“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் 28 ….. செங்கதிரோன்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப் புறப்பட்ட இரவுப் புகையிரதம் ஏறாவூர் – வாழைச்சேனை – புனானை – வெலிக்கந்த – மன்னம்பிட்டியைக் கடந்து பொலனறுவையால் போய்க்கொண்டிருந்தது.
புகையிரதத்துள் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றுவிட்டுத் தனது உறங்கலிருக்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் டாக்டர் உதுமாலெவ்வை.
டாக்டர் உதுமாலெவ்வை 1970 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதியிலே தமிழரசுக்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டவர். அவரும் அவருடைய மனைவியும் ஹோமியோபதி வைத்தியர்கள். கல்முனைக்குடியைச் சேர்ந்தவர்கள். முஸ்லீம் ஐக்கிய முன்னணியின் முக்கியஸ்தராக, தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக்குழுவில் அவரும் ஒர் உறுப்பினர்.
அவரை எதிர்பாராதவிதமாகக் கண்டதும் ஆசனத்திலிருந்து எழுந்து “வணக்கம் டொக்டர்! எங்க போறீங்க?” என்றான் கோகுலன். குரல் கேட்டுத்திரும்பிய அவர் “ஆ! கோகுலனா. எப்படிச்சுகம்?” என்று கோகுலனின் கைகளைப் பற்றியபடி,
“நாளை தமிழர்விடுதலைக்கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக் குழுக்கூட்டம் கொழும்பில் இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காகப் போய்க்கொண்டிருக்கிறன்” என்றார்.
கோகுலன் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஏனைய நான்கு இளைஞர்களையும் காட்டி “நாங்களும் அதுக்குத்தான் போறம்” என்றான்.
கோகுலனுடன் கூடவந்திருந்த நான்கு இளைஞர்களும் இருக்கையிலிருந்து எழுந்து மரியாதையாக ஏககாலத்தில் ‘வணக்கம்!’ சொன்னார்கள்.
டாக்டர் உதுமாலெவ்வை பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு “இருங்க தம்பிமாரே!” என்று அவர்களிடம் கூறியபடி கோகுலனின் பக்கம் திரும்பி,
“பொத்துவில் தொகுதிக்கு ஆரயாவது சிபார்சு பண்ணும் நோக்கமா?” என்றார்.
“ஓம்! டொக்டர்” என்றான் கோகுலன்.
டாக்டர் உதுமாலெவ்வை தனது வழமையான சிரிப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் “ஆரடப்பா அந்த வேட்பாளர்?” என்று கேட்டார்.
வெள்ளரிப்பழத்தை வெட்டிப்பிளந்தது போல இருக்கும் அவரது ‘பளிச்’ சென்ற கள்ளமிலாச் சிரிப்பு. நெஞ்சில் வஞ்சகமில்லாத சிரிப்பு அது.
“கனகரட்ணம்” – கோகுலன் ‘பளிச்’ சென்று பதில் சொன்னான்.
கோகுலனின் பதிலைக்கேட்டதும் சற்று அமைதிகாத்த டாக்டர் உதுமாலெவ்வை,
“தாடிக்குருக்கள் ஐயாவும் இந்த றெயினிலதான் வாறார். எனது பெட்டியில்தான் இரிக்கிறார். இந்தப்பெட்டிக்கு அடுத்ததுக்கு அடுத்த பெட்டி. தருமலிங்கத்தின் பெயரைச் சிபார்சு பண்ணத்தான் தான் கூட்டத்துக்குப் போறதாக என்னிடம் சொன்னார்” என்றார்.
கோகுலன் அன்று காலை தம்பிலுவிலில் அமரர். அரியநாயகம் வீட்டில் நடந்த கூட்டத்தின் விபரங்களை டாக்டர் உதுமாலெவ்வையிடம் ஒன்றும்விடாமல் எடுத்துக் கூறினான்.
அமைதியாகக் கேட்ட டாக்டர் உதுமாலெவ்வை “வாருங்க! நாளைக்கு எல்லோரும் கூட்டத்தில் சந்திப்பம்” என்று மட்டும் கூறிக்கோகுலனின் தோளில் தட்டிவிட்டு அவனிடமிருந்து விடை பெற்றார்.
கோகுலன் சிந்தித்தான். குருக்கள் ஐயா இரண்டு பக்கமும் விளையாடுகிறார் போல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொத்துவில் தொகுதிக்கிளையின் செயலாளர் சிவஞானத்தைக் கொண்டு எழுதுவித்துச் செயலாளரிடமும் தலைவர் சிவஞானச் செல்வக்குருக்களிடமும் கையொப்பங்களைப் பெற்றுத் தான் கொணர்ந்த கூட்டத்தீர்மானப்பிரதி தன் ‘சேர்ட் பொக்கற்’ றுக்குள் இருக்கிறதா என ஒரு தரம் தட்டிப் பார்த்துக் கொண்டான். தைரியமாக இருந்தது.
அதிகாலை கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்தை அடைந்ததும் கோகுலனும் கூடவந்த இளைஞர்களும் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ‘சிற்றிமிசன்’ கட்டிடத்திற்குச் சென்று காலைக்கடன்களை முடித்துக் குளித்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்து கடையொன்றில் காலை உணவு அருந்திவிட்டு நேரே மருதானைக்குப் புறப்பட்டனர்.
கோகுலனுடன் கூடவந்த இளைஞர்களிலொருவரான கோமாரியைச் சேர்ந்த யேசுரட்ணத்திற்குச் ‘சிற்றிமிசன்’ கட்டிடத்தின் விடுதியின் நிர்வாகிகளை ஏற்கெனவே தெரிந்திருந்தது. அந்த அறிமுகம் காரணமாகச் ‘சிற்றிமிசனில்’ தமது அலுவல்களை முடித்துக் கொள்வது எளிதாயிற்று.
காலை 9.00 மணிபோல் கோகுலனும் அவனுடன் வந்த நான்கு இளைஞர்களும் கூட்டம் நடைபெறும் மருதானை, நொறிஸ்சனல் வீதியில் அமைந்த தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் வீட்டை அடைந்து உள்ளே வாசலில் காத்திருந்தனர்.
10.00 மணிபோல் அமிர்தலிங்கம் ‘பைல்’ கட்டுகளோடு காரில் வந்திறங்கினார்.
கோகுலனைக்கண்டதும் “காத்திருங்கள். சற்றுநேரத்தில் கூப்பிடுகிறேன்” என்று கூறிவிட்டு அவசரமாக அறையினுள்ளே நுழைந்தார். அறைக்கதவு உள்பக்கம் சாத்தப்பட்டது.
கோகுலனும் ஏனைய நான்கு இளைஞர்களும் கண்ணபிரானின் குரலுக்குக் காத்திருக்கும் பஞ்சபாண்டவர்களாக அறைக்கு வெளியே ‘விறாந்தை’யில் ஓரமாக நின்றிருந்தனர். அறைக்குள்ளே கூட்டம் நடைபெறும் உரையாடல் சத்தம் காதில் விழுந்து கொண்டிருந்தது.
அரைமணி நேரம் கடந்திருக்கும். அறைக்கதவை அமிர்தலிங்கமே திறந்து தலையை நீட்டி கோகுலனை மட்டுமே உள்ளே வரும்படி சைகை காட்டினார்.
கோகுலன் அறையினுள் நுழைந்தான். அங்கே அமிர்தலிங்கத்துடன் மு.சிவசிதம்பரம் – கதிரவேற்பிள்ளை – மூதூர் றோச்.டி.வாஸ் – டாக்டர் உதுமாலெவ்வை ஆகியோரும் இருந்தனர். அவர்களிடையே சிவஞான செல்வக்குருக்களும் இருந்தார். கோகுலனைக் கண்டதும் அவரது வழமையான நமட்டுச் சிரிப்புடன் தாடியை நீவிவிட்டு வெற்றிப் புன்னகையொன்றை உதிர்த்தார். கோகுலன் அவரை அலட்சியம் செய்துவிட்டு அமிர்தலிங்கத்தின் பக்கம் திரும்பியபோது அவருக்கு முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னார் அமிர்தலிங்கம்.
கோகுலன் நாற்காலியில் அமர்ந்ததும் “தம்பி கோகுலன் சொல்லுங்கள்” என்றார்.
அவரைக் கல்முனையில் சந்தித்த பின்னர் நடந்தவற்றில் முக்கியமான தேவையான விடயங்களை மட்டும் சுருக்கமாக விபரித்துவிட்டு தமிழர்விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதிக்கிளை எடுத்த தீர்மானத்தைச் சொன்னான். “ஆம் கதிரவேற்பிள்ளை அவர்கள் எனக்கு எல்லாம் சொன்னவர்” என்றார் அமிர்தலிங்கம்.
தனது ‘சேர்ட் பொக்கற்’ றுக்குள் மடித்து வைத்திருந்த தம்பிலுவில் கூட்டத் தீர்மானப் பிரதியை வெளியே எடுத்துப் பிரித்து அமிர்தலிங்கத்திடம் நீட்டினான் கோகுலன்.
தீர்மானத்தைப் படித்த அமிர்தலிங்கம் சிவஞானச்செல்வக்குருக்களின் பக்கம் திரும்பி “என்ன குருக்கள் ஐயா! கனகரட்ணத்தைப் பொத்துவில் தொகுதி வேட்பாளராக நியமிக்கும் தீர்மானத்தில் நீங்களும்தானே கையொப்பமிட்டுள்ளீர்கள்” என்றார். இலேசாகச் சிரித்துக் கொண்டே.
சிவஞானச்செல்வக்குருக்கள் அமிர்தலிங்கத்திற்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து கோகுலனைப் பார்த்துத் தனது முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு உரத்தகுரலில் “தம்பி! நீங்கள்….” என்று ஏதோ பேச முற்பட்டார்.
அந்த இடத்தில் அவர் சற்றும் எதிர்பாராத கோகுலனின் வரவு அவருக்கு ஆத்திரத்தை மூட்டியிருந்தது என்பதைக் கோகுலன் புரிந்து கொண்டான். டாக்டர் உதுமாலெவ்வை புகையிரதத்துக்குள் வைத்துக்கூறியபடி பொத்துவில் தொகுதியின் தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளராகத் தருமலிங்கத்தின் பெயரைச் சிபார்சு பண்ணிவிட்டுத்தான் அங்கு அமர்ந்திருந்தார் என்பது சட்டென்று கோகுலனுக்குப் புரிந்தது.
கோகுலன் உடனே அவரை இடைமறித்துக் “குருக்கள் ஐயா! நீங்க ஏதாவது கூற விரும்பினா தேர்தல் நடவடிக்கைக்குழுவிடம் கூறுங்க. நாங்க இவ்வளவு தூரத்திலிருந்து இங்கு வந்தது உங்களோட கதவழிப் படுறதுக்கு இல்ல.” என்று முகத்தில் அறைந்தாற்போலக் கூறிவிட்டு அமிர்தலிங்கத்தின் பக்கம் திரும்பி “பொத்துவில் தொகுதிக் கிளையின் தீர்மானம் இது. இனி நீங்க முடிவெடுங்க உங்கட தீர்மானம் எதுவெண்டாலும் அதுக்கு நாங்க கட்டுப்படுவம். உங்கட காருக்குக் குறுக்காகப் படுத்துச் சத்தியாக்கிரகம் பண்ணமாட்டம்” என்றான்.
அமிர்தலிங்கம் வாய்விட்டுச் சிரித்தார்.
“உங்கட பெறுமதியான நேரத்த எடுக்க விரும்பல்ல” என்ற கோகுலன், “நன்றி! வருகிறோம்” என்ற வார்த்தையுடன் குருக்கள் ஐயாவையும் ஒரு ‘பார்வை’ பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
கோகுலன் அறையைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும்போது, அமிர்தலிங்கம் “குருக்கள் ஐயா! நீங்கள் சொல்லுகிறபடி தருமலிங்கத்துக்கு வேட்பாளர் நியமனம் வழங்கினால் அமரர். அரியநாயகத்தின் ஆத்மா சாந்தியடைய மாட்டாது” என்று சொன்னது அவனது காதில் தெளிவாக விழுந்தது.
“காருக்குக் குறுக்காகப் படுத்துச் சத்தியாக்கிரகம் பண்ணமாட்டம்” என்று அமிர்தலிங்கத்திடம் கோகுலன் கூறியதற்குப் பின்னணிக் காரணமொன்றிருந்தது.
அது இதுதான்,
இலங்கையில் 1959 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் அப்போது உருவாக்கப்பட்ட மூதூர் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அன்றிலிருந்து திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைத் தொகுதியிலிருந்து தமிழர் ஒருவரும் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவருமாக மொத்தம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி வந்தார்கள்.
அதற்கமைய 1960 மார்ச் தேர்தலில் முறையே ரி.ஏகாம்பரம் (தமிழரசுக்கட்சி), எம்.இ.எச்.முகமட்அலி (சுயேச்சை) ஆகியோரும் 1960 யூலை தேர்தலில் ரி.ஏகாம்பரம் (தமிழரசுக்கட்சி), ஏ.எல்.அப்துல்மஜீத் (ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி) ஆகியோரும் தெரிவாகியிருந்தனர். ஏகாம்பரம் 23.03.1961 இல் மரணமடைந்தார். அதன்காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு 28.06.1962 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றபோது தமிழர்களுக்கு உரித்தான அந்த ஆசனத்தைத் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெல்ல வைப்பதற்குப் பதிலாகத் தமிழரசுக்கட்சி அதற்குமுந்திய 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராக நின்று தோல்வியுற்ற எம்.இ.எச்.முகமட்அலியைத் தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்தி வெல்லவைத்து மூதூர்த் தொகுதியின் இரு பாராளுமன்ற உறுப்பனர்களுமே முஸ்லீம்களாக இருக்க வழிவகுத்தனர். அடுத்துவந்த 1965 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் முகம்மட்அலியையே தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தியதால் அத்தேர்தலில் முகம்மட்அலியும் (தமிழரசுக்கட்சி) அப்துல்மஜீத்தும் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) என இருவருமே முஸ்லீம்களாகத் தெரிவாகினர். இந்த நிலைமை மூதூர் தொகுதித் தமிழர்களுக்குத் தமிழரசுக் கட்சியினர் மீது அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது. எனினும் அன்றிருந்த சூழ்நிலையில் அது பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் இதனைச் சமன்செய்யும் வகையில் 1970 பாராளுமன்றத் தேர்தலில் அப்துல்மஜீத்தும் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) அ. தங்கத்துரையும் (தமிழரசுக்கட்சி) தெரிவாகியிருந்தனர். தங்கத்துரை மூதூர்தொகுதியில் கிளிவெட்டி ஊரைச் சேர்ந்தவர்.
இப்படியிருக்கும்போதே 1976 இல் மீண்டும் தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் செயன்முறை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
1970 இல் பதவிக்கு வந்த திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தினால் இலங்கைத் தமிழரர்களின் ‘மரணசாசனம்’ என வர்ணிக்கப்பட்ட புதிய குடியரசு அரசியலமைப்பு 1972 இல் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் அரசியலில் அதுவரை கீரியும் பாம்புமாகவிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸும் பிரதானமாக இணைந்து ‘தமிழர்கூட்டணி’யாகிப் பின் 1976 இல் ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ ஆகியது.
அடுத்துவந்த 1977 ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னமே எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும் காலமாகி விட்டிருந்தனர்.
1970 ஆம் ஆண்டுத் தேர்தலிலே வவுனியாத் தொகுதியில் முல்லைத்தீவைச் சேர்ந்த எக்ஸ்.எம்.செல்லத்தம்புவும் (தமிழரசுக்கட்சி), முள்ளியவளையைச் சேர்ந்த ரி.சிவசிதம்பரமும் (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்) போட்டியிட்டுச் செல்லத்தம்புவே வெற்றியீட்டியிருந்தார்.
தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரஸும் இணைந்து ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’யாகி இருந்ததால் எதிர்வரப்போகின்ற 1977 தேர்தலில் வவுனியாத் தொகுதியைச் செல்லத்தம்புவுக்கு வழங்குவதா அல்லது சிவசிதம்பரத்துக்கு வழங்குவதா எனக் கட்சிக்குள் எழக்கூடிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வன்னிப்பிரதேசத்தில் புதிதாக ‘முல்லைத்தீவு’ தேர்தல் தொகுதியை உருவாக்கி (அப்போது வன்னிப்பிரதேசத்தில் வவுனியா, மன்னார் ஆகிய இரு தேர்தல் தொகுதிகளே நடைமுறையிலிருந்தன).
அதனைச் செல்லத்தம்புவுக்கு வழங்கியும் வவுனியாத் தொகுதியைச் சிவசிதம்பரத்துக்கு வழங்கியும் வைப்பதற்காகத் தமிழரசுக்கட்சியானது தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயக் குழுவில் புதிய முல்லைத்தீவுத் தொகுதியை வடமாகாணத்தில் பெற்றுக்கொள்வதற்காகக் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவிருந்த மூதூர்த்தொகுதியை ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக்கி அது முஸ்லீம் பெரும்பான்மையாக வருவதற்கும் புதிய தொகுதியான ‘சேருவில’ சிங்களப் பெரும்பான்மையாக வருவதற்கும் தமிழரசுக்கட்சி சம்மதம் தெரிவித்தது. இதனால் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை (தமிழ்ப் பெரும்பான்மை), மூதூர் (முஸ்லீம் பெரும்பான்மை), ‘சேருவில’ (சிங்களப் பெரும்பான்மை) ஆகிய தொகுதிகள் ஏற்படுத்தப்பெற்றன. இரண்டு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த திருகோணமலை மாவட்டத்தில் அது ஒற்றையாகக் குறைக்கப்பட்டது. மூதூர்ப் பிரதேசத் தமிழர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அற்றுப்போனது. இதனால் மூதூர்த்தொகுதித் தமிழர்கள் தமிழரசுக்கட்சியின் மீது ஆத்திரமுற்றிருந்தனர்.
இந்தக் கட்டத்தில்தான் 1977 தேர்தல் எதிர்கொள்ளப்பட்டது. இப்போது பிரச்சினை வேறு வடிவெடுத்தது. திருகோணமலைத் தொகுதியின் தமிழரசுக்கட்சி – தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் நியமனத்தை ஏற்கெனவே மூதூர்த்தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் தெரிவாகிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தங்கத்துரைக்கு வழங்குவதா அல்லது தானும் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக நிற்கும் இரா.சம்பந்தனுக்கு வழங்குவதா என்ற பிரச்சினையே அது.
திருகோணமலைத் தேர்தல் தொகுதிக்கான தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் நியமனம் தங்கத்துரைக்கு வழங்கப்படுவதே சகலவழிகளிலும் சரியானதும் நியாயமானதும் என்பதே மூதூர்த்தொகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களின் நிலைப்பாடாக இருந்தது. அது எக்காரணம் கொண்டும் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படக்கூடாது என்பதற்கான காரணங்களையும் அவர்கள் தமிழர்விடுதலைக்கூட்டணிச் செயலாளர் நாயகத்தை நேரில் சந்தித்துக் கூறியுமிருந்தார்கள்.
தமிழரசுக்கட்சியின் திருகோணமலைத்தொகுதி வேட்பாளர் நியமனம் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படக்கூடாது என்பதற்குப் பின்வரும் காரணங்களை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
நீதிமன்றமொழி விவாகரத்தை முன்வைத்துத் தமிழரசுக்கட்சி 1961 இல் வடக்குகிழக்கு மாகாணங்களில் அரசநிர்வாகத்தைச் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் வடக்குகிழக்கிலுள்ள கச்சேரிவாயில்களை அடைத்துச் சத்தியாக்கிரகப் போராட்டம் – மறியல் போராட்டம் நடாத்தினர். தமிழரசுக்கட்சித் தலைவர்களையும் போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களையும் அரசு கைது செய்து ‘பனாகொட’ இராணுவமுகாமில் தடுப்புக்காவலில் வைத்தது. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களில் இருவரை அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் விடுதலை செய்தது. அதில் ஒருவர் 1960 யூலை தேர்தலில் கல்முனைத்தொகுதியில் தமிழரசுக்கட்சி வேட்பாளராக நின்று வெற்றியீட்டிய எம்.சி.அகமட் அவர் அரசாங்கக்கட்சிக்குத் தாவியதால் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர் இரா.சம்பந்தன் அப்போது இளம் சட்டத்தரணியாகவிருந்த அவர் தான் தமிழரசுக்கட்சி உறுப்பினரல்ல எனக் கூறி வெளியே வந்தவர்.
1960 யூலை பொதுத்தேர்தலில் திருகோணமலைத் தொகுதியிலிருந்து தெரிவான தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த என்.ஆர் இராஜவரோதயம் 27.08.1963 அன்று காலமானதால் திருகோணமலைத் தொகுதி இடைத்தேர்தலொன்றை எதிர்நோக்கிற்று. அப்போது இரா.சம்பந்தன் தந்தை செல்வாவோடு அவ்வளவு நெருக்கமாகவில்லை. தந்தை செல்வா திருகோணமலைப் பிரதேசத்திற்கு வருகை தரும்போதெல்லாம் மூதூரில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம்.
அந்த வைத்திய அதிகாரியை அணுகிய இரா.சம்பந்தன் தன்னைத் தந்தை செல்வாவுக்கு அறிமுகம் செய்துவைக்கும்படி வேண்டிக்கொண்டதின் பேரில், ஒரு தடவை தந்தை செல்வாவை அவ்வைத்தியரின் வீட்டுக்குச் சென்று இரா.சம்பந்தன் நேரில் சந்தித்தார். இடைத்தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் தான் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தையும் இரா.சம்பந்தன் முன்வைத்தார். இரா.சம்பந்தன் வந்து சென்றபின் தந்தை செல்வா அந்த வீட்டுக்கார வைத்தியரிடம் இரா.சம்பந்தனைப் பற்றி ஆங்கிலத்தில் கூறிய கூற்று ’He cannot be trusted’ (இவரை நம்ப முடியாது) என்பதாகும். அன்று தந்தை செல்வாவின் நம்பிக்கையைப் பெற்றிராத இரா.சம்பந்தனை இப்போது திருகோணமலைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நியமிக்கக்கூடாது.
இரா. சம்பந்தன் இறங்கிவந்து மக்களுடன் பழக விரும்பாதவர். செல்வச் செருக்கும் ஆணவமும் மிக்கவர். ஆனால் தங்கத்துரை மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் எளிமையோடும் பழகும் இயல்பினர். மட்டுமல்ல அவர் எம்.பி யாகப் பதவிவகித்த 1970-1977 காலத்தில் மூதூர்த்தொகுதிக்கு மட்டுமல்ல முழுத் திருகோணமலை மாவட்டத்திற்கும் சேவை புரிந்தவர். இரா. சம்பந்தனைவிடக் கட்சிக்கு விசுவாசமானவர்.
1972 குடியரசு அரசியலமைப்பை எதிர்த்துத் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இரா.சம்பந்தன் தன்னை வெளிப்படுத்தியவர் அல்ல. 1972 இல் வல்வெட்டித்துறையில் பெரியவர் ஞானமூர்த்தி அவர்களின் வீட்டில் ‘தமிழர் கூட்டணி’ கால்கோள் கொண்ட பின் தமிழர் கூட்டணியின் விசேட மாநாடொன்று திருகோணமலை முற்றவெளியில் நடைபெற்றது. அந்த மாநாட்டுச் செயற்பாடுகளில் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் நேமிநாதனுடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர் தங்கத்துரை. அந்த மாநாட்டு மேடையில் கூடக்காணப்படாதவர் இரா.சம்பந்தன். இப்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டுமே அதுவும் 1975 இல் கட்சியில் சேர்ந்துள்ள இரா.சம்பந்தனுக்குக் கட்சி தங்கதுரையைப் புறக்கணித்து வேட்பாளர் நியமனம் வழங்குவது முறையல்ல.
ஆனால், அமிர்தலிங்கமோ மூதூர்ப் பிரதேசத்தமிழ் இளைஞர்கள் முன்வைத்த மேற்கூறப்பெற்ற காரணங்களையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் 1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் திருகோணமலைத் தொகுதிக்கான தமிழர்விடுதலைக் கூட்டணி வேட்பாளர் நியமனத்தை இரா.சம்பந்தனுக்கு வழங்குவதிலேயே முனைப்புக்காட்டினார்.
இதனால் மூதூர்த்தொகுதித் தமிழ் இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்தனர்.
மட்டுமல்லாமல், அதற்கு அமிர்தலிங்கம், தந்தை செல்வா இறக்கு முன்னர் எதிர்வரும் 1977 பொதுத்தேர்தலில் திருகோணமலைத் தொகுதித் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் நியமனத்தை இரா.சம்பந்தனுக்கு வழங்கும்படியே தன்னிடம் கூறியிருந்ததாகக் கூறிய காரணம் அந்த இளைஞர்களால் நம்பமுடியாததாகவும் விசித்திரமாகவும் இருந்தது.
இதனால் அமிர்தலிங்கத்தின் மீதான ஆத்திரமும் அதிருப்தியும் இளைஞர்களிடையே மேலும் அதிகரித்திருந்தது. தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லி அமிர்தலிங்கம் தனது நியாயமற்ற செயற்பாட்டை நியாயப்படுத்தப் பார்க்கிறாரென்றே இளைஞர்கள் எண்ணினார்கள்.
இந்தக்கட்டத்தில்தான் சில நாட்களுக்கு முன்னர் இதே இடத்தில் நடைபெற்ற தமிழர் விடுதலைக்கூட்டணியின் இதுபோன்றதொரு தேர்தல் நடவடிக்கைக் குழுக்கூட்டத்தில் வைத்துத்தான் திருகோணமலைத் தொகுதி வேட்பாளர் நியமனம் இரா.சம்பந்தனுக்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. தங்கத்துரையும் மூதூர் இளைஞர்கள் சிலரும் அன்றைய தினம் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டம் முடிந்து அமிர்தலிங்கம் வெளியே செல்லுவதைத் தடுத்துத் தீர்மானத்தை மாற்றும் எண்ணத்துடனும் தீர்மானத்துக்கு எதிர்ப்புக்காட்டும் வகையிலும் அமிர்தலிங்கத்தின் காருக்குக் குறுக்கே படுத்து அவர் வெளியேறிச் செல்லாதவாறு இளைஞர்கள் மறியல் செய்தார்கள். இறுதியில் தங்கத்துரை தலையிட்டுத்தான் இளைஞர்களைச் சமாதானப்படுத்தி நிலைமையைச் சுமுகமாக்கினார். தங்கத்துரை அன்று மிகவும் பெருந்தன்மையுடன் செயற்பட்டார். இந்தச் சம்பவத்தை மனதில் வைத்துத்தான் அமிர்தலிங்கத்திடம் “உங்கட காருக்குக் குறுக்காகப் படுத்துச் சத்தியாக்கிரகம் பண்ண மாட்டம்” என்று கோகுலன் கூறியதும் அதற்கு அமிர்தலிங்கம் வாய்விட்டுச் சிரித்ததும்.
(தொடரும் …… அங்கம் – 29)