கதைகள்

“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 29… – செங்கதிரோன்.

மருதானை ‘நொறிஸ்சனல்’ வீதியில் அமைந்திருந்த சிவசிதம்பரம் வீட்டிலிருந்து வெளியேறிய கோகுலனும் ஏனைய நான்கு இளைஞர்களும் கடையொன்றில் மத்தியானச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு ‘சிற்றிமிசன்’ விடுதி சென்று முதல்நாள் இரவுப் பயணத்தின் அலுப்பும் களைப்பும் தீரக் குட்டிப் பகல் தூக்கமொன்று போட்டு எழுந்தனர். நேரம் பி.ப 3.00 மணியாகி விட்டிருந்தது. எழுந்து குளித்து வெளிக்கிட்டு மட்டக்களப்பு நோக்கிய இரவுப் புகையிரத வண்டிப் பயணத்திற்கு ஆயத்தமாய்த் தத்தம் பைகளைக் காவிக்கொண்டு ‘சிற்றிமிசன்’ விடுதியை விட்டு வெளியேறினர்.

கொழும்புக் கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய இரவுப் புகையிரதம் இரவு எட்டு மணிக்குத்தான் புறப்படுமென்பதால் நேரம் இருந்தது. அன்று பின்னேரம் 4.00 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் தந்தைசெல்வா அஞ்சலிக்கூட்டமொன்று நடைபெறவிருப்பது கோகுலனின் ஞாபகத்திற்கு வந்தது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ.ஜே.வி.செல்வநாயகம் (தந்தைசெல்வா) 26.04.1977 அன்று காலமாகிவிட்டிருந்தார்.

அன்னாருக்கான அஞ்சலிக்கூட்டமொன்றினை அரசாங்க எழுதுவிளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

‘சிற்றிமிசன்’ விடுதியை விட்டு வெளியேறிக் கோகுலனும் மற்றவர்களும் வீதியில் இறங்கிச் சிற்றுண்டிச்சாலையொன்றினுள் புகுந்து மாலைத் தேனீர் பருகிவிட்டு வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிசன் மண்டபம் நோக்கிப் பயணமாகினர். ‘சிற்றிமிசன்’ பகல் தூக்கமும் மாலைத்தேனீரும் உடலில் உற்சாகத்தை ஊட்டியிருந்தன.

மாலை 4.00 மணிபோல் வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிசன் மண்டபத்தை வந்தடைந்தனர்.

மண்டபம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மண்டபம் நிரம்பி வெளி ‘விறாந்தை’களிலும் மக்கள் திரண்டிருந்தார்கள். கோகுலனும் கூடவந்த இளைஞர்களும் மேடையைப் பார்ப்பதற்கு வசதியாக ‘விறாந்தை’யின் ஓர் ஓரத்தில் இடம்பிடித்து நின்றனர்.

மேடையில் அமிர்தலிங்கம் – எதிர்க்கட்சித்தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரி.பி.இலங்கரட்னா – லங்கா சமஜமாஜக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பேர்னாட் சொய்சா – கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பீட்டர் கெனமன் – வி.பொன்னம்பலம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் செயலாளர் பேரின்பநாயகம் கூட்ட ஏற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்.

கூட்டம் ஆரம்பமாகிப் பேச்சாளர்கள் ஒவ்வொருவராகத் தந்தை செல்வாவை நினைவுகூர்ந்து உரையாற்றத் தொடங்கினார்கள். ஆங்கில உரைகளை அமிர்தலிங்கம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.

வி.பொன்னம்பலம் உரையாற்றுகையில் யாழ்ப்பாணம் காங்கேசன் துறைத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் தனது வாக்கைத் தன்னோடு போட்டியிட்ட தந்தை செல்வாவுக்கே அளித்ததாகக் கூறியபோது கோகுலன் தன்னையறியாது வாய்விட்டுச் சிரித்தான். நகைச்சுவையொன்றைக் கேட்டுத் தானாகவரும் உணர்வுபோல் கோகுலன் வாய்விட்டுச் சிரிப்பதற்கான காரணமிருந்தது.

