நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) கொண்ட 10இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் தேர்தலுக்கு முன்னர் அவர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கோரியுள்ளார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சிகளுக்குள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த உறுப்பினர்களுக்கு நாட்டின் மீது எந்த விசுவாசமும் இல்லை. அவர்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக நாடாளுமன்ற பதவிகளை வகிக்கின்றனர்.
அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது. ஆனால், வரவிருக்கும் தேர்தலுக்கு முன் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேரர் கூறியுள்ளார்.
இதேவேளை, கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது அர்த்தமற்றது மற்றும் நேரத்தையும் வளங்களையும் விரயமாக்குவதாகவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த உறுப்பினர்கள் தங்கள் பதவிகளிலிருந்து, தாமாகவே முன்வந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.