இலக்கியச்சோலை

“தித்திக்கும் முத்தொள்ளாயிரம்”….. பாகம் 5 …. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.

            தவறு செய்தது கண், தண்டனை தோளுக்கா?

வீதியுலா வரும் மன்னனில் காதல்கொள்ளும் கன்னியரைப் பற்றிய இன் னுமொரு பாடல் இதுவாகும்.

எப்போதும் சிரித்தும், களித்தும் குதூகலத்துடன் காணப்படும் அந்த இளம் பெண் மிகவும் கவலையுடன், களையிழந்த முகத்தோடு அவளின் வீட்டில் இருக்கிறாள். அவளைக் காணவந்த தோழி அவளின் முகம் வாடியிருப்பதைக் கண்டு காரணம் கேட்டாள். அப்போது அவள் கூறினாள், ” உனக்குத் தெரியுமா, மன்னன் கிள்ளி வளவன் வீதி உலா வந்துகொண்டிருந்தான். அவனை மைதீட்டிய என் கண்களால் கண்டேன். உடனே என் நெஞ்சிலே காதல் கொண்டேன். அதன்பிறகு அவனையே நினைத்திருக்கிறேன். மறக்க முடியவில்லை. அந்த ஏக்கத்தால் எனது தோள்கள் வாடி வதங்கிவிட்டன. இது நியாயமா? என் கண்கள் செய்துவிட்ட தவறுக்காகத் தோள்கள் தண்டிக்கப்படலாமா? இப்படி, ஒருவர் குற்றம் புரிந்தால் இன்னொருவருக்குத் தண்டனை கொடுப்பதா? இந்த வளவன் செங்கோல் ஓச்சுகின்ற செப்பம் இதுதானா? ” என்று தோழியைக் கேட்கிறாள். மன்னன் கோலோச்சுவதில் குறை சொல்வதைப்போல அவளது வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளில், அவளின் மனதில் தேங்கிநிற்கும் காதலை உணரக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்தப்பாடலின் சுவை தித்திக்கிறது.

                                 கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம்

                                 தண்டப் படுவ தடமென் தோள் கண்டாய்

                                உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு

                               எலாஅம் முறைகிடந்த ஆறு (பாடல்இல: 36)

என் மைதீட்டப்பட்ட என் கண்கள் அவரைக் கண்டன. எனது நல்ல உள்ளம் அவரோடு கலந்துவிட்டது. (அதற்காக இப்போது) எனது அகன்ற, மென்மையான தோள்கள் தண்டிக்கப்படுவதைப் பார்த்தாய் அல்லவா? வீதியுலா வருகின்ற, உறையூரின் வளவன் செங்கோல் ஓச்சுகின்ற முறை இதுதானா? என்பது இதன் நேரடிக் கருத்தாகும்.

 வண்டுக்கு இரங்கும் மன்னன், இந்தப் பெண்டுக்கு இரங்கானா?

பாண்டிய மன்னன்மேல் தீராத காதல் கொண்டிருந்தாள் ஓர் அழகிய இளம் பெண். அவனைக் காணும் வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம், இயற்கையாகவே அவளுக்கு உரிய நாணம் அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குத் தடையாக இருக்கிறது. தலை குனிந்து நிற்பாள். தன்னால் அவனை நேருக்கு நேர் காண்பதற்குத் தன்னால் முடியவில்லையே என்பதற்காக அவள் வருந்துவதில்லை. பெண்மைக்குச் சிறப்பான குணங்களில் ஒன்றான நாணம் தனக்கு அதிகமாகவே இருப்பதாக எண்ணிப் பெருமைப்படுவாள். ஆனால் மன்னனை நன்றாக உற்றுப் பார்க்க முடியாமல் போவதால், உண்டான ஏக்கத்தால் இப்போது தனது உடல் சோர்வடைவதும், கைகள் மெலிந்து வளையல்கள் கழன்று விழுந்துவிடுவதும்

அவளுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கின்றன. அவனை நேரில் பார்த்துத் தன் காதலை வெளிப்படுத்திவிட்டால் தனது துன்பமெல்லாம் நீங்கிவிடும். அதற்கு என்ன வழியென்று தெரியாமல் தடுமாறுகிறாள். மன்னன் தனது தலையிலே சூடியிருக்கும் மலர்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அவை மலர்களிலே உள்ள தேனைக் குடித்துப் பசியாறுகின்றன. அவ்வாறு, வண்டுகளின் பசியையே போக்குகின்ற மன்னன் தனது காதல் பசியைப் போக்க மாட்டானா? அதற்காக அவனை நேரிலே காண மாட்டேனா? அதற்கு வழியொன்றும் தெரியாமல் தவிக்கும் தனக்கு யாரும் உதவமாட்டார்களா என்று அவள் ஏங்குகின்றாள். இந்தக் காட்சியை வெளிப்படுத்தும் குறள் இது.

                                      நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன்நின்று

                                      காணாக்கால் கைவளையுஞ் சோருமால் காணேன் நான்

                                      வண்டு எவ்வம் தீர்தார் வயமான் வழுதியைக்

                                     கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு (பாடல் இல்: 78)

மன்னனைக் காணும்போது எனக்கு நாணம் (வெட்கம்) உண்டாகாது விட்டால், எனது பெண்மைக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். அவன் எனக்கு முன்னால் இருக்கும்போது அவனை நிமிர்ந்து பார்க்காமல் விட்டால் எனது கையிலுள்ள வளையல்கள் கழன்று விழும். விரைந்துசெல்லும் குதிரைகளை வைத்திருக்கும் அவன் அணிந்துள்ள மலர்களில் இருக்கும் தேனைக் குடித்து வண்டுகள் பசியாறுகின்றன. இவ்வாறு வண்டுகளின் பசியைப் போக்குகின்ற, மன்னனைக் கண்டு எனது காதல் பசியைப் போக்குவதற்கு என்ன வழியென்று தெரியவில்லையே? ( எவராவது சொல்லமாட்டீர்களா?) என்பது இதன் நேரடிக் கருத்து.

கொஞ்சம் தவறினால், நெஞ்சம் தாங்குமா?

பாண்டிய நாட்டின் கிராமப்புறம் ஒன்றில் வசதியான பெற்றோரின் ஒரே மகள் அவள். வனப்பான முகமும், வாளிப்பான உடலும் கொண்ட பருவ மங்கை. கூடல் கோமான் என்ற சிறப்புப்பெயர்கொண்ட பாண்டிய மன்னனின் வீரதீரச் செயல்களைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்டறிந்த நாள் முதல் அவளுக்கு மன்னன்மேல் அளவுகடந்த மதிப்பும் பற்றும் உண்டாகியது. நாளாக நாளாக அந்தப் பற்று, பாசமாகி மன்னனைக் காணவேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தில் எழுந்தது. மதுரை நகருக்குச் சென்றுதான் மன்னனைக் காணமுடியும். கிராமத்தில் வாழும் அவளுக்கு அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. இந்த நிலையில், பாண்டிய மன்னன் ஒருநாள் “பொழிலாட்டயர்தலுக்காக” வனப்பகுதிக்குச் செல்லும்போது அவளது ஊரினூடாகச் சென்றான். அப்போது ஊர்மக்கள் அவனை எதிர்கொண்டு வரவேற்பளித்தார்கள். அப்போது மக்களோடு மக்களாக அவளும் மன்னனை கண்ணாரக் கண்டு மகிழ்ந்தாள். அன்றுமுதல் அவளுக்குத் தூக்கமும் வரவில்லை. எப்பொழுதும் பாண்டிய மன்னனின் அழகிய தோற்றமே அவளின் உள்ளத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. மன்னன்மேல் அவள் கொண்டிருந்த பற்றும், பாசமும் காதலாக மாறி, எந்நேமும் மன்னனின் எண்ணமாகவே மனம் துடித்துக்கொண்டிருந்தது. மன்னனுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும், அவனோடு சேரவேண்டும் என்ற எண்ணம் ஒன்றேயன்றி வேறெவ்வித சிந்தனையும் இல்லாமல் காதல் பித்துப் பிடித்திருக்கும் அவளது நிலைமை அவளின் தோழிகளுக்கும் தெரியவந்தது. அவளது எண்ணம் நிறைவேறுமா என்பதைக் “கூடல் இழைத்துப்” பார்க்கலாம் என்று அவளின் தோழியொருத்தி அவளிடம் கூறினாள். ஆரம்பத்தில் அதற்கு மறுத்த அவள் பின்னர் இணங்கினாள். வழமையாக அவர்கள்

விளையாடி மகிழும் தோழிகளோடு ஆற்றங்கரை மணற்பரப்பிற்குக் “கூடலிழைத்துப்” (கடற்சுழிவிளையாட) பார்க்கச் சென்றார்கள்.

கூடல் இழைப்பது (கடற்சுழி விளையாட்டு) என்பது பண்டைக்காலத்தில் சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. தாம் நினைப்பது கைகூடுமா இல்லையா என்பதை அறிவதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இதனை விளையாடுவார்கள். மணல் தரையில் அமர்ந்து, கண்களை மூடியபடி, விரும்பிய விடயம் ஒன்றை நினைத்துக்கொண்டு, தங்கள் சுட்டுவிரலால் மணலில் ஒரு வட்டத்தைக் கீறுவார்கள். வட்டத்தைத் தொடங்கிய இடத்திலேயே அது சரியாக வந்து பொருந்திவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், வட்டம் போடும்போது கோடு சற்று விலகி விட்டால் நடக்காது என்பதும் நம்பிக்கை.

ஆற்றங்கரை மணலில் அவளும் தோழிகளும் வட்டமாக அமர்ந்தார்கள். அவளுக்கு முன்னால் மணலைச் சீராகப் பரப்பினார்கள். அதில் அவளைக் கூடல் இழைக்கச் சொன்னார்கள். அவளும் கண்களை மூடியிருந்து, ” தனது காதல் நிறைவேறிப் பாண்டிய மன்னனும் தானும் சேர்ந்து மகிழ்வோமா? என்று நினைத்துக்கொண்டே தனது வலக்கை ஆட்காட்டி விரலால் மணலில் வட்டம் வரையத் தொடங்கினாள். அவள் வரையும்போது அங்கே அமர்ந்திருந்த தோழியர்கள் மிகவும் ஆவலோடும், பதற்றத்தோடும், ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் சீராக வரைந்துகொண்டிருந்த அவள் தொடங்கிய இடத்தினை அண்மிக்கும் தறுவாயில் அதற்குமேல் வரையாது அப்படியே மணலில் விரலைப் புதைத்தவாறு நிறுத்திக்கொண்டாள். தோழிகள் தொடர்ந்து வரையும்படி சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளது விரல் அசையவில்லை. நிறுத்திக் கொண்டாள்.

அவளுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. ஒருவேளை தன்னால் வட்டத்தை ஒழுங்காக வரைய முடியாமல், கடற்சுழி சரியாக அமையாமல் போய்விட்டால் அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கு இல்லை. அதனால் மேற்கொண்டு வரைவதற்கு அவளின் விரல்கள் தயங்கின, நடுங்கின, நிறுத்திவிட்டாள்.

                                     கூடல் பெருமானைக் கூடலார்கோமானைக்

                                      கூடப் பெறுவேனேல் கூடு என்று கூடல்

                                     இழைப்பான்போல் காட்டி இழையா திருக்கும்

                                    பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து (பாடல் இல: 81)

“கூடல் மாநகர் என்று சொல்லப்படும் மதுரையில் வாழும் மக்கள் தலைவனான பாண்டிய மன்னனுடன் கூடி நான் இன்பம் பெறுவேனென்றால் கடற்சுழி சரியாகப் பொருந்தும்” என்று நினைத்துக் கூடல் இழைக்கத் தொடங்கினாள், மாறாக அது பொருந்தாமல் தவறிவிட்டால் அதனைத் தன்னால் தாங்க முடியாதே என்று எண்ணி மயங்கினாள், அதனால் கூடல் இழைப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்தாள், என்பது இதன் நேரடிக் கருத்து.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.