வி. பொன்னம்பலம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். ரஷ்ய சார்புக் கம்யூனிஸ்ட். யாழ்குடா நாட்டில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக இடதுசாரி அரசியல் செய்தவர்.

திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் கொணர்ந்து 1972 மே 22 இல் நிறைவேற்றிய இலங்கைக் குடியரசு அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை நிரூபிப்பதற்காக அரசாங்கத்திற்குச் சவால்விட்டு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனது காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாச் செய்து இடைத்தேர்தலுக்கு வழிவகுத்தார். இடைத்தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெற்றால் இலங்கைக் குடியரசு அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டும் என்பதே அவரது அரசியல் சவாலாகவும் நிலைப்பாடாகவும் இருந்தது.

இடைத்தேர்தலை இழுத்தடித்த சிறிமாவோ அரசாங்கம் இறுதியில் 03.02.1975 அன்று காங்கேசன்துறைத்தொகுதிக்கான இடைத்தேர்தலை நடாத்திற்று. தந்தைசெல்வாவை எதிர்த்து அரசாங்கக்கட்சியின் சார்பில் அப்போதைய கூட்டரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளிலொன்றாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வி.பொன்னம்பலத்தைக் களமிறக்கிற்று.

இடைத்தேர்தலில் தந்தைசெல்வா வெற்றியீட்டினார். வி.பொன்னம்பலம் தோல்வியுற்றார். அதனைக் குறிப்பிட்டுத்தான் உரையாற்றிய வி.பொன்னம்பலம் கட்சியின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் தான் தந்தை செல்வாவை எதிர்த்துப் போட்டியிட்டதாகவும் ஆனால், தனது வாக்கைத் தந்தை செல்வாவுக்கே அளித்ததாகக் கூறியபோது கோகுலனுக்குச் சிரிப்பு வந்ததில் வியப்பில்லை.

தந்தை செல்வா இறப்பதற்கு முன், எதிர்வரவுள்ள 1977 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் நியமனத்தை இரா. சம்பந்தனுக்கு வழங்கும்படி கூறிச் சென்றார் என்று அமிர்தலிங்கம் கூறியதற்கும் காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தலில் தனது வாக்கை தந்தை செல்வாவுக்கே இட்டேன் என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி. பொன்னம்பலம் கூறியதற்கும் அதிகம் வேறுபாட்டைக் கோகுலனால் காண முடியவில்லை.

அனுபவமுள்ள – ஆளுமையுள்ள – ஆற்றலுள்ள அரசியல்வாதிகள்கூட சில வேளைகளில் மக்களை மறதிக்காரர்களென்றும் மடையர்களென்றும் நினைத்துக் கொண்டு ‘கொப்பிழக்கப் பாய்ந்துவிடுகிறார்கள்’ என்றுதான் கோகுலன் எண்ணிக்கொண்டான்.

வி.பொன்னம்பலத்தின் கூற்றைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்த கோகுலன் பக்கவாட்டில் திரும்பியபோது மண்டபவாசலில் கதிரவேற்பிள்ளை காரில் வந்து இறங்குவதைக் கண்டான். கதிரவேற்பிள்ளை மேடைக்குச் செல்லுமுன்னர் ஓடிச்சென்று அவரை வழிமறித்த கோகுலன், “என்ன ஐயா நடந்தது?” என்றான்.

“உங்களுக்கு வெற்றி” என்று கூறிக்கொண்டே மேடையை நோக்கி விரைந்தார் அவர்.

மகிழ்ச்சி ததும்பிய முகத்துடன் விடயத்தை ஏனைய நான்கு பேர்களிடமும் பகிர்ந்தபின் தாமதியாமல் அனைவரையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கோட்டைப் புகையிரத நிலையம் நோக்கிப் புறப்பட்டான். கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. உரைகளை ஒலிபெருக்கி வெளியே உரத்துக் கக்கிக் கொண்டிருந்தது. இராமகிருஸ்ணமிசன் மண்டபத்திலிருந்து காலி வீதியை அண்மிக்கும் வரை அவை காதில் விழுந்து கொண்டிருந்தன.

