ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பயங்கரமான யுகம் உருவாகும்: அமைச்சர் பிரசன்ன எச்சரிக்கை
தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி கூறியுள்ளமை கிராமங்களில் மீண்டும் காட்டாறு சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
88/89 காலப்பகுதியில் ஜேவிபி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மக்களுக்கு இன்னமும் நன்றாக நினைவில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தீவிரவாத குழுக்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரமான யுகம் உருவாகும்
ஜனதா விமுக்தி பெரமுனவின்(Janata Vimukti Peramuna) இந்தக் கதையை எந்த வகையிலும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், தீவிரவாத குழுக்கள் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற பயங்கரமான யுகம் மீண்டும் உருவாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“நாம் மக்களைப் பற்றிச் சிந்தித்துச் செயற்பட்ட வேளையில் எதிரணியினர் அவர்களின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தினார்கள்.
வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் எனச் சொன்னார்கள். சுற்றுலாவை (tourism) அழிக்க வேலை செய்தனர். குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் போராட்டங்கள், கலவரங்கள். உள்ள நாடுகளுக்கு வர விரும்புவதில்லை.
மக்கள் அமைதியான போராட்டத்தை தொடங்கினர்
இந்த போராட்டத்தால், சுற்றுலாத் தொழில் முற்றிலும் சரிந்தது. மக்கள் அமைதியான போராட்டத்தை தொடங்கினர். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டன.
மக்கள் செய்த தியாகத்தினால் மிகக் குறுகிய காலத்தில் அபிவிருத்திச் சவாலை எங்களால் வெற்றிகொள்ள முடிந்தது.
அடுத்த இரண்டு வருடங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்னும் ஓரிரு வருடங்கள் தேர்தல் இல்லாமல் இப்படியே தொடர்வோம் என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.