கதைகள்

“மன்னராட்சி கோரிய மீன்கள்” …. சிறுகதை – 66 …. அண்டனூர் சுரா.

 ஜனநாயகக் கிணறு அது. அக்கிணற்றில் நெத்திலி, கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக் கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,…என்று இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்துவந்தன. மீன்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லை. ஜனநாயகத்தின் தலைவன் என்று சொல்லிக்கொண்ட புல்கெண்டை மீது நம்பிக்கையிழந்து வந்தார்கள்.

புல்கெண்டைக்கு எதிராக மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டின. சிறு,பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ…’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து மிதந்து தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை வாரியடித்தும் பெரிய மீன்கள் கிணற்றுக்கு வெளியே தாவிக் குதித்தும் எதிர்ப்புகளைக் காட்டின.

ஜனநாயகத் தலைவனாக இருக்கின்ற புல்கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழ்ந்தது. கிணற்றின் சகதிக்குள் துடிப்பைப் புதைத்து ஓய்வு எடுத்தது. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழப்பும் அதற்குப் பெரும் சுகத்தைக் கொடுத்தன. ஒரு நாளைக்கு ஓரிரு முறை மட்டும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்து தன் ஆட்சிக்குட்பட்ட மீன்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்து சென்றது. அவ்வளவேதான்!

கிணற்று நீர் குறைந்து வருவதைப் பற்றி தலைமை மீன் அவ்வளவாக கவலைப்படவில்லை. இரையில்லாமல் குட்டி மீன்கள் செத்துவருவதையும் பெரிய மீன்கள் பசியைப் போக்கிக்கொள்ள இரையில்லாமல் சிறிய மீன்களைத் தின்று செரிப்பதையும் தலைமை மீன் புல்கெண்டை கண்டும் காணாதிருந்தது.

அந்தக் கிணற்றில் வசித்த மீன்களில் உயர்குடி மீனாக விரால் இருந்தது. அம்மீன் கிணற்றின் மேல்மட்டத்திற்கும் தரைக்குமாகச் சென்றுவரக்கூடியது. தரைமட்டத்திலிருக்கும் குளிர்ச்சியும் மேல்மட்டத்திலிருக்கும் இதமான வெப்பமும் அதற்குத் தேவை என்பதால் அம்மீன் அப்படியாக கீழேயும் மேலேயும் சென்றுத் திரும்பியது. அவ்வாறு திரும்பும்பொழுது அது எடுத்துகொள்ளும் கால விரயத்தை வைத்துப் பார்க்கையில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்திருப்பது தெரியவந்தது. இதை நினைத்து அம்மீனால் அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியவில்லை. தன் இனம் சந்திக்கப்போகும் பேரழிவைத் தன் இனத்திற்குத் தெரிவிக்க அவசரமாக ஒரு கூட்டத்தைக் கூட்டியது.

“மீன்களே, நாம் நமக்கான இரையை மட்டும் இழந்து வரவில்லை. நாளுக்குநாள் நாம் உயிர் வாழத் தேவையான தண்ணீரையும் இழந்து வருகிறோம்…” இதைச் சொன்னதும் மற்ற மீன்கள் நடக்கப்போகும் பேரழிவை நினைத்து வருந்தி பெரிதாக வாயைத் திறந்தது.

“ஒரு காலத்தில் இக்கிணற்றில் வாய்வரைக்கும் தண்ணீர் இருந்தது” என்றது ஒரு மீன்.

“காக்கைக் குருவிகள் கிணற்றுவாயில் அமர்ந்து தலையை நீட்டி தண்ணீர் குடித்திருக்கின்றன” என்றது இன்னொரு மீன்.

“ கிணற்றைச் சுற்றிலும் மீன்கொத்திகளும் கொக்குகளும் காக்கைகளும் நம்மை உணவாக்கிக்கொள்ள ஒற்றைக் காலில் நின்றிருக்கிறது. நம் மூதாதையர்களில் பலர் பறவைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள்.” என்றது மற்றொரு மீன்.

“ நம் மூதாதையர்கள் இரையானதைப் போல அவர்களும் நமக்கு இரையாகி இருக்கிறார்கள்.”