அன்றிரவே ‘றெயினை’ப் பிடித்து கொழும்பிலிருந்து அடுத்த நாள் அதிகாலை மட்டக்களப்பை அடைந்து புகையிரத நிலையத்திலேயே பொத்துவில் ‘பஸ்’சில் ஏறிக் காலை 9.00 மணிக்கெல்லாம் கோமாரியை வந்தடைந்தான் கோகுலன்.

காலை 10.00 மணிபோல் கோமாரி ‘குவாட்டஸ்’ முன்னால் வந்து நின்றது கனகரட்ணத்தின் வெள்ளைநிற நீண்ட ‘வொக்ஸோல்’ கார். கனகரட்ணத்தின் அக்காவின் மருமகனான இராஜகோபால்தான் காரை ஓட்டி வந்திருந்தார். இராஜகோபால் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் பிரிவின் கீழமைந்த பொத்துவில் மற்றும் லகுகலப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான ‘ரி. ஏ’ ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். கோகுலனுக்கு மிகவும் ‘சீனியர்’ ஆன ‘ரி.ஏ’. கனகரட்ணத்தையும் இராஜகோபால் ரி. ஏ ஐயும் கோகுலன்

வீதிக்குச் சென்று முகமன்கூறி ‘குவாட்டஸ்’சினுள் அழைத்து வந்தான். அன்றைய ‘வீரகேசரி’ப் பத்திரிகையைக் கோகுலனிடம் நீட்;டிய கனகரட்ணம் சிரித்துக் கொண்டே “நீங்கள் இருவரும் சேர்ந்து அரசியலுக்குள் என்னை இழுத்துவிட்டீர்கள்” என்று சொல்லிச் சிரித்தார். இருவர் என்று தன்னையும் ஜெகநாதனையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறார் என்பதைக் கோகுலன் புரிந்து கொண்டான்.

கோகுலன் ‘வீரகேசரி’ப் பத்திரிகையைப் விரித்துப் படித்தான். தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொத்துவில் தொகுதி வேட்பாளராகக் கனகரட்ணத்தை நியமித்திருக்கும் செய்தி வெளியாகியிருந்தது. கனகரட்ணம் கோகுலனைப் பார்த்து “தம்பி! தேர்தல் பிரச்சார வேலைகளை நீதான் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்” என்றார்.

“அதற்கென்ன” என்று சம்மதித்துத் தலையாட்டிய கோகுலன் தனது ‘குவாட்டஸ்’ காவலாளி கதிரேசுவைக் கூப்பிட்டு ஏற்கெனவே தான் தயாரித்து வைத்திருந்த சிறிய ‘உதயசூரியன்’ கொடியைக் கனகரட்ணத்தின் காரின் முன்பக்க நடுவில் ‘பொனட்’க்கு மேலே ஒரு ஆறு அங்குலம் நிற்கக்கூடியதாக ஓடும்போது காற்றில் அசையும் வண்ணம் பொருத்திக் கட்டும்படி கட்டளையிட்டான்.

“எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் நடைபெறுகின்றன” என்று இராஜகோபால் சொல்ல கனகரட்ணம் – கோகுலன் – இராஜகோபால் மூவருமே சேர்ந்து சிரித்தார்கள்.

“தம்பி முதலில் எங்கே போவோம்?” என்றார் கனகரட்ணம்.

“திருக்கோவிலுக்குப் போவோம்” என்று கோகுலன் கூற மூவரும் காரில் ஏறி அமர்ந்தனர்.

