“கடலும் கப்பலும் கரையாத சோகமும் வணங்கா மண்” …. நூன்முகக் குறிப்பு … (அங்கம் -03 } …. முனைவர் செல்லத்துரை சுதர்சன்
வணங்கா மண் – நூன்முகக் குறிப்பு
முனைவர் செல்லத்துரை சுதர்சன்
( சிரேஷ்ட விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை, இலங்கை. )
அங்கம் -03
முதலில், ஒரு அரசியல் இலக்கியக்காரன் ஒரு அசல் புலமையாளனாக இருக்க வேண்டும். புலமை என்பது ஒரு சமூகச் சொத்து. கிராம்ஷி புலமையாளர்களைச் ‘சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர்’ எனவும் ‘வரலாற்று அசல்’ எனவும் சுட்டினார். அரசியல் செயற்பாட்டாளர்கள் பொதுவெளியில் புலமையாளர்களாக அங்கீகரிக்கப்படுவது என்பது, அவர்கள் எவ்வளவு தூரம் சமகால உலகின் யதார்த்த நிலைமையுடன், சமூகத்தின் பொது விவகாரங்களில் தம்மைப் பிணைத்துக்கொண்டு ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
அந்தவகையில் ரவிக்குமார் என்கின்ற புலமையாளர் ‘ஈழ மற்றும் தமிழகச் சமூகங்களின் அறிவார்ந்த ஒருங்கிணைப்பாளர்’ என்ற அந்தஸ்துக்குரியவர். இந்த அந்தஸ்தை அவர் தனது எழுத்துக்களின் மூலமாக, முள்ளிவாய்க்காலின் முன்னரும் அதன் பின்னரும் தொடர்ச்சியாகப் பேணிவருபவர். ‘புலமையாளர், பொதுவெளியில், நிராதவராக்கப்பட்ட, பிரதிநிதித்துவம் இழந்துபோன, மறக்கப்பட்டுவிட்ட மக்களின் குரலாக நிற்பார்’ என்று இலக்கணம் வரைகிறார், எட்வர்ட் ஸெய்த்.
இந்த இலக்கணத்தின் வாழும் வடிவம்தான் ரவிக்குமார். அவர், எப்போதும் ‘அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் புலமையாளர்’. அவரது இந்த நூலும் இதைத் தெளிவாகவே உணர்த்துகிறது.
ஈழத் தமிழர் தொடர்பான ரவிக்குமாரின் இந்த எழுத்துக்களைப் பேசுவதென்பதும் அலசுவதென்பதும், நமது வரலாற்றை நாம் படிப்பதுதான். ரவிக்குமாரது எழுத்துக்களை வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் அவரை நாம் ஒரு ஈழத் தமிழராக, ஈழத் தமிழ்ப் புலமையாளராக உணரும் தருணம்தான். ஈழம் தொடர்பான அவரது எழுத்துக்கள் ஈழத் தமிழரின் பண்பாட்டுக் காப்புணர்வை அதிகம்
கொண்டவை. ஈழப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் ஊடுருவி, அதன் தனித்துவ அம்சங்களின் காலத்துக்கேற்ற வகையிலான நிலைபேற்றில் அக்கறை கொள்பவை.
ஈழத் தமிழர் நிலம் மற்றும் அதன் வரலாற்றுத் தொன்மையை மீட்டெடுப்பதில் அதிகம் கரிசனை காட்டுபவை. தமிழ் மொழியின் வேரிலும் அதன் விழுதுகளிலும் ஒட்டி வளர்ந்த ஈழத் தமிழ் இனச் செழுமையை, மீளவும் வரலாற்று வெளியில் நிறுவுபவை. ஒரு நடுநிலையான நீதித்துறையாளனின் வரைபுகள் போன்றவை, ஈழத்து அரசியல் தொடர்பான ரவிக்குமாரின் எழுத்துக்கள் என்றால் அது மிகையல்ல.
ஈழத்து அரசியல் வரலாற்றைப் புரட்டினால், துப்பாக்கிகள் படை வீரர்களைக் குறி வைப்பதற்கு முன்னரே, மூளைசாலிகளின் உயிர்களைக் காவுகொண்டு அவர்களின் குருதியைக் குடித்து ஏப்பமிடுவதைப் பக்கம் பக்கமாக வாசிக்க முடிகிறது. அரச இயந்திரமும் சரி, விடுதலைப் போராட்டக் குழுக்களும் சரி ஆயுதமேந்திய எதிரிகளைவிடவும், விமர்சிக்கும் தன்மை கொண்ட அரசியல் எழுத்துக்காரரையே மிகப் பெரிய எதிரியாகக் கண்டு, அச்சம் கொண்டு, அவர்களை அச்சுறுத்தியோ, துப்பாக்கி ரவைக்குப் பணியவைத்தோ, ஆட்கடத்தல் செய்து சித்திரவதை செய்தோ அவர்களது குரல்களையும் பேனாக்களையும் மௌனிக்கச் செய்யும் நாசகாரக் குணத்தைக் கொண்டிருந்தன. பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் மட்டுமல்ல அரசியல் எழுத்துக்கள் சுமந்த பத்திரிகைகளை விற்றுத் திரிந்த வீதியோரப் பத்திரிகை வியாபாரிகளும் ‘இனந்தெரியாத நபரால்’ சுட்டுக்கொல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டிருந்தனர்.
எழுத்து, பேச்சு ஆகியவற்றை உரிமை என்று பேசிய விடுதலைப் போராளிகளும் அரசும் ‘கருத்துக்களை ஒடுக்கும் இயந்திரம்’ என்ற நிலையில் செயற்பட்ட வேளையில் அலைகடலுக்கப்பால், தமிழ்ச் தேசியத்தை விமர்சனத்துடன் ஏற்றுக்கொண்டு எழுதிய ரவிக்குமாரின் எழுத்துக்கள் வரலாற்று முக்கியத்துவமுடையவை.
ஈழத்தில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான சூழல் துளியளவும் இல்லாத நிலையில், ஈழத்துத் தமிழ்ச் சூழலில் அரசியல் எழுத்துக்களை எழுதியவர்கள் காவுகொள்ளப்பட்ட வேளையில், ஈழத் தமிழ்ச் சூழலைப் புரிந்துகொண்டு, கொள்கை விளக்கம் செய்யும் வகையிலும் கருத்துநிலைத் தெளிவுபெறும் வகையிலும் ரவிக்குமாரது எழுத்துக்கள் வெளிவந்தன. அந்த வகையில் ரவிக்குமார் ஈழத்தமிழரின் எண்ணமாகவும் குரலாகவும் எழுத்துக்களாகவும்
இருந்துள்ளார் என்பது ஈழத்து அரசியலில் அவருக்கான வகிபங்கைக் காலந்தோறும் உறுதியாக உணர்த்தி நிற்கும்.
ஈழத்து அரசியல் குறித்த ரவிக்குமாரின் எழுத்துக்களில் ஈழத்துத் தமிழ் அரசியல் தொடர்பான கருத்துநிலைத் தெளிவுடைய எழுத்துகள், தமிழகத்தில் உள்ள ஈழத்து அகதிகளின் உரிமைகள் தொடர்பான எழுத்துகள் ஆகிய இரண்டும் அதிக முக்கியத்துவம் உடையவை என்று புது டில்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் ஆற்றிய ஆய்வுரை ஒன்றில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். வணங்கா மண் என்ற இந்த நூலிலும் அக்கருத்து மீளவும் உறுதிப்படுகிறது.
ஈழத்துத் தமிழ் அரசியல் தொடர்பான கருத்துநிலைத் தெளிவுடைய அவரது எழுத்துக்களை இந்த நூலிலும் அவதானிக்க முடிகிறது. ஈழத் தமிழினத்தின்மீது அதிகாரக் குவிப்பும் அடக்குமுறையும் மேலோங்கியபோது, தனிமனிதன், குழு, சமூகம், அரச நிறுவனம், போராளிகள் அமைப்பு ஆகியவற்றின் கருத்தியலை விமர்சித்து அவர் எழுதிய உண்மையை விளக்கம் செய்யும் எழுத்துகளை இந்த நூலில் வாசிக்க முடிகிறது. இலங்கையின் இனப்பிரச்சினையை இலங்கைக்குரியதாக மட்டும் அவர் பார்க்கவில்லை. அண்டை நாடு என்ற வகையில் அதனைத் தனது உள்நாட்டுப் பிரச்சினையாகவும் அவர் காண்கிறார். ‘இலங்கையில் போர் மூண்டால் தமிழகத்துக்கு வந்து சேர்வது செய்திகள் மட்டுமல்ல. அகதிகளும்தான். இலங்கைப் பிரச்சினை என்பது நமக்கு அண்டை நாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல. உள்நாட்டுப் பிரச்சினையும்கூட. இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகளில் மூவரில் ஒருவர் ஈழத்தமிழர்.
ஓவ்வொரு நாளும் நமது கரைகளில் அவர்கள் உயிருள்ள சடலங்களாக ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.’ இன்னோரிடத்தில், ‘தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை. அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. இங்கு ஈழப் பிரச்சினையைப் பேசியவர்கள் அதை ஓர் அரசியல் பிரச்சினையாக மட்டுமே குறுக்கிவிட்டனர். அதன் பண்பாட்டுப் பரிமாணத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அந்தத் தவறு களையப்பட வேண்டும்.’ என்கிறார்.
பிறிதோரிடத்தில், ‘முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பேசும்போது அதை நமது அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது மிகமிக அவசியம்’ என்கிறார். இலங்கைப் பிரச்சினையை அயலில் உள்ள சிறு தீவொன்றின் பிரச்சினையாக எண்ணிய அரசியல்வாதிகள் சிலர் இருந்த காலத்தில், ‘அவர்களுடைய பிரச்சினை’ என்பதிலிருந்து ‘எங்களுடைய பிரச்சினை’ என அவர் அதனைப் புரிந்துகொண்டது, பிராந்திய அரசியல் வலைப்பின்னலின்
இயங்கியலையும் அதன் எதிர்கால நிலையையும் நன்குணர்ந்ததைப் புலப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான அவரது அனைத்து எழுத்துக்களிலும், அவர் ஈழத்தமிழரை மூன்றாவது மனிதராகக் காணவில்லை. ‘தமர்’ என்ற நிலைநீங்கி, ‘நமர்’ என விரிந்த தளத்தில், தன்மைப் பன்மையைக் கையாள்பவராகவே அவர் விளங்குகிறார்.
இலங்கையின் உள்ளக அரசியல் முரண்பாடுகள், பொருளாதாரத் தடை, இனச் சுத்திகரிப்பு, போரவலம், இடப்பெயர்வு, முகாம் வதைகள், விடுதலை அமைப்புகளின் முன்னெடுப்புகள் மற்றும் அவற்றின் அரசியல் நகர்வுப் போதாமைகள், இலங்கையில் இந்தியப் படைகளின் நிலவரம், இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அரசின் நிலைப்பாடுகள், முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான ஈழத் தமிழர் நிலை போன்ற பலவும் இந்நூலில் விரவி வருகின்றன. இலங்கையின் அரசியல், சட்டம் முதலாக விடுதலை அமைப்பின் நிலைப்பாடுகள் வரையும், இலங்கையின் இன வரலாறு முதலாகப் பண்பாடு வரையும், இந்தியாவின் உணவு, மருத்துவம் போன்ற உதவிகள் முதலாக அரசியல் ரீதியான குடியுரிமை வழங்கல் வரையும், இனநல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகள் முதலாகச் சமாதான முறிவு மற்றும் போரின் முகங்கள் வரையும், இலங்கைப் பிரச்சினை முதலாகச் சர்வதேச அரங்கில் அதன் நிலவரம் வரையும் அவரது எழுத்துகள் பயணம் செய்கின்றன.
‘முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?’ என்ற அவரது கட்டுரை, போர் அரசியலின் முடிவுக்குப் பின்னரான காலத்தில், முடிந்துபோனவற்றைக் கவனமாக மதிப்பிடுகிறது. இனி ஆற்றவேண்டிய பணிகளையும், ஆற்றுப்படுத்த வேண்டிய நெறிமுறைகளையும், மேடைப்பேச்சு அரசியல்வாதிகள் போல ‘மீண்டும் தொடங்கும் போரின் மிடுக்கு’ எனக் கூச்சலிடாது, மிகக் கவனமாகப் பேசுகிறது. இன்னமும், போரின் தோல்வியைச் சர்வதேசச் சமூகத்தின் முதுகிலும் அண்டை நாடுகளின் தலையிலும் ஏற்றி, மிக எளிமையான காரணங்களை இப்போதும் அரசியல் வெளியில் வீசுவோருக்கு மாறாக, அவர் கூறும் கருத்துகள், விடுதலை அமைப்பை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்வோருக்குக் கசப்பாக இருக்கலாம்.
ஆனால், அவர் கூறுவதுதான் யதார்த்தமானது. ‘அரசியல் முழுமையடையாத ஆயுதப் போராட்டம் வெற்றியடையாது என்ற சாதாரண உண்மையை, ஈழம் நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. விடுதலைப் புலிகள் ஆயுத வளங்களைச் சேர்ப்பதற்குக் காட்டிய அக்கறையை, அறிவாளிகளைச் சேர்ப்பதில் காட்டவில்லை. அது மட்டுமன்றி, அவர்கள் உருவாக்கிய போர்ச் சூழல் எல்லோரையும்
சந்தேகிக்கின்ற நிலைக்குக் கொண்டுபோனது. சிந்திப்பது என்பதே அங்கே துரோகத்தின் ஒரு வடிவமாகக் கருதப்பட்டது. சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது மௌனமாக்கப்பட்டனர்’ என்று அவர் கூறுவதில் ஒரு அரசியல் அறம் இருக்கிறது.
அவர் கூறும் புலிகளின் இத்தகைய நிலைப்பாடு தமிழ்த் தேசியவாதத்தை மிகவும் பலவீனமானதாகவும் முரண் நிறைந்ததாகவும் ஆக்கியது. சிங்களத் தேசியவாதத்தை எதிர்த்த, வலிமை மிக்க தமிழ்த் தேசியப் போராட்டமானது, சிங்களத் தேசியவாதத்தைத் தனக்கு நிகராக வளர்த்துச் சென்று, தான் தோற்றுப் போனபோது, சிங்களத் தேசியவாதத்தை, மீபலமுடைய ஏக தேசியவாதமாக்கி இலங்கைத் தீவில் நிறுவியது. இந்த உண்மையைச் சமகாலம் காட்டிநிற்கிறது.
( தொடரும் )