கட்டுரைகள்

சொல்லித்தான் ஆகவேண்டும்!… திருவிழாக் கடைகளின் தீர்மானம்!! …. சொல்-03 …. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ ஐக் களமிறக்குவதென்று 30.04.2024 அன்று வவுனியா வாடிவீட்டு விடுதியில் கூடிய தமிழர் தாயகத்தைப் (இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைப்) பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர்,

(i) தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாகக் கையாள்வது.

(ii) ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத் தமிழ் மக்களுக்காகக் கையாள்வது.

(iii) அதற்கு அமைய ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது.

(iv) அதற்காகச் சிவில் சமூகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

(v) தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுய நிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான பொருத்தமான எதிர்காலக் கட்டமைப்புகளை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது.

(vi) இவ்வாறு சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் தங்களுக்கு இடையே ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தபின், அடுத்த கட்டமாக அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் பொருட்டு கட்சிகளோடு உரையாடுவதற்கு என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது.

என்றவாறான செய்திகள் அச்சு ஊடகங்களிலும் மின்னூடகங்களிலும் முகநூல்களிலும் இடம்பிடித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இச்செய்திகளை வாசிப்பதற்கும் – கேட்பதற்கும் ‘குளிர்ச்சி’ யாகத்தான் இருக்கிறது. ஆனால், இது கடந்த எழுபத்தைந்து வருட காலத்திற்கும்

மேலாகத் தமிழர் தரப்பு செய்து வந்த அல்லது சொல்லி வந்த ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியலாகத்தான் இருக்கிறது/இருக்கப் போகிறது.

மேலும், இந்தத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ள சிவில் சமூகத்தினர் எந்த அளவுக்கு வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் அல்லது பிரதிபலிக்கின்றனர் என்பது பிரதானமாக எழும் கேள்வியாகும்.

சிவில் சமூகத்தினர் என்று சொல்லிக்கொண்டு கூட்டத்தில் பங்கு பற்றியுள்ள குழுக்களைப் பார்த்தால் அநேகமானவை தம்மைப் ‘புலிகளின் முகவர்’ களாகவே அடையாளப்படுத்தியுள்ளவை. அன்றியும் இவை 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற பின்னர் தத்தம் தனிநபர் அல்லது கோஷ்டிகளின் நிகழ்ச்சி நிரல்களுடன் தோற்றம் பெற்றவை. இக்குழுக்கள் தீர்த்தத்தோடு மூடுவிழாக்காணும் ‘திருவிழாக் கடைகள்’ போன்றவை ஆகும். ஆகவே, இவை எந்த அளவுக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன அல்லது எந்த அளவுக்கு மக்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது கேள்விகளாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது தேவையானது இதுவரை இருந்த காலங்களைப் போன்று ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியல் அல்ல. யதார்த்த பூர்வமான-அறிவுபூர்வமான-தந்திரோபாயம் மிக்க செயற்பாட்டு அரசியலாகும்.

இலங்கைத் தமிழர் தரப்பு அரசியலை அரசியல் கோட்பாட்டு ரீதியாக நுணுகி ஆராய்ந்தால் ‘புலிச் சமூகம்’ வேறு ‘தமிழ்ச் சமூகம்’ வேறு. இரண்டும் ஒன்றல்ல. புலிகளின் பிரச்சினை வேறு. தமிழ் மக்களின் பிரச்சினை வேறு. புலிகளின் பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் ஒன்றாகப் பார்த்தமைதான் இதுவரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் பேரழிவுகளுக்கும் பிரதான காரணமாகும்.

இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் மீண்டும் புலிகளின் பிரச்சினையைத் (இப்போது புலிகளின் முகவர்களின் பிரச்சினையை) தமிழ் மக்களின் பிரச்சினைகளோடு ஒன்றாகப் பொருத்திப் பார்க்கும் ‘ஆபத்தான’ அரசியல் ஆகும்.

தமிழ் மக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியமான தேவை என்னவெனில், இலங்கை அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் சமகாலத்தில் அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய வெகுஜனச் செயற்பாடுகளும் அச்செயற்பாடுகளை வழிப்படுத்தி நெறிப்படுத்தக் கூடிய அரசியல் தலைமையுமேயாகும்.

தமிழ் மக்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாகத் தீர்மானங்களை எடுக்க வேண்டும். மீண்டும் பாழ்ங்கிணற்றுக்குள் விழுந்து விடாமல் எச்சரிக்கையோடு செயற்படவும் வேண்டும்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ‘வாய்ப்பாடு’ எந்த ஆக்கபூர்வமான அரசியல் அடைவுகளையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தரப்போவதில்லை.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக அல்லது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்த கதையாகத்தான் தமிழர் தரப்பு அரசியலில் இருக்கப் போகிறது. உண்மையிது! வெறும் ஊகமில்லை!!

Loading

One Comment

  1. திரு.தம்பியப்பா கோபாலகிருஷ்ணணன் அவர்களின் ‘சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற இந்தக் கட்டுரை மிகச் சரியானதே அவருக்கு எனது பாராட்டுக்கள்.

    நானும் கிட்டத்தட்ட 75 வருடங்களாக அவதானித்து வந்ததில் இன்னும் எமது அரசியல் அ…ஆ…அரிச்சுவடியிலிருந்து நகரவே இல்லை.

    எமது அரசியல் பொழுதுபோக்கு அரசியலாகும்.ஜனாதிபதித் தேர்தலுக்கு பொதுத் தமிழ் வேட்பாளர் என்பது ஒரு தேவையற்ற நடவடிக்கையாகும்.

    கட்டுரையில் குறிப்பிட்டது போல புலிச் சமூகம் வேறு,தமிழ்ச் சமூகம் வேறு.புலிச் சமூகமும் இப்பொழுது ஐஸ்கட்டி நிலையில்தானிருக்கிறது.

    நமது அரசியல் கற்பனாவாத அரசியல்

    ஏலையா க.முருகதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.