திருக்கோவில் மகாதேவா என்பவர் உரிமையாளராக விளங்கிய ‘முரளீ ஸ்ரோர்ஸ்’ எனும் பலசரக்குக் கடைக்கு முன்னால் காரை நிறுத்தச் சொன்னான் கோகுலன். கார் நின்றதும் சிறுவர்களும் இளைஞர்களும் முதியோருமாய் சிலர் காரைச் சூழ்ந்தனர். காரின் முன்பக்கத்தில் காற்றில் அசைந்த ‘உதய சூரியன்’ கொடி அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். கோகுலன் கனகரட்ணத்தையும் இராஜகோபால் ரி.ஏ ஐயும் காரைவிட்டிறங்கித் தன்னைத் தொடரும்படி சைகை காட்டி விட்டு முரளீ ஸ்ரோர்ஸ்க்கு முன்பாக வீதியின் மறுபக்கத்தில் வெட்டவெளியொன்றில் அமைந்திருந்த சிறிய கோயில் முற்றத்தில் போய் தரையில் அமர்ந்தான். தொடர்ந்து கனகரட்ணமும் இராஜகோபால் ரி.ஏ யும் பக்கத்தில் வந்தமர்ந்தனர்.

கனகரட்ணத்தையும் அவரது காரையும் ‘உதயசூரியன்’ கொடியையும் கண்ட மாத்திரத்தில் தேர்தல்காலம் என்பதால் இன்னும் பல முதியோர்களும் இளைஞர்களும் சிறுவர்களுமென்று சுமார் ஐம்பது பேர் ‘மொச்’ சென்று இனிப்புப் பண்டத்தில் ஈ மொய்ப்பதுபோலக் கோயிலின் முற்றத்தில் திரண்டனர். தேர்தல்கால

உற்சாகம் அவர்களை அங்கு கூடப் பண்ணியிருந்தது. நேரம் செல்ல கேள்விப்பட்டு இன்னும் பலர் வந்து இணைந்து கொண்டனர்.

எல்லோரையும் தரையில் அமரச்சொன்ன கோகுலன் எழுந்து நின்று மௌன இறைவணக்கம் செலுத்திவிட்டுத் திட்டமிடப்படாத அந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைக் கோயில் முற்றத்தில் தொடக்கி வைத்தான்.

“என்ன காலயில ‘வீரகேசரி’ப் பேப்பர வாசித்த நேரத்தில இரிந்து ஒரே யோசனயாக்கிடக்கு. மத்தியானமாப் போனதும் தெரியாம என்ன அப்படி யோசன. அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கு ஏதும் பிரச்சினையெண்டு செய்தி வந்திரிக்கா. உங்களுக்கு வீடு பொஞ்சாதி புள்ளயளவிட அம்பாறை மாவட்டத்தமிழ் மக்களிலதானே அக்கறகூட. ஒரு மணியாகி விட்டது. வாங்க சாப்பிட” என்று விளையாட்டாகச் சொல்கிறமாதிரிச் சிரித்துக் கொண்டே கோகுலனின் மனைவி சொல்லிக் கோகுலனை நினைவுலகத்திலிருந்து நனவுலகத்திற்கு இழுத்து விட்டாள்.

சிவத்தரிச் சோறு – மட்டக்களப்பு ‘ஸ்பெஸல்’ மட்டிறால் குழம்பு – கீரிமீன் பொரியல் – வெண்டிக்காய் வெள்ளைக்கறி – குறிஞ்சா இலைச்சுண்டல் – முருங்கை இலைச் சொதியுடன் மத்தியானச் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தான் கோகுலன். காலையிருந்தே கடுமையாக யோசித்த காரணமோ என்னவோ உடம்பிலிருந்து கணிசமான ‘கலோரி’ வெளியேறிக் கடும்பசியில் இருந்தான் போலும்.

சாப்பிட்டு முடிந்தபின் வழமைபோல் ஒரு மணித்தியாலப் பகல் குட்டித்தூக்கம் போடும் நோக்குடன் கட்டிலில் போய்க் கெளிந்தான்.

காலக்குதிரை அவனை விட்டுவிடுவதாயில்லை. அவனது காலடியில் காத்துக் கொண்டிருந்தது. எப்போதுமே கடந்த கால நினைவுகள் அவை சோகமாகவும் துன்பியல் நிகழ்வாகவும் இருந்தாலும்கூட மீட்டுப்பார்க்கும்போது உளவியல் ரீதியாகக் கிளர்வூட்டுபவை. அதனால் பகல்தூக்கம் அவனுக்கு வரவில்லை. மீண்டும் காலக்குதிரையின் மேலேறிக் களிப்புடன் அமர்ந்தான்.

