சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மோசடி : தனியார் வகுப்பாசிரியர் கைது
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் வெளியிடுவதில் ஈடுபட்ட தனியார் ஆங்கில பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வினாத்தாள் புழக்கத்தில் இருந்தமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தனியார்வகுப்பாசிரியர் கேள்வித்தாளைப் பகிர்ந்த குறிப்பிட்ட வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சை அட்டவணைப்படி பொது ஆங்கில வினாத்தாள் கடந்த மே 9ம் திகதி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், ஆங்கில வினாத்தாள் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் இந்த ஆசிரியரால் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில வினாத்தாளை பரப்பியதற்காக கைதுசெய்யப்பட்ட ஆங்கில பாட ஆசிரியர் மற்றும் அவரது தாயாரின் கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பாசிரியர் மற்றும் அவரது தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனை மற்றும் ஹசலக்க ஆகிய இரண்டு பரீட்சை நிலையங்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பரீட்சார்த்திகள் தொலைபேசிகளை பயன்படுத்தி ஆங்கில வினாத்தாளுக்கான பதில்களை அணுக முயற்சித்ததாகவும், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பரீட்சை நிலையங்களில் இருந்த கண்காணிப்பாளர்கள் தொலைபேசிகளை பறிமுதல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.