“உரி பொருளும் அதன் உரை பொருளும்” … பகுதி.4….. சங்கர சுப்பிரமணியன்.
வரலாற்று உண்மை தெரியாமல் தமிழர் வெறுக்கப் படுகின்றனர் இழிவாகப் பார்க்கப் படுகின்றனர் என்று கற்றறிந்தோரே சொல்லும்போது பாமரத்தமிழன் எதை உண்மை என்று ஏற்பான். உரிமை கேட்டு போராடுபவர்களை இழிவாக யார் பார்ப்பார்கள்? போராடுபவர்களே பார்ப்பார்களா அல்லது போராட வைத்தவர்கள் பார்பார்களா?
எனக்குத் தெரிந்தவரை உரிமைதர மறுப்பவர்கள்தான் இழிவாகப் பார்பர்கள். அப்படி பார்த்ததால் செக்கிழுக்க வைக்கப்பட்டார். அவரை தமிழர் எவரும் இழிவாக்பார்க்கவில்லை.
எந்த இலக்கியம் அறிவியலோடு இணைந்து செயல்படுகிறது. குந்திதேவி கர்ணனைப் பெற்றதையும் அநுமன் சஞ்சீவி மலையைத் கையில் ஏந்தியபடி வானில் பறந்ததையும் அறிவியலோடு ஒப்பிட முடியுமா? அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து குதித்ததும் முருக கடவுள் கையில் ஏந்தி காப்பாற்றியதை அறிவியலோடு ஒப்பிட முடியுமா?
பாமரனுக்கு ஒரு நியாயம் பகவானுக்கு ஒரு நியாயமா? அதாவது புறப்பா வெண்பாமாலையில் சொல்லப்பட்ட செய்யுளை எடுத்துக் கொண்டு பொருள் கூறி அதற்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது எப்படியுள்ளது தெரியுமா?
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே மணியே என்று சிவபெருமானை பாடுவதை விட்டு வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன என்றுபாடி மளிகைக் கடைவைத்திருக்கும் செட்டியாராக சிவபெருமானை மாற்றுகிறார்களே என்று
கூறுவதுபோல் உள்ளது.
இதற்கு பொருளை எப்படிப் பார்க்க வேண்டும் தெரியுமா? நான் சொல்லவில்லை. தமிழாய்ந்த சான்றோர் பலர் சொல்லியிருக்கின்றனர். இனி அவர்கள் அப்பாடலுக்கு சொன்ன பொருளைப் பார்ப்போம்.
தோல்வி என்னும் பொய் நீங்கும்படியாக
நாள்தோறும் புகழைத் தரக்கூடிய வீரத்தை பற்றி சொல்வதில் வியப்பு என்ன இருக்கிறது. நீர் சூழ்ந்த உலகில் நீர் வடிந்து கல் தோன்றியது. அதாவது மலைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றியது. மலைவாழ் மக்கள் தோன்றினர். மண் தோன்றாக் காலத்தே என்றால் வயல்வெளியான மருதம் தோன்றிய காலத்தில் என்று பொருளாகும்.
மருத நிலத்தில் உழவுத்தொழிலுக்கு நிலத்தை உழ கலப்பை தேவை. இக்கலப்பையை மரத்தால் செய்யவேண்டும். அவ்வாறு கலப்பைகள் செய்ய மரத்தை வெட்ட கோடரியும் வெட்டிய மரத்தில் கலப்பைகள் செய்ய உளிகள் வேண்டும். அதுமட்டுமின்றி கலப்பை செய்தபின் அது மண்ணை உழும் பாகத்தில் பொருத்தக்கூடிய இரும்பினால் செய்யப்பட்ட கொழு என்ற பட்டை வேண்டும்.
இப்பட்டை பொருத்தப்படாத கலப்பையால் நிலத்தை உழுதால் மண்ணைத் தோண்டி உழமுடியாமல் உழ ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கலப்பையின் நுனி மழுங்கிவிடும் அல்லது கலப்பை பழுதாகிவிடும. இது தவிர உழவுத்தொழிலோடு சம்பந்தப்பட்ட மண்வெட்டி, களைக்கொத்தி மற்றும் அறுவடை செய்ய அறுவாள் வேண்டும்.
எனவே மருதநிலத்தில் பயிர் செய்யும் முன்னரே மக்கள் இரும்பைப் பயன்படுத்தயிருக்க வேண்டும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்றால் குறிஞ்சி வாழ்வு தோன்றி மருத வாழ்வு தோன்றுவதற்கு இடைப்பட்ட காலம் என்பதாகும். அதாவது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்தில் வாழ்ந்த
தொல்குடிகளை இது குறிக்கிறது.
இந்த மலை மற்றும் காடுகளில் வாழ்ந்தவர்களையே வாளொடு முன் தோன்றி மூத்த குடி என்கிறார் இந்த பாடலைப் பாடிய புலவர். இனி இந்த வாள் என்ற சொல் பற்றி சிறிது பார்ப்போம். வள் என்பதே வாள் என்ற சொல்லின் வேர்ச்சொல் ஆகும். வள் என்றால் கூர்மை என்று பொருள். வள் என்ற சொல்லின் நீட்சியே வாள் என்பதாகும்.
வாள் என்றால் மன்னர்கள் பயன்படுத்திய வாள் என்றோ அதை வைத்து மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போராடினர் என்று
பொருள் கொள்ளத் தேவையில்லை.
மலைகளிலும் காடுகளுலும் வாழ்ந்த காலத்தில் தங்களை விலங்குகள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க கூரான ஆயதங்களைத் தாங்கி வீரத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்.
மருதம் அரும்பிய காலத்தில் உழவுத்தொழிலில் இரும்பு பயன் பாட்டுக்கு வந்துவிட்டதால் அதற்கும் முந்தைய காலமான முல்லை நிலமான காடுகளில் வாழ்ந்தபோது இரும்பு கூரான ஆயுதம் தயாரிக்க உதவியிருக்கலாம். அல்லது குறிஞ்சி நிலமான மலையில் வாழும்போது கல்லினால் கூரான ஆயதங்களை அம்மக்கள் தங்களை பாதுகாக்க தயாரித்திருக்கலாம் அல்லவா?
இலக்கியத்தில் பிழை இருந்தால் பிழையை சுட்டிக்காட்டலாம். ஆனால் அறிவியலோடு சம்பந்தப் படுத்தக் கூடாது. இலக்கண உதவிகொண்டு கற்பனை கலந்து படைக்கப்படுவதே இலக்கியங்கள். அவற்றுள் ஓரளவே உண்மைத் தன்மையை எதிர்பார்க்கலாம். முழுக்க முழுக்க உண்மையிருந்தால் அது இலக்கியமல்ல, வரலாறு.
கம்பன் தன் எண்ண ஓட்டத்தை இராமனின் மூலம் அநுமனிடம் சீதையின் அடையாளமாகச் சொல்கிறான். கட்டை பிரம்மச்சாரியான அநுமனிடம் ஒரு பெண்ணைப் பற்றிய அங்க அடையாளங்களை எப்படி வர்ணிக்க வேண்டும் என்ற வரைமுறைகளைப் பின்பற்றவில்லை. கம்பன் எழுதியதை சமூக அறிவியலோடு சம்பந்தப் படுத்தமுடியாது.
அடுத்ததாக,
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள் என்ற பாரதிதாசனின் பாடலை பகடையாக உருட்டாமல் பாங்குடன் அணுக வேண்டும்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் முன் புலவர்கள் பற்றியும் அவர்களுக்குண்டான சில உரிமைகளை பார்ப்பதோடு தமிழின் இலக்கணத்தையும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும். புலவர்களுக்கு இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போன்றும் காட்டும் வழக்குண்டு.
பாமர மக்களுக்கு புரியும்படியாக,
“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”
என்று புலவர்களைப் பற்றிய நிலையை கவிஞர் கண்ணதாசன்
கூறியிருப்பதிலிருந்து இதை அறியலாம். கவிஞர்கள் பெண்ணை வர்ணிக்கும்போது மான் போலத் துள்ளி ஓடினாள் என்பார்கள். அதற்கு நேரடியாக பொருள்கொண்டு உயர்திணையை அஃறினையாக காட்டுவது சரியா என கேட்கமுடியுமா?
கயல்விழி என்பார்கள் கொடியிடையாள் என்பார்கள் சங்கு கழுத்தென்பார்கள். கவிஞர் வாலி போன்றவர்கள் நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ, நீரோடை இடம்மாறி நீந்துகின்ற குழலோ என்பார்கள்.
கம்பனையும் மிஞ்சி மடல்வாழைத் துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க என்பார்கள்.
கவிஞர் கண்ணதாசன் போன்றோர் தேக்கு மரம் உடலைத் தந்தது சின்னயானை நடையைத் தந்தது என்றும் எழுதுவார்கள். ஆக இதுவெல்லாம் புலவர்கள் மற்றும் கவிஞர்களின் கற்பனையாகும்.
-சங்கர சுப்பிரமணியன்.