“ ஆமாம், ஓர் ஆடு தண்ணீர் குடிக்கக் கிணற்றுக்குள் தலையை நீட்டப்போய் அது தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அந்த ஆடு செத்து மிதந்து நம் தாத்தா, பாட்டிகளுக்கு இரையாகியிருக்கிறது. நம்

மூதாதையர்கள் அதை வயிறுமுட்டத் தின்று பெருத்திருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க வீசிய வலையை அறுத்திருக்கிறார்கள். அத்தகை வீரவம்சத்தில் பிறந்த நாம் இன்று இரையின்றி தவித்து வருகிறோம்” அழுவதைப் போல பேசி நிறுத்தியது விரால் மீன்.

விரால் மீன் சொன்னதைக் கேட்டதும் மற்ற மீன்கள் குதித்தன. துடிப்புகளால் வயிற்றில் அடித்துகொண்டன.

“ இதைப் பற்றி நம் தலைமை கவலைப்பட்டதாக தெரியலையே..” என்றது ஒரு மீன்.

“ நம் பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் நாம் புல்கெண்டையைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அம்மீன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சகதிக்குள் உல்லாச வாழ்க்கை வாழ்கிறது. இனி ஜனநாயகத்தை நம்பி ஒரு பயனுமில்லை..”

“ஆமாம், ஜனநாயகம் தோற்றுவிட்டது.”

“ வேண்டாம்,வேண்டாம். ஜனநாயகம் வேண்டாம்.”

“ மாட்டோம், மாட்டோம். புல்கெண்டையைத் தலைவனாக ஏற்க மாட்டோம்.”

மீனின் போர்க்குரலால் கிணறு குலுங்கியது. மீன்கள் தண்ணீரை நாலாபுறமும் வாரியடித்தது. கிணற்றுக்குள் நடக்கும் களேபரத்தைப் பார்த்து அவ்வழியே பறந்து சென்ற ஒரு கொக்கு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது.

“மீன்களே, என்ன பிரச்சனை. ஏன் உங்களுக்குள் இத்தனை கலவரம்?” கேட்டது கொக்கு.

“ எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.”

“ ஏன் இல்லை?”

“எங்கள் தலைவர் எங்கள்மீது கொஞ்சமும் அக்கறையின்றி இருக்கிறார். கிணற்றின் ஆழத்திற்குச் செல்கிறவர் எப்பொழுதாவதுதான் மேலே வருகிறார். கிணற்றில் எங்களுக்குப் போதுமான அளவிற்கு இரை இல்லை. கிணற்றைச் சுற்றிவர போதிய நீரில்லை. எங்கள் தேவைகளைப் பற்றி புல்கெண்டை சற்றும் கவலைப்படுவதாக இல்லை.”

நெத்திலிப்பொடி சொன்னது. “எங்கள் இனத்தவர் பலரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்.”

“ ஏன்?”

“ பெரிய மீன்களின் பசிக்குச் சிறிய மீன்களாகிய நாங்கள் இரையாகி போகிறோம்.”

“உங்கள் பிரச்சனைகளைக் கேட்க எனக்குக் கவலையாக இருக்கிறதே. உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள், முடிந்தால் செய்கிறேன்…” என்றது கொக்கு.

“ எங்களுக்கு ஜனநாயகத் தலைவர் வேண்டாம். மன்னர்தான் வேண்டும்.” என்றது நெத்திலி.

“ ஆமாம், மன்னர்தான் வேண்டும்.” நெத்திலியின் கோரிக்கையை ஆதரித்தது கெளுத்தி மீன்.

“ மன்னனே வேண்டும். மன்னனே வேண்டும்..” மீன்கள் ஒருமித்து குரல் கொடுத்தன.

மீன்களின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்டக் கொக்கு சொன்னது. “மன்னன் என்றால் வெளியிலிருந்துதான் வருவான், பரவாயில்லையா?”

மீன்கள் ஒற்றைக் குரலில் சொன்னது. “பரவாயில்லை. எங்களுக்கு மன்னன்தான் வேண்டும்.”

“எனக்குத் தெரிந்து ஒரு மன்னன் இருக்கிறார். அவரை நான் அழைத்து வருகிறேன்” என்றவாறு கொக்கு பறந்து சென்றது.

மறுநாள் நான்கு கொக்குகள் கிணற்றடிக்கு வந்தன. அதன் கால்களில் மீன்களுக்கான மன்னன் இருந்தது.

“ மீன்களே,..” கொக்கு அழைப்பைக் கேட்டு மீன்கள் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்தன.

“உங்களுக்காக ஒரு மன்னனை அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களை

அரவணைத்துக்கொள்வார். உங்களுக்குத் தேவையான அளவுக்குப் பாதுகாப்பளிப்பார்.” என்றவாறு நான்கு கொக்குகள் நான்கு மூலையில் நின்றுகொண்டு புதிய மன்னனைக் கிணற்றுக்குள் தள்ளியது.

மன்னன் கிணற்றுக்குள் விழுந்ததும் நீர்மட்டம் அதிர்ந்தது. கிணறு ஒரு குலுங்குக் குலுங்கி மேலும் கீழுமாக அலையடித்தது. மீன்கள் பயந்து விலகித் தெறித்தன. கிணற்றின் தரை மட்டத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த புல்கெண்டை தனக்கு எதிராக வந்திருக்கும் மன்னனை மேற்பரப்பிற்கு வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றது.

கிணற்றுக்கு வந்திருந்து புதிய மன்னன் பரந்து விரிந்த வலையாக இருந்தது. வலை மீது சிறிய, நடுத்தர மீன்கள் துள்ளிக் குதித்தன. பெரிய மீன்களால் வலையைத் தாண்டி மேலே வரமுடியவில்லை. சிறிய மீன்கள் தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ந்தன. மீன்கள் வலைமீது ஏறிக் குதித்து, கடிக்கையில் மன்னனுக்குக் கோபம் வராததைக் கண்டு பூரித்தன.

இத்தனை காலம் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த மீன்கள் புது மன்னன் வந்ததும் இரண்டு பிரிவுகளாயின. சில மீன்கள் மன்னனின் அரவணைப்பில் இருந்தன. மற்ற மீன்கள் மன்னனின் பரந்த வெளிக்குக் கீழாக வாழ்ந்தன. மேல்மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் கீழ்மட்டத்திற்கும், கீழ்மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் மேல்மட்டத்திற்கும் பயணிக்க முடியாத நிலை உருவானது.

“நாங்கள் இனத்தால் உயர்ந்தவர்கள். பாருங்கள், கிணற்றின் ஆழத்தில் வசிக்கிறோம்..” என்றது ஆழத்தில் வசித்த மீன்கள்.

“இல்லையில்லை. நாங்கள்தான் உயர்ந்தவர்கள். எங்களை மன்னர் எப்படியாக அரவணைக்கிறார் பாருங்கள்” என்றது மேல்மட்ட மீன்கள்.

“ நாங்கள் பெரியவர்கள்.”

“ நாங்கள் உயர்வானவர்கள்.”

மீன்களுக்குள் எழுந்த சண்டையால் கிணறு குலுங்கியது. கிணற்றில் நடந்தேறும் சண்டையைப் பார்த்து கொக்குகள் கிணற்றடிக்கு வந்து, தலையை நீட்டிக் கிணற்றை எட்டிப் பார்த்தன.

“ ஆம், எங்களுக்கு மன்னராட்சி பிடித்திருக்கிறது” என்றன மீன்கள்.

“ ஏன் பிடித்திருக்கிறது?” கேட்டது கொக்கு.

“ அவரவர் வாழிடம் அவரவரிடம் இருக்கிறது” என்றது ஒரு மீன்.

“ நாங்கள் மேலோர் கீழோர் என்று பிரிக்கப்பட்டிருக்கிறோம்…” என்று குறையாகச் சொன்னது மற்றொரு மீன்.

இரு மீன்களுக்கிடையில் சண்டை எழுந்தது. சண்டையைப் பார்த்த கொக்கு, “அப்படியானால் நான் அழைத்துவந்த மன்னனைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்…” என்றவாறு வலையை மேலே இழுத்தது.

மன்னனைத் தழுவிக்கொண்டிருந்த மீன்கள் மேலே செல்வதைக் கொண்டு ஆனந்தத்தில் குதித்தன. அதன் கொண்டாட்டம் நீண்ட நேரம் இருந்திருக்கவில்லை. மீன்கள் தண்ணீரைவிட்டு மேலே வந்ததும் செத்து வலையில் மிதந்தன.

மீன்கள் பல செத்ததும் கிணற்றில் இவ்வளவு காலமிருந்த நெருக்கடி சற்றே தளர்ந்திருப்பதாக சில மீன்கள் உணர்ந்தன. சில மீன்கள் தன் குஞ்சுகளை இழந்து துக்கத்தில் தவித்தன.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு மீன்கள் ஒன்றுகூடி, நமக்குத் தேவை “ஜனநாயக ஆட்சியா, மன்னராட்சியா?” என்று ஆலோசித்தன.

ஒரு மீன் சொன்னது. “புல் கெண்டை போல ஜனநாயகத் தலைவன் வேண்டாம். வலையைப் போல மன்னனும் வேண்டாம்” என்றது.

“அப்படியானால் நாம் யாரை மன்னனாகத் தேர்ந்தெடுப்பதாம்?” பரிதாபமாக கேட்டுக்கொண்டன

மீன்கள்.

அப்பொழுது ஓர் உருவம், “ இனி நான்தான் உங்களுக்கான தலைவன்” என்று சொல்லிக்கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது. விழுந்த அதிர்வு கிணறு முழுமைக்கும் எதிரொலித்தது. கிணற்றுக்குள் விழுந்த உருவத்தை மீன்கள் புதிய மன்னராக ஏற்றுக்கொண்டன. புதிய மன்னர் மேல்மட்டத்திற்கும் தரைமட்டத்திற்குமாக உலாவியது.

“ஆம், நமக்கொரு மன்னர் கிடைத்துவிட்டார்..” என்று மீன்கள் அவ்வுருவத்தைக் கண்டு கொண்டாடின.

“நீங்கள்தான் எங்களை ஆள வேண்டும்..” அந்த உருவத்திடம் கேட்டுக்கொண்டன.

அக்கிணற்றுக்குப் புதிதாக வந்திருக்கும் மன்னன் ஆமையாக இருந்தது.

ஆமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகச் சொல்லி அசத்தியது. கை, கால்களை நீட்டிப் பேசி மயக்கியது. “உங்களைப் போல நானும் இத்தண்ணீரை நம்பிதான் இருக்கிறேன். உங்களில் ஒருவன் நான்” என்று ஆமை பேசியது மீன்களுக்குப் பிடித்துப்போனது.

மீன்கள் ஆமையின் முதுகில் ஏறிக் குதித்து விளையாடின. தன் மீது ஏறிக்கொள்ளும் மீன்களை ஆமை கிணற்றின் பாதாளம் வரைக்கும் அழைத்துச்சென்று, வேற்றுலகைக் காட்டி மயக்கியது. இப்படியொரு மன்னனை இதற்கு முன் நாங்கள் கண்டதில்லை என்று மீன்கள் பெருமை பேசிக் கொண்டன. மீன்களுக்கு ஆமை தெய்வமாகத் தெரிந்தது. அப்படித் தெரிய ஒரு காரணமிருந்தது.

ஒவ்வொரு நாளும் மீன்களுக்குத் தேவையான உணவை ஆமை கொடுத்துவந்தது. ஆமை தினமும் தின்றுசெரித்து வெளியேற்றும் மலம்தான் மீன்களுக்கான உணவு. ஆமையின் மலத்தைத் தின்று ருசி கண்ட மீன்கள் இனி ஆமை இல்லாமல் ஒரு நாளும் உயிர் வாழ முடியாது என்கிற முடிவிற்கு வந்தன.

மீன்களைப் போலவே ஆமையும் உணவுக்காக மீன்களையே பெரிதும் நம்பியது. ஆமையின் உணவு மீன்களின் முட்டையாக இருந்தது.

Loading

One Comment

  1. அருமையான கதை.
    அரசியல் கேலி – Political Satire – என்று சொல்லத்தக்க நல்ல உருவகம்
    ஆனால் யாரையும், புண்படுத்தாத இலக்கியம்.
    அதற்கென்று நிறையத் தகுதியும் திறமையும் வேண்டும்.
    அத்தனையும் தங்களிடம் பூரணமாய் நிறைந்திருக்கிறது.
    ‘வாழ்த்துக்கள்’.

    நீலகண்டன் மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.