“சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும்” …. சிறுகதை … சங்கர சுப்பிரமணியன்.
மனிதர்கள் சிலரைப் போன்று தன் பண்பை அக்கால சூழலுக்கு ஏற்றாற்போல காட்டுவது போல் வானமும் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. வானத்துக்கும் வாடிக்கையாக பேருந்தில் அந்நேரத்தில் பயணிப்பவர்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதைப்போல அவர்கள் சலசலவென்று பேசிக்கொண்டருந்தார்கள்.
மனிதர்கள்தான் எத்தனைவகை. தனக்கு ஒரு தீங்கும் செய்யாதவர்களைக் கூட எங்கோ சென்று கொண்டிருக்கும் மாரியாத்தா என் மேல் வந்து பாயாத்தா என்பதைபோன்று ஒரு மூதாட்டி,
“இந்தப் பாவிப்பய இன்னைக்கு பாத்து எருமை மாடுபோல் காரை ஓட்டுதான?” என்று எதற்காகவோ யார் பெற்ற பிள்ளயையோ பேருந்து ஓட்டுனரை கார் ஓட்டுவதாக சொல்லி திட்டிக் கொண்டிருந்தாள்.
பாவம் எந்த ஊர்க்காரரோ தெரியவில்லை சக பயணியன இளவயசு ஆம்பள ஒருத்தர்,
“பாட்டியம்மா அடுத்தவங்களுக்கு அர்ச்சணை செய்யனும்னா கொலம் கோத்துரம் பாக்கமாட்டியா? பஸ்ஸுல பயணம் பண்ணிகிட்டு