கதைகள்

“நடுகைக்காரி” …. 70 …. ஏலையா க.முருகதாசன்.

 ஞானம் தன்னை காதலிப்பான் என நம்பிக் கொண்டிருந்த நீலலோஜினிக்கு தன்னை அவன் காதலிக்காமல் புஸ்பகலாவைக் காதலிக்கத் தொடங்கிவிட்டான் என்பதை அறிந்த போது அவள் தனது கோபத்தையம் புஸ்பகலாவின் மீதான பொறாமையையும் வெளிப்படையாகத் தனது முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமலிருந்தாள்.

நீலலோஜினியின் அழகு,அவள் என்ன நினைக்கிறாள் என்பதை மூடிமறைத்துக் கொண்டிருந்தது.அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் மீது தமக்கில்லாத ஒரு தகுதி மற்றவர்களிடம் இருக்குமாயினும் பொறபாமைப்பட மாட்டார்கள் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியிலும் அது ஒரு நம்பிக்கையாக இருந்தது.

மாநிறமான மாணவ மாணவிகள் கறுப்பானவர்கள் தமது அழகு சார்ந்து தாழ்வு மனப்பான்மையுடனிருப்பவர்கள் அதனால் அழகானவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் என்ற நம்பிக்கையும் மாணவ மாணவிகள் மத்தியில் இருக்கவே செய்தது.

அவளுக்கு என்னிலை சரியான ஜெலஸ்,நான் அவளைவிட வடிவு அவளைப் போல எனக்க முகத்திலை பொக்களப்பரு இல்லை அதுதான் எனச் சில மாணவிகள் இரகசியமாகக் கதைப்பதும் உண்டு.

புஸ்பகலாவைப் பாரத்து நீ நடிகை ஜமுனாவுக்கு இருப்பது போல இரண்டு பக்கமும் அழகான தொத்துப் பற்கள் இருக்கின்றன.ஜமுனாவைப் போல நீ உயரமாகவும் இருக்கிறாய் என்று மாணவிகள் மட்டுமல்ல மாணவர்கள் சொல்வதையம் நீலலோஜினி கேட்டதால் தன்னைவிட புஸ்பகலா பெரிய அழகியா எனக் கொதித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு மாணவி அழகியாகவும் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்தால் வகுப்பு மாணவர்களின் கவனம் மட்டுமல்ல மற்றைய வகுப்பு மாணவ மாணவிகளின் கவனத்திற்குட்படுவார்கள்.

அது போலவே புஸ்பகலாவும் மாணவ மாணவிகளின் கவனத்திற்குட்படத் தொடங்கினாள்.நீலலோஜினி தான் சிவப்பானவள் அழகானாவள் என்பதுடன் அவளின் கீழ் உதட்டுக்கு கீழ் அழகு மச்சம் இருந்ததாலும் அவளை அறியாமலே அவளுக்கு கர்வம் ஏற்பட்டது.

அவளுக்கு அவள் பரம்பரையைப் பற்றிச் சொல்லிக் குடுத்து வளர்த்தார்களோ தெரியாது அவளின் பரம்பரையினர் உடையார் பரம்பரையினர் என்பதுடன் சமூகத்தில் தங்கள் குடும்பம் உயர்ந்தது என்ற எண்ணம் ஆழமாக அவள் மனதில் ஊன்றியிருந்து.

புஸ்பகலா அதற்கு எதிர்மாறாக இருந்தாள்.தனது அயலவர்கள் தன்னை நீ நடிகை ஜமுனா போல இருக்கிறாய் என்று சொன்ன போதும் கொலிஜ்ஜில் மாணவ மாணவிகள் தன்னை ஜமுனா என்று கூப்பிட்ட போதும் அதனால் அவள் தனது அழகை நினைச்சுப் பெருமைப்படுவதே இல்லை.

புஸ்பகலா சில வேளைகளில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பாள்,ஆனால் சில வேளைகளில் கலகலவென்று அட்டகாசமாகச் சிரித்துப் பேசுவாள்.

வகுப்பிலிருந்து மத்தியானச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு கைகழுவ தண்ணீர்ப் பைப்படிக்கு போகும் போது மற்றத் தோழிகளுடன் அட்டகாசமாச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டே போவதும், பைப்படிக்கு போவதென்றால் ஸ்ராப் றூமைக் கடந்துதான் போக வேண்டுமென்பதால் ஸ்ராப் யன்னலடிக்கு வந்ததும் கடைக்கண்ணால் ஸ்ராப்றூமுக்குள் சுந்தரராஜன் ரீச்சர் நிற்கிறாரா எனப் பார்ப்பதும் அவர் நின்றால் இன்னும் சத்தமாகச் சிரிப்பாள்.

பார் அணளின்ரை சிரிப்பை,ஒரு பொம்பிளைப் பிள்ளை மாதிரியாச் சிரிக்கிறாள்.இது போதாதென்று இவளை நடிகை ஜமுனாமாதிரி என்று சொன்னதால் தான் பெரிய அழகி என்ற நினைப்பு அவளுக்கு என்று சுந்தரராஜன் ரீச்சர் மற்றைய ரீச்சர்மாருக்குச் சொல்வதும் உண்டு.

சில நாட்களுக்கு முந்தி ஓம் ரீச்சர் நான் ஞானத்தை விரும்புகிறன் படிப்பு முடிஞ்சதன் பின்பு அவனைத்தான் கட்டுவன்,பன்னாலைக்கு மருமகளாகப் போவன் என்று புஸ்பகலா திமிருடன் சுந்தரராஜன் ரீச்சருக்குச் சொன்னதைஅவர் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

நீலலோஜினி புஸ்பகலாவின் மீது கோபத்தை அடக்கி வைச்சிருந்த போதிலம் புஸ்பகலாவை பேச வேண்டும் என்ற கோப உணர்வு வளர்ந்து கொண்டிருந்தது.

ஒரு வகுப்பு முடிஞ்சு அடுத்த வகுப்புத் தொடங்குவதற்கிடையில் புஸ்பகலாவை நீலலோஜினி சுட்டெரித்துவிடுவது போலப் பார்;ப்பது தொடர்ந்து கொண்டே இருந்தது.

கொலிஜ் தொடங்கும் நேரம் எல்லா மாணவ மாணவிகளும் இருவர் மூவராக வருவதால் நீலலோஜினியால் எதுவும் செய்ய முடியவில்லை.

நீலலோஜினிக்கு புஸ்பகலா மீது கோபம் என்பதைவிட பொறாமைதான் வளர்ந்து கொண்டிருந்தது.அவள் இந்த வகுப்பைவிட்டு; போனால் நல்லது என்று எண்ணினாள்.

தனது அழகைவிட புஸ்பகலாவின் அழகை எல்லாரும் கொண்டாடுகிறார்களே என்ற பொறமைதான் அதற்குக் காரணம்.

அன்ற நீலலோஜினி நேரத்தோடு வந்து வகுப்பில் உட்கார்ந்திருந்தாள்.புஸ்பகலா வகுப்பிற்குள் நுழைந்து தனது இருக்கையில் உட்கார்ந்தாள்.

நீலலோஜினியும் புஸ்பகலாவும் மட்டுமே வகுப்பில் இருந்தனர்.வேகமாக இருக்கையைவிட்டு எழுந்த நீலலோஜினி புஸ்பகலாவுக்கு அருகில் வந்து நீ என்ன உன்ரை மனசிலை நீ பெரிய மகாராணி என்ற நினைப்போ என்று வேகமாக கேட்க இப்படி அவள் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போய் சில விநாடிகள் மௌனமாக இருந்தவள்,நான் என்னை அழகி என்று உனக்குச் சொன்னனானா ஏன் தேவையில்லையில்லாமல்

சண்டை பிடிக்கிறாய் உனக்கு என்னிலை என்ன பிரச்சினை முதலிலை அதைச் சொல் என்கிறாள் புஸ்பகலா.

பிரச்சினையே நீதான்,நீ எதைக் காட்டி ஞானத்தை வளைச்சுப் போட்டனி,உன்னை எல்லாரும் நடிகை ஜமுனா மாதிரி என்று சொல்ல உனக்கும் தலையிலை கொம்பு முளைச்சிட்டுதாக்கும் என்று நிலலோஜினி மூச்சுவிடாமல் பேசி முடிச்சாள்.

அதைக் கேட்ட புஸ்பகலா நான் சொன்னனானே நான் நடிகை ஜமுனா மாதிரி என்று சொன்னவள்,நீலலோஜினி எதைக் காட்டி என்று சொன்னதை புஸ்பகலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பொத்து வாயை என்ன கருத்திலை நீ எதைக் காட்டி என்று கதைக்கிறாய் என்றது எனக்கும் விளங்கும்,உன்ரை அழகுக்குள்ளை இப்படி அசிங்கமான எண்ணம் இருக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை என்று புஸ்பகலா கோபமாகச் சொல்ல,உனக்குக் கோபம் வர்ற மாதிரித்தான் எனக்கும் வரும்,ஞானம் என்னிலைதான் அக்கறையாக இருந்தவன் என்ரை தலையிலைதான் ரோஜாப்பூ வைச்சு அழகு பார்த்தவன்,அவன் மனம் மாறினதுக்கு நீதானே காரணம் என்று நீலலோஜினி சொல்ல,நான் அவனின்ரை மனசை மாற்றேலை,உன்னை அவன் காதலிக்கிறானா இல்லையா என்று எனக்குத் தெரியாது,அவனிலை எனக்கு விருப்பமிருந்த போதும் அவன் என்னை விரும்பவில்லை இப்பத்தான் அவன் என்னைக் காதலிக்கிறான்; என்னட்டைக் கேட்கிற கேள்வியை அவனிட்டைக் கேள் என்று சொல்லிக் கொண்டே புஸ்பகலா ஏழுந்து நின்று நீலலோஜினியை முறைச்சுப் பார்த்தாள்.

நீ மங்களேஸ்வரியை வருத்தம் பார்க்கப் போகிறன் என்று பொய் சொல்லிவிட்டு ஞானத்தை வருத்தம் பார்க்கப் போனது எனக்குத் தெரியாதென்று நினைக்கிறியோ,போன இடத்திலை உனக்கு மென்சஸ்சும் வந்திருக்கு, ஒரு நாளைக்கு இதையெல்லாம் உன்ரை அப்பா அம்மாவுக்கு சொல்லுறேனோ இல்லையோ என்று பார் என்று நீலலோஜினி சொல்ல,சொல்லு நல்லாய்ச் சொல்லு நான் பொய் சொல்லிவிட்டு ஞானத்தைப் பார்க்கப் போனனான்தான் அதாலை உனக்கு என்ன பிரச்சினை, நீ என்னோடை கதைக்காதை ஞானத்தோடை கதை என்று கோபமாக புஸ்பகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானம் வகுப்புக்குள் நுழைகிறான்.

ஆனால் ஞானம் வகுப்புக்குள் நுழைந்ததை புஸ்பகலாவோ நீலலோஜினியோ கவனிக்கவில்லை.

புஸ்பகலாவிற்கருகில் நீலலோஜினி நின்றதையும் அவர்கள் இருவரின் முகங்களும் கண்களும் சிவந்திருப்பதையும் ஞானம் கவனிக்கிறான்.புஸ்பகலாவுக்குக் கிட்ட வந்த ஞானம் புஸ்பகலாவிடம் என்ன நடந்தது என்று நெற்றியைச் சுருக்கி கண்களால் கேட்கிறான்.

அவன் கேட்டதும்,புஸ்பகலா குமுறி அழுதபடி வாங்கில் உட்கார்ந்து தலையை மேசையில் கவிழ்த்து வைச்சு விம்மி அழுகிறாள்.

அவள் அழுவதைக் கண்ட ஞானம்,என்ன நடந்தது ஏன் அழுகிறியள் என்று கேட்டுக் கொண்டே தனது முகத்தைத் திருப்பி நீலலோஜினியைப் பார்க்கிறான்.

அவளின் கண்களும் கலங்கிச் சிவந்திருப்பதைக் கண்ட ஞானம்,தான் சம்பந்தப்பட்ட விடயத்திற்காகத்தான் அவர்கள் இரண்டுபேரும் வாக்குவாதப்பட்டார்கள் என்பதை அறியாதவனாக மீண்டும் புஸ்பகலாவிடம் நீங்களும் நீலலோஜினியும் சண்டை பிடிச்சனீங்களா என்று கேட்கிறான்.அவள் அமைதியாக அழுது கொண்டிருக்க,சொல்லுங்கள் என்ன நடந்தது என்று தெண்டித்துக் கேட்கிறான்.

நீங்கள் அவளைகாதலிச்சனீங்களாம்;,அவளை ஏமாற்றிப் போட்டு என்னைக் காதலிக்கிறதுக்கு நான் உங்களை வளைச்சுப் போட்டனாம் என்கிறாள்,அதோடை அவள் வேறொன்றையும் சொன்னாள் என்று புஸ்பகலா தழுதழுத்த குரலில் சொல்ல,நீலலோஜினியை நோக்கி கால் வைத்த ஞானம் மாணவ மாணவிகள் அடுத்தடுத்து வகுப்புக்குள் நுழைவதைக் கண்டதும் எதுவுமே நடக்காதது போல தனது முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது தனது இருக்கையில் போய் அமர்கிறான்

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.