கவிதைகள்
“இக்கணத்திலிருந்து வாழவிரும்புகிறேன்” …. கவிதை …. முல்லைஅமுதன்.
கிளை கிறீச்செனும்
ஒலியெழுப்பி முறியத் தயாராகும் போது
வேர்களுக்கும் வலித்திருக்கவேண்டும்.
மாலையானதும் உதிர்ந்துவிடுவேன் என நினைத்தழும்
பூக்கள்கூட
தன்னைத்தாங்கிய கீலைக்காக வருந்தவே செய்தது.
யார் யாரோ வெட்டு போது மௌனமாக அழுதபடி பரிதவிக்கும்
மரம் ஒருகணம் யாவற்றுக்குமாக பிரார்த்தித்தது.
அக்கணமே இறந்துவிடலாம்..எனக்காகவும்
அழ இருக்கும் என் உறவுகளை நினைக்கையில்
பெருமையாகவும் இருக்கவே செய்கிறது.எனி
என்னை காலமுள்ளவரைக்கும்
பலரும் நினைப்பர்.
எங்கோ அலைந்து களைப்புடன்
வந்தமர்ந்தது சிட்டுக்குருவி ஒன்று..
தாயானேன்.
என் சின்னக்குருவியே
இக்கணத்திலிருந்து வாழவிரும்புகிறேன்.
எங்கள் வீட்டு மரத்தின் கிளை
உன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது
வேடந்தாங்கலாக…
முல்லைஅமுதன்.