ஐ.நா., அறிக்கையை கிழித்துப் போட்ட இஸ்ரேல் தூதர்
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோபமடைந்த இஸ்ரேல் தூதர் ஐ.நா.,வின் அறிக்கையை கிழித்துப் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
மேற்காசியாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள ரபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து, ஹமாஸ் படையினர் உள்ள பகுதிகளை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் பார்வையாளராக உள்ளது. அந்நாட்டை, முழுநேர உறுப்பினராக ஆக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக ஓட்டுப் போட்டன. அமெரிக்க, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 25 நாடுகள் புறக்கணித்தன.
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.நா.,விற்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், ஐ.நா.,வின் அறிக்கை நகலை, இயந்திரத்தில் போட்டு சுக்குநூறாக கிழித்துப் போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.