பொத்துவில் தொகுதியில் கனகரட்ணம் போட்டியிட்ட 1977 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை அம்பாறைக் கச்சேரி சென்று தேர்தல் கட்டுப்பணம் செலுத்துதல் – வேட்பு மனுத்தாக்கல் செய்தல் – தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் என்று தேர்தல் சம்பந்தமான நிர்வாக மற்றும் பிரச்சார வேலைகள் எல்லாமே கோகுலனின் பொறுப்பிலும் மேற்பார்வையிலுமே நடைபெற்றன. எல்லா வேலைகளையும் தன் தலையிலேயே சுமந்தான் அவன்.

அத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆயர்வேத டாக்டர் ஜலால்டீனும் – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக நிந்தவூரைச் சேர்ந்த முஸ்தபாவும் – தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளராகக் கனகரட்ணமும் – சுயேச்சை வேட்பாளர்களாகத் தருமலிங்கமும் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த சரணபால என்ற சிங்களவரும் – பொத்துவிலைச் சேர்ந்த ஆஷாத் மௌலானாவும் – பாணமையைச் சேர்ந்த ஜனநாயக்கா என்ற சிங்களவரும் களமிறங்கியிருந்தனர்.

தருமலிங்கம் குறைந்தபட்சம் தமிழர்களுடைய வாக்குகள் பதினேழாயிரத்தில் ஐயாயிரம் வாக்குகளையாவது பிரிப்பார். அது தமிழர்களுக்கு ஆபத்தானது. முஸ்லீம்களுடைய இருபத்தேழாயிரம் வாக்குகளுடன் சிங்களவர்களுடைய ஐயாயிரம் வாக்குகளும் சேர்ந்த முப்பத்திரண்டாயிரம் வாக்குகளும் பிரதான தேசியக்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் (டாக்டர் ஜலால்டீனுக்கும்) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் (முஸ்தபாவுக்கும்) சமமாகப் பிரிவது தமிழர்களுக்குச் சாதகமானதல்ல. சுயேச்சை வேட்பாளரான ஆஷாத் மௌலானா பிரிக்கப்போகிற முஸ்லீம் வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர்களான சரணபாலாவும் ஜனநாயக்காவும் பிரிக்கப்போகிற சிங்கள வாக்குகளும் அவை ஒப்பீட்டுரீதியில் குறைவாகவே இருக்கப்போகிறதென்றாலும்கூடத் தருமலிங்கம் பிரிக்கப்போகிற ஐயாயிரம் தமிழ் வாக்குகளையும் சமன்செய்ய அவை போதுமானது அல்ல என்பதே கோகுலனின் கணிப்பாக இருந்தது. மேலும் இதனை ஈடுசெய்யக் கனகரட்ணம் பொத்துவில் முஸ்லீம்களிடமிருந்து குறைந்த பட்சம் ஆயிரம் வாக்குகளையாவது பெற முடிந்தால் கனகரட்ணத்தின் வெற்றி நிச்சயம் என்பதை எடுகோளாக வைத்துக் கொண்டுதான் கோகுலன் தேர்தல் பிரச்சார வேலைகளை நன்கு திட்டமிட்டிருந்தான். தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருந்த காலத்தில் ஒருநாள்.

பகல் முழுவதும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து தேர்தல் பிரச்சாரவேலைகளில் ஈடுபட்டுவிட்டு காலம் பிந்திய மதிய போசனத்தையும் அக்கரைப்பற்றுப் பீதாம்பரம் வீட்டில் முடித்துவிட்டுச் சற்று ஓய்வெடுத்து விட்டு மாலை 4.00 மணிக்கு தம்பிலுவில் கண்ணகை அம்மன் கோயிலுக்குப் பக்கத்து வளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குக் கனகரட்ணமும் அவரது ஆதரவான அணியினரும் போய்க்கொண்டிருந்தார்கள்.

கூட்டம் நடக்கும் காணிக்கு அருகில்தான் சிந்தாத்துரையின் வீடும் அமைந்திருந்தது. கூட்டமும் சிந்தாத்துரையின் தலைமையில்தான் நடைபெறவும் ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும் எப்போதும் கட்சியின் தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் கட்சி விசுவாசி அவர்.

கனகரட்ணத்தின் வெள்ளைநிற ‘வொக்ஸோல்’ கார் முன்னால் போய்க் கொண்டிருந்தது. அவர்தான் ஓட்டிச் சென்றார். அதற்குள்ளே ஆதரவாளர்கள் சிலர் அமர்ந்திருந்தார்கள்.

பின்னால் தனது ‘மொரிஸ் மைனர்’ காரில் முன் ஆசனத்தில் கனகரட்ணத்தின் மூத்த சகோதரர் இராஜரட்ணம் அமர்ந்திருந்தார். பின்னுக்குக் கோகுலனும் அக்கரைப்பற்றுச் சேர்ந்தவரும் அவனுடன்

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற வகுப்பறை நண்பன் சண்முகநாதனும் அமர்ந்திருந்தனர். சுகாதாரத் திணைக்களத்தில் ‘அம்புலன்ஸ்’ சாரதியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்முனையைச் சேர்ந்த பொத்துவிலில் வசித்த ரட்ணம் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம் அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்திற்குப் பிரதான வீதியிலிருந்து வலது புறத்தில் பிரியும் சிறு ஒழுங்கையால் சற்று உள்ளே செல்ல வேண்டும். ஒழுங்கை முடியும் இடத்தில் இடப்புறமாகச் சிந்தாத்துரையின் வீடும் வலப்புறம் அமைந்த வெறும் காணியில் போடப்பட்ட கூட்ட மேடையும் இருந்தன. காணிக்கு அடுத்ததாய் கண்ணகி அம்மன் கோயில். கூட்ட மேடை அமைந்திருந்த காணியையும் கண்ணகி அம்மன் கோயில் வளவையும் ஒரு பொது முள்ளுக்கம்பி வேலி எல்லை பிரித்திருந்தது.

கூட்டமேடைக்குச் செல்லும் ஒழுங்கை பிரதான வீதியிலிருந்து பிரியும் சந்தியைச் சென்றடைய இன்னும் ஐம்பது யார் தூரம் மட்டில் போகவேண்டியிருந்தது. திடீரென்று பிரதான வீதியில் இளைஞர் கூட்டமொன்று சத்தம் எழுப்பியவாறு முன்னுக்குச் சென்று கொண்டிருந்த கனகரட்ணத்தின் காரை மறித்தது. கனகரட்ணம் காரை நிறுத்தினார். பின்னால் சென்று கொண்டிருந்த காரும் நிறுத்தப்பட்டது.

கோகுலன் நினைத்தான் கூட்ட ஏற்பாட்டாளர்கள் கனகரட்ணத்தைச் சற்று முன்னால் இறக்கி வரவேற்றுக் கூட்டமேடைக்கு அழைத்துச் செல்ல வருகிறார்கள் என்று. மறுகணம் அவனது நினைப்புப் பொய்யானது.

கனகரட்ணம் தனது காரை நிறுத்தியதும் திடீரென்று வீதியின் இருமருங்கிலிருந்தும் இன்னும் சில இளைஞர்கள் கையில் பொல்லுகளுடனும் கற்களுடனும் வெளிப்பட்டு வீதியில் இறங்கினர்.

கனகரட்ணம் கணப்பொழுதில் ஆபத்தை உணர்ந்தார். காரை உடனே விரைந்து ‘ஸ்ராட்’ செய்து ‘ஸ்டியரிங்கை’ இடது பக்கம் வெட்டி வீதியின் குறுக்கே நின்றவர்களை மோதுமாற்போல வேகமாகச் செலுத்தினார். வீதியின் இடப்புறம் நின்றவர்கள் அனைவரும் வீதியை விட்டு ஓடி விலகினர். அடுத்து அதேபோல் ‘ஸ்டியரிங்கை’ வலதுபக்கம் வெட்டி அதே வேகத்தில் செலுத்த வலப்புறம் நின்றவர்களும் விலகி ஓடினர். வீதி இப்போது வெளியாகியிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடைவெளிக்குள் காரை வேகமாகச் செலுத்திச் சென்று ஆபத்தைக் கடந்தார் கனகரட்ணம்.

முன்னால் நடந்ததைப் புரிந்து கொண்ட கோகுலன் பின்னால் நின்ற காரின் சாரதியை நோக்கி “ரட்ணம் காரை எடு” என்று சத்தமிட்டான். அதற்கிடையில் வந்த ஒருவன் காரில் முன்னால் அமர்ந்து வெளியே முழங்கையை மடித்து நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த இராஜரட்ணத்தின் கையைப் பிடித்து இழுத்தான். இன்னொருவன் ஓடிவந்து பின்னால் காரின் இடதுபுறக் கதவை இழுத்துத் திறந்தான். திறந்தவன் காருக்குள் கோகுலனைக் கண்டுவிட்டு “நீங்களா சேர்! மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு திறந்த கதவை அவனே மீண்டும்

அடைத்து விட்டு மறைந்தான். வந்தவன் சாகாமத்தில் தனது பொறுப்பின் கீழான வேலைத்தலமொன்றில் தொழிலாளியாகப் பணிபுரிபவன் என்பதைக் கோகுலன் அவதானிக்கத் தவறவில்லை.

இந்த அமளி துமளிகளுக்கிடையில் திடீரென்று காருக்குப் பின்னாலிருந்து எறியப்பட்ட கல்லொன்று காரின் பின்புறக் கண்ணாடியை பதம் பார்த்ததில் அது முழுவதுமாக நொருங்கிக் கண்ணாடித் துண்டுகள் சிதறின. தொடர்ந்து வரும் கற்கள் பிடரியைத் தாக்கி விடக்கூடாது என்றெண்ணிய கோகுலன் காரில் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சண்முகநாதனையும் எழுந்து நிற்கச் சொல்லிச் சத்தமிட்டுவிட்டு காருக்குள்ளே எழுந்து தலையை வளைத்து காரின் கூரையை முட்டும் வண்ணம் குனிந்தபடி நின்றான்.

சாரதி ரட்ணமும் சமயோசிதமாகக் கனகரட்ணத்தின் காரின் பின்னாலேயே அதேவேகத்தில் காரைச் செலுத்தி ஆபத்தைக் கடந்தான்.

பின்னால்தான் தெரிந்தது காரின் முன்னால் அமர்ந்திருந்த இராஜரட்ணத்தின் கைக்கடிகாரம் அவரது கையைப் பிடித்து இழுத்தவனால் பறிக்கப்பட்டிருந்தது என்று.

கூட்டம் திட்டமிடப்பட்டதற்கமையச் சிந்தாத்துரையின் தலைமையில் ஆரம்பமாகிற்று. கூட்ட மேடையில் கனகரட்ணமும் வேறு முக்கியஸ்தர்கள் சிலரும் அமர்ந்திருந்தனர்.

தருமலிங்கத்தின் ஆட்கள் சிலர் பக்கத்திலிருந்த கண்ணகி அம்மன் கோயில் வளவுள் நின்று கூட்டத்தைக் குழப்பும் வகையில் கோயில் மேளத்தைத் தொடர்ந்து தட்டி ஒலியெழுப்பினார்கள். ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாது சிந்தாத்துரை ஒலிபெருக்கி முன் நின்று தலைமை உரையாற்றிக் கொண்டிருந்தார். சிந்தாத்துரை தருமலிங்கத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்த முயன்றவரெனினும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு மனதை மாற்றிக் கொண்டிருந்தார்.

அடுத்து மேடையை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. பதிலுக்குக் கூட்டத்தில் பார்வையாளராக இருந்த கனகரட்ணத்தின் ஆதரவாளர்களும் வந்துவிழுந்த கற்களைத் தேடிப்பொறுக்கி கண்ணகி அம்மன் கோயில் வளவில் நின்றவர்களை நோக்கித் திருப்பி எறியத் தொடங்கினர்.

இந்த அல்லோலகல்லோலத்திற்கு மத்தியில் கனகரட்ணத்திற்கு ஆதரவான இளைஞன் ஒருவன் அருகிலிருந்த சிந்தாத்துரையின் வீட்டிற்குள் புகுந்து துவக்கை எடுத்துக் கொண்டு கூட்ட மேடைக்கு ஓடிவந்தான். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக் குழுக் கூட்டத்திற்குக் கோகுலனுடன் கொழும்பு வந்த இளைஞர்களில் ஒருவன்தான் அவன்.

இதை அவதானித்த கோகுலன் பாய்ந்து அந்த இளைஞன் கையிலிருந்த துவக்கை அவன் சுடாதவண்ணம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். சில இளைஞர்கள் கனகரட்ணத்தை அவர் மேடையிலிருந்து அகல மறுத்தபோதும் மேடையிலிருந்து பாதுகாப்பாக இறக்கிச் சிந்தாத்துரையின் வீட்டினுள்ளே கொண்டு சென்று அமரச் செய்தார்கள்.

துப்பாக்கியைப் பிடித்திருந்த இளைஞனிடம் கோகுலன் “துப்பாக்கியை என்னிடம் தா! நானே சுடுகிறேன்” என்று சொல்லித் தன் கையிலே வாங்கிக் கொண்டான்.

துப்பாக்கியைத் தன் கையில் பெற்றுக்கொண்ட கோகுலன் தாமதியாது அதனை சிந்தாத்துரையின் வீட்டுப்பக்கம் எடுத்து ஓடிச்சென்றுத் துப்பாக்கியைச் சிந்தாத்துரையின் மனைவியின் கையில் ஒப்படைத்து “இத நான் வந்து கேட்டா மட்டுந்தான் தரோணும். வேறு எவர் வந்து கேட்டாலும் குடுக்கவேணாம் ” என்று கூறிக் குசினிக்குள் எவருக்கும் தெரியாத இடத்தில் அதனை ஒளித்து வைக்கும்படி செய்தான்.

கூட்டம் நிறுத்தப்பட்டது. கனகரட்ணத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் சிந்தாத்துரையின் வளவுக்குள் திரண்டனர். பின் சிந்தாத்துரையின் வீட்டு முற்றத்தில் எல்லோரும் கூடிக்கலந்து பேசிக் கூட்டத்தைத் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலடிக்கு மாற்றுவதெனத் தீர்மானித்தார்கள்.

எல்லோரும் பிரதான வீதிக்கு வராமல் பின்பக்கமாக ஆட்களுடைய வளவுகளின் வேலிகளுக்கூடாகப் புகுந்து திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலடியைச் சென்றடைந்தனர்.

கல்வீச்சின் போது பறந்து வந்த பாரிய செங்கல் ஒன்று தருமரட்ணத்தின் நெஞ்சைத் தாக்கியதால் கீழே விழுந்த அவர் மூச்செடுக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரையும் காவிக்கொண்டுதான் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலடியைச் சென்றடைந்தனர்.

திருக்கோவில் ஆஸ்பத்திரியில் அவருக்கு “முதலுதவி” அளித்த டாக்டர் உடனே கல்முனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார்.

திருக்கோவிலிருந்து கல்முனைக்குச் செல்லும் வழமையான பிரதான வீதியில் பயணிக்க முடியாதபடி அன்றைய சூழல். ஏனெனில், தருமலிங்கத்தின் ஆட்கள் பிரதான வீதியில் நின்று மறித்தால் என்ன செய்வது? அதனைத் தவிர்க்கும் வகையில் கோகுலன் மாற்று வழியை நாடினான்.

காயப்பட்ட தருமரெட்ணத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு திருக்கோவிலிருந்து தெற்கே காஞ்சிரங்குடாவரை சென்று காஞ்சிரங்குடாச் சந்தியிலிருந்து உட்புற வழியாகச் சாகாமம் ஊடாக அக்கரைப்பற்றை அடைந்து அங்கிருந்து கல்முனை வைத்தியசாலைக்குச் சென்று தருமரெட்ணத்திற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூட்டம் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலடியில் ஆக்ரோஷமாக நடந்தேறியது.

(தொடரும் …… அங்கம் – 30 )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.