கட்டுரைகள்
ஐந்தாவது முறை புட்டின் பதவியேற்பு! ஜாராட்சியை தொடரும் புட்டின் ஆட்சி!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்
புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் வகையில் ஐந்தாவது முறையாக புட்டின் பதவியேற்றுள்ளார்.
போரிஸ் யெல்ட்சின் பின்னர் புட்டின்:
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 1999 டிசம்பர் 31இல் போரிஸ் யெல்ட்சின்( Boris Yeltsin) பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தவர். பின்னர் 2000 ஆம் ஆண்டிலும்,2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரஷ்ய அரசர்களை ‘ஜார்’ (Tsar) என்றே அழைப்பார்கள். ரஷ்யாவை ஆண்ட மன்னர் மகா பீட்டரை ( King Peter the Great) இன்றும் வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் புட்டின். இது பரவலாக அறியப்பட்டது தான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக பரவலாக கருத்தை வெளிப்படுத்தியும் வருகிறார்.
சமீப காலமாக ரஷ்யாவின் கடந்த கால ஜாராட்சி வரலாற்றை மேற்கோள் காட்டுவதையே புட்டின் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போதய ஆட்சியானது, மகா பீட்டரின் பேரரசைக் கட்டியெழுப்பும் திட்டம் என்றும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.
2000 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக புட்டினின் பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் டிமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த புட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் தொடங்கியது. பிறகு 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்று தற்போதும் ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.
போரிஸ் யெல்ட்சினுடன் – புட்டின் உறவு:
ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான (KGB) கேஜிபி-இல் புட்டின் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் பிரிந்ததால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் யெல்ட்சின் உடன் விளாடிமிர் புட்டின் உறவு சரியாக அமையவில்லை.
எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி ஒன்றை துவங்கினர். ‘சையூச்னய ரஷ்யா’ என்று கட்சிக்கு பெயரிட்டார். 2000ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது.
2000 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா (Duma) அரசியல் சாசனப்படி வாய்ப்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியைப் பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாதிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
பதவியில் நீடிக்க வாக்கெடுப்பு:
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்
புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் வகையில் அரசியல் அமைப்பை திருத்த பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். தற்போது 71 வயதாகும் புட்டின் அவரது 87 ஆவது வயது வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.
ரஷ்யாவில் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவிவகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். ரஷ்ய நாட்டின் அரசியல் அமைப்பின்படி ஒருவர் இரு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவியில் நீடிக்க முடியாது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை அவரது பதவிக்காலம் உள்ளது. இந்நிலையில் அவரது பதவிக் காலத்தை மேலும் இரு முறை அதாவது 2036 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீட்டிப்பது குறித்து அந்நாட்டு அரசியலமைப்பில் மாற்றம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜார் மன்னரை போன்று புட்டின்:
ரஷ்ய பேரரசை நிறுவ 1547 இல் இவான்- IV ஜார் மன்னர் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் 1721 இல் பீட்டர் – I ரஷ்யாவின் ஜார் மன்னரின் ஆட்சி, ஒரு மையப்படுத்தப்பட்ட ரஷ்ய அரசாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ரோமானோவ் வம்சங்களுக்கு மாறிய எழுச்சிகள், போலந்து-லிதுவேனியன், ஸ்வீடன் மற்றும் ஒட்டோமான் பேரரசு உடனான போர்களை வென்றது. அதேவேளை சைபீரியாவை ரஷ்யா கைப்பற்றியது.
1689 இல் ஆட்சியைப் பிடித்த பீட்டர் தி கிரேட் ஆட்சி ஒரு பாரிய ஐரோப்பிய சக்தியாக மாற்றியது. பெரிய வடக்குப் போரின் போது, அவர் கணிசமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். பின்னர் 1721 இல் சுவீடனை வென்ற பிறகு ரஷ்ய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி அறிவித்தார்.
இதனாலேயே ரஷ்ய அதிபர் புட்டின் எப்போதும் ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தானும் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
புட்டின் ரஷ்ய ஜார் மன்னராக!
அதேவேளை மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மகா பீட்டர் நடத்திய போர்களுடன் இன்று தாம் நடத்திக் கொண்டிருக்கும் உக்ரேனியப் போரை புட்டின் வெளிப்படையாகவே ஒப்பிடுகிறார். ரஷ்யாவின் கடந்த கால வரலாற்றை மேற்கோள்காட்டுவதையே புட்டின் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு அதைப் பொருத்திப் பேசுகிறார்.
இப்போது புட்டின் தனது உக்ரேன் போர் நடவடிக்கை என்பது உண்மையில், ஜார் மன்னர் மகா பீட்டரின் நவகால வாரிசு என்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு துணிந்திருக்கிறார். மகா பீட்டர் பால்டிக் முதல் கருங்கடல் வரையிலான் நிலத்தை கைப்பற்றி ஆண்டவர். ஆனால் ரஷ்யா தொடங்கிய வடக்குப் பெரும் போர் 21 ஆண்டுகளாக நீடித்திருந்தது. ரஷ்யாவை நவீனப் படுத்துவதற்காக ரகசியமாக ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் மகா பீட்டர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை ரஷ்யாவின் புதிய தலைநகராக அவர் உருவாக்கியபோது ஓர் ஐரோப்பிய நாடு கூட அதை அங்கீகரிக்கவில்லை.
உக்ரைன் மீதான போர் :
மகா பீட்டர் ஒரு சர்வாதிகாரியாக அறியப்பட்டாலும், மேற்கத்திய சித்தாந்தங்களையும், அறிவியல், பண்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர். ஐரோப்பாவின் வாசற்படியாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை உருவாக்கினார். ரஷ்யாவை நவீனப்படுத்த ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆனால் புட்டினின் தொடர்ச்சியான ஆட்சியில் மன்னர் பீட்டர் உருவாக்கிய வாசற்படி மெதுவாகத் மூடத் தொடங்கியது. உக்ரேன் மீதான போர் மீதமிருந்ததையும் மூடிவிட்டது என்றே கருதலாம்.
புதிய சிந்தனைகளைத் தேடி மகா பீட்டர் மேற்கொண்டது போன்ற பயணத்தை புட்டின் மேற்கொள்வது இப்போது சாத்தியில்லை என்றே தெரிகிறது. ஆயினும் வரலாற்றில் தேர்ந்தெடுத்த பகுதியை லாவகமாக புட்டின் பயன்படுத்துகிறார்.
மேற்கத்திய எதிர்ப்புகளையும் பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்வது என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. உக்ரேனியப் போர் முடிவுற்றாலும் மீண்டும் அதிபர் தேர்தலில் புட்டின் வெற்றி பெற்று,
2036ஆண்டு வரை ஆளும் வாய்ப்பு உள்ளது. ஏதோ ஓர் வகையில் ரஷ்யாவில் ஜாராட்சியை தொடர புட்டின் முயல்வது தெரிகிறது.
ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவதுடன், அதே வழியில் செல்லும் புட்டினுக்கு வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து இன்னொரு பக்கம் கிடைக்கலாம்.