கவிதைகள்

“வளவகோன் பாவை மங்கையற் கரசியார்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பாண்டிய மன்னன் பரமனை மறந்தான்
பூண்டிடு வினையால் சமணம் புகுந்தான்
சைவத்தை இகழ்ந்திடு சமணச் சிந்தனை
உள்ளம் இருத்தினான் உவகை எய்தினான்
 
ஆட்சியில் சமணம் அரசபை சமணம்
நோக்கிடும் இடமெலாம் சமண மடங்கள்
காற்றிலே சமணம் காவிலும் சமணம்
நாட்டிலே சமணம் விரிந்துமே நின்றது
 
பெண்ணை அழகை சமணம் வெறுத்தது
கல்லும் கனியும் இசையை வெறுத்தது 
அறத்தை முதலாய் ஆக்கியே நின்றது
அறந்தான் நெறியென சமணம் அறைந்தது
 
இறுக்கம் இறுக்கமாய் தத்துவம் சொன்னது
இயல்புடை வாழ்க்கையை இகழ்ந்தே நின்றது
இல்லறம் என்பதை ஏற்றிட மறுத்தது
எல்லாம் வெறுமை ஆக்கிட முயன்றது
 
இயல்புடை வாழ்க்கையை ஏற்றிட மறுத்தது 
இன்பம் என்பதை மறுத்தே நின்றது
ஆடல் பாடல் அறத்துக்கு எதிரியே
என்றே சமணம் எழுந்தே உரைத்தது
 
உலக வாழ்க்கையை ரசித்திட மறுத்தது
உலக இன்பங்கள் துன்பமே என்றது
கூடுதல் ஆடுதல் பாடுதல் யாவுமே
கேடினை நல்கிடும் என்றே மொழிந்தது
 
பாண்டியன் மனையாள் சோழத்தின் கொழுந்து
நீண்டநல் பக்தி நெஞ்செலாம் சிவனே 
சைவ நெறியினை தந்னுயிர்  ஆக்கிய
மாண்புடை மங்கையாய் வளர்ந்துமே இருந்தார்
 
மங்கல நாணைப் பூட்டிய மன்னவன்
தன்கருத் துணரா நடப்பதை எண்ணி
கலங்கினாள் தினமும் கணவன் திருந்திட
வேண்டினாள் வேண்டினாள் சிவனை வேண்டினாள் 
 
அரசபை அமர்ந்தார் அத்தனை பேரும்
சைவம் ஒதுக்குச் சமணம் சேர்த்தவர் 
அச்சபை அமைச்சராய் ஒருவர் விளங்கினார்
அவரே சைவத்தை அணைத்தார் அகத்தினில் 
 
சைவக் குலத்தைக் காத்திட வந்ததால்
குலச்சிறை என்னும் பெயரே வாய்த்தது 
குலத்துக் கேற்ற குணத்துடை அமைச்சராய்
நிலத்திடை மதிக்க நின்றார் அமைச்சராய் 
 
மன்னவன் மனையாள் மங்கையற் கரசி 
உள்ளமோ சைவத்தை எண்ணியே நின்றது
மன்னவன் மனத்தை மாற்றியே  மங்கை
சைவத்தை அகத்தில் அமர்த்திட நினைத்தாள் 
 
அமைச்சராம் குலச்சிறை அரசிக்குத் துணையாய்
அரசனை மாற்றிட அருந்துணை ஆகினார் 
காலம் கனிந்தது ஞானம்  மிகுந்தநல்
சீலம் நிறைந்திடு சம்பந்தர் வந்தனர் 
 
சம்பந்தப் பெருமான் வந்தநல் சேதியை
அமைச்சராம் குலச்சிறை அரசிக்குச் சொன்னார்
அழவிலா ஆனந்தம் அடைந்தாள் அரசியும்
ஆலவாய் அண்ணலை போற்றியே நின்றாள்
 
சம்பந்தர் வருகையை சமணர்கள் வெறுத்தனர்
சமணத் தலைமைகள் அரசனை அணுகினர்
அரசன் மனத்தில் அவலம் நிறைந்தது
அரசியோ அவனை ஆறுதல் படுத்தினாள்
 
அமைச்சரும் அரசியும் ஆளுடைப் பிள்ளையை
முறையாய் வணங்கி அமைவிடம் நல்கினர்
வளவகோன் பாவை மங்கையற் கரசியை
மாஞானி சம்பந்தர் வாழ்த்தியே மகிழ்ந்தார்
 
சம்பந்தப் பெருமான் தங்கிய இடத்துக்கு
வம்பராம் சமணர் தீயினை இட்டார்
இட்ட தீயது இடரினை விளைக்கா
சமணம் சார்ந்திட்ட அரசனைப் பிடித்தது
 
தீயது வெப்பு நோயாய் மாறியே
அரசனை வதைத்து ஆக்கினை கொடுத்தது
சமணத் தலைமகள் மந்திரம் மாயங்கள் 
எதுவும் அரசனின் வேதனை போக்கில 
 
மங்கையில் நல்லாள் மங்கையற் கரசி
வேண்டுதல் ஏற்றிட மன்னவன் இணங்கினான்
குழந்தை ஞானி சம்பந்தப் பெருமான் 
அரசனின் நோயினை அகற்றிட வந்தார்
 
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு 
சம்பந்தப் பெருமான் உருகிப் பாடினார்
ஒட்டிய நோயே ஓடியே பறந்தது
 
சமணர்கள் வெருண்டார் வெகுண்டார்
தோற்றதை ஏற்கா தொடர்ந்தார் பிணைக்கினை
அனலிடை வாதம் புனலிடை வாதம்
அத்தனை செய்தும் அடங்கியே போனார்
 
அரசன் விழித்தான் அடக்கினான் சமணரை
அரசன் அகத்தில் அமைதி அமர்ந்தது
சைவம் எழுந்தது சம்பந்தர் மகிழ்ந்தார்
மனநிறை வுற்றார் மங்கையற் கரசியார் 
 
பாண்டி நாட்டிலே பாங்காய்ச் சைவம் 
ஊன்றிட உழைத்தார் உத்தமி பத்தினி
ஆண்டவன் அருளால் சம்பந்தர் இணைந்தார்
அனைவரும் போற்றிட அரசியும் திகழ்ந்தாள்
 
அரசமா தேவி மங்கையற் கரசி
அருளுடை அடியார் வரிசையில் இணைந்தார்
மாதவ சம்பந்தர் வாழ்த்தினைப் பெற்றார்
வளவகோன் பாவை மங்கையற் கரசியார்.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்           மெல்பேண் … அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.