தி உயர்த்தியவர் பேராசிரியர் வித்தியே. “ என்று இன்றளவும் நன்றியோடு சொல்லிவருகிறார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இவர் பணியாற்றிய காலத்தில் கண்டி சைவ மகாசபை விழாக்களிலும் மாத்தளை முதலான இடங்களிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் பதவியேற்றபின்பும் பல

இலக்கிய, சமய விழாக்களிலும் கம்பன் கழக விழாக்களிலும் பங்கேற்றவர்.

இலங்கை வானொலியிலும் இவரது இலக்கிய உரைகள் நிகழ்ந்துள்ளன.

1984 இற்குப்பின்னர் கலையரசி, சென்னை, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என தமது அன்புக்கணவர், செல்லக்குழந்தைகள் சகிதம் குடும்பத் தலைவியாக அலைந்துழன்றமையால், தனது கலாநிதி பட்ட ஆய்வினையும் நிறைவு செய்ய முடியாமல் போயிருப்பதையும் கவலையுடன் சொன்னார்.

சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றிய பேராசிரியர் ச.வே . சுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டலில் ஆராய்ச்சி மாணவியாக கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் தொடங்கியும் கலையரசியால் நிறைவு செய்ய முடியவில்லை.

ஆராய்ச்சி மாணவியாக இருந்த காலத்தில், அந்த நிறுவனத்தின் வாராந்த கருத்தரங்கம் , தமிழ் இலக்கியக் கொள்கைக் கருத்தரங்கம் என்பனவற்றில் இடம்பெற்று

கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கும், கலையரசி, நியூசிலாந்தில் வெலிங்டனுக்கு புலம்பெயர்ந்த பின்னர், அங்கிருந்த

தமிழ்ச் சங்கத்தின் செயற்பாட்டிலும் இணைந்து கொண்டவர்.

தமிழ்த் தென்றல் என்ற சங்கத்தின் இதழில் “ தேவை நோக்கி எங்கள் மொழி – பண்பாடு என்பவற்றைப் பேணுவது “ தொடர்பான கட்டுரைகளை அதில் தன்னால் எழுத முடிந்தது எனச்சொல்கிறார். குறிப்பிட்ட வெலிங்டன் தமிழ்ச்சங்க நிகழ்வுகளிலும் கலையரசி உரையாற்றியிருப்பவர்.

அங்கே 1988 இல் தொடங்கிய தமிழ்ப் பாடசாலையின் செயற்பாடுகளில் இணைந்து

திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி என்பனவற்றை நெறிப்படுத்தியவர். பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் பாடங்களையும் எழுதி உதவினார்.

கலாசாரப் பொறுப்பாளராக கலை நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்திருப்பவர்.

1992 இல் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் சிட்னியில் நடத்திய தமிழ் மாநாட்டில் நியூசிலாந்து பிரதிநிதியாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் இவருக்கு கிட்டியது.

“பசுபிக் பிராந்தியத்தில் தமிழ் மொழியின் நெடுங்கால நிலை என்ன? நியூசிலாந்துக் கண்ணோட்டம் ” என்ற இவரது கட்டுரை மிகுந்த வரவேற்பை அன்று பெற்றதையடுத்து பலரின் வேண்டுகோளின் பிரகாரம், இவரது அக்கட்டுரை தொடர்பாக சிறப்புக் கருத்தரங்கும் நடைபெற்றது.

பாடிய வாயும் ஆடிய காலும் எங்கு சென்றாலும் சும்மா இருக்காது என்பார்கள். உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தங்கள் தாயகம் விட்டு உலகில் எந்தப்பகுதிக்குச்சென்றாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு எம்மத்தியில் மற்றும் ஒரு உதாரணம்தான் திருமதி கலையரசி சின்னையா அவர்கள்.

1999 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இவர் அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்தபின்னர், இங்கும் ஓய்வின்றி இயங்கிவருகிறார்.

சிட்னியில் இவருக்குத் தெரிந்தவர்கள் அதிகம். பல்கலைக் கழகத் தொடர்பு மற்றும் தமிழ் ஆர்வலர்களின் அறிஞர்களின் நட்புறவு, முன்னர் ஊரில் கற்ற பாடசாலைகளின் பழைய மாணவிகள் , ஆசிரியர்கள் தொடர்பு, குடும்ப உறவுகள் இவருக்கு சிட்னியை வரப்பிரசாதமாக மாற்றியுள்ளது.

அதனால், நாம் இவரிடம் கலை, இலக்கிய ரீதியாகக் கற்றதும் பெற்றதும் அதிகம்.

சிட்னியில் பல மேடைகளில்

நிகழ்வின் தலைவராக, சிறப்பு விருந்தினராக

சிறப்புப் பேச்சாளராக, பட்டிமன்றத் தலைவராகவும்

இலக்கிய விழாக்கள் , நூல் வெளியீட்டு விழாக்கள் , சான்றோர் தின விழாக்கள் , மூத்தோர் சங்கங்களின் நிகழ்வுகள் , சமய விழாக்கள், யோகர் சுவாமி குருபூஜை நிகழ்வுகள் எனப் பலவற்றில் பல தடவை பங்கு பற்றி, தனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து வருபவர்.

சிட்னி பாடசாலைகளுடனும் , அவுஸ்ரேலியப் பட்டதாரிகள் சங்கத்துடனும் தொடர்புகளைப்பேணி வருகிறார். தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கு ஆலோசகராகவும்,

பரீட்சைக் குழு அங்கத்தவராகவும் இயங்கிவருகிறார்.

கலையரசி எவ்வாறு தன்னை ஆளுமைப்பெண்ணாக வளர்த்துக்கொண்டார் என்பதற்கும் சில தகவல்களை இங்கு தருகின்றோம்.

1966 இல் கலையரசி தனது பல்கலைக் கழகப் படிப்பினைத் தொடங்குவதற்குச் சில மாதங்களின் முன்னர்தான் தந்தையார் வித்துவான் வேந்தனார் அமரத்துவம் எய்துகிறார்.

அந்த எதிர்பாராத திடீர் இழப்பின் ஆறாத் துயரத்தின் மத்தியிலும் சில உறுதியான எண்ணங்கள் இவரது மனதில் கருக்கொள்கின்றன.

தமிழைச் சிறப்புப் பாடமாகப்

படிக்க வேண்டும்.

தந்தையாரின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

தனது இக்கனவுகளை நனவாக்குகிறார்.

தந்தையின் மரணத்தின் பின்னர் அவரது

இலங்கை – இந்திய நண்பர்களைத் தொடர்பு கொண்டு கட்டுரைகள் , கவிதைகளைப் பெற்று, கடித முறையில் தனது மனக்கவலையை எழுதி ” வேந்தனாரின் புகழ் வளச் சோலையில் ஓரு மலர்” எனும் நினைவு மலரை 31 ஆம் நாளில் தந்தையின் நண்பர்களின் உதவியுடன் வெளியிட்டிருக்கிறார்.

1978 இல் யாழ். பல்கலைக் கழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் எழுத்தாளர் சொக்கன், இவரது தந்தையார் பற்றி ஒரு நூல் எழுத விரும்பிய பொழுது, தந்தை சேகரித்து வைத்திருந்த ஆக்கங்களைப்

படித்து வியப்படைந்து, அக்கட்டுரைகளை வகைப்படுத்தி சொக்கனிடம் கொடுத்திருக்கிறார். அந்த நூல் ” தமிழ்ப் பேரன்பர் வித்துவான் வேந்தனார்” என்ற பெயரில் 1984 இல் வெளிவந்தது.

இவ்வாறு தனது கனவுகளை நனவாக்க முயன்றிருக்கும் கலையரசியின் பூர்வீக இல்லத்தின் பெயர் கலைச்சோலை. போர்க்காலத்தில் அங்கிருந்த பெறுமதியான நூல்கள் அனைத்தையும் இழந்திருக்கிறார்.

1950 – 1956 காலப்பகுதியில் தினகரன் பத்திரிகையில் தந்தையார் வித்துவான் வேந்தனார் எழுதிய கட்டுரைகளை இலங்கை தேசிய சுவடித் திணைக்களத்திலிருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் உறவினரின் உதவியுடன் பிரதி எடுத்து , 2010 இல் மூன்று நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு வெளிவந்த நூல்கள்:

கவிதைப் பூம்பொழில் , குழந்தை மொழி, தன்னேர் இலாத தமிழ்.

இவை தவிர, வேந்தனாரின் இசையமைத்துப் பாடப்பட்ட 13 பாடல்கள் அடங்கிய இறுவட்டையும் வெளியிட்டார்.

இந்த வரவுகள் கனடா, இலங்கை , அவுஸ்திரேலியா,

நியூசிலாந்து, நோர்வே , இங்கிலாந்து முதலான நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவ்வெளியீட்டில் கிடைத்த நிதியனைத்தையும் கலையரசி , தந்தையாரின் பெயரில் பொதுப்பணி புரியும் அமைப்புகளுக்கு வழங்கினார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று எழுதினார் கவியரசு கண்ணதாசன். ஆனால், அவர், “ கணவன்மார் அமைவதும் பிள்ளைகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம். “ என்று எழுதிவைக்காமல் போய்விட்டாரே ! ? என்ற ஆதங்கம் எனக்கு என்றும் உள்ளது.

கலையரசியின் அருமைக்கணவர் – பொறியியலாளரான திரு. சின்னையாவும் செல்வப் புதல்விகள் மருத்துவர்கள்

நர்மதை தேவா மற்றும் நிரந்தரி சின்னையா ஜீவசிங்கா ஆகியோரும் கலையரசியின் கலை, இலக்கியப்பணிகளுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

கலையரசியின் வாழ்வும் பணிகளும் முன்னுதாரணமானவை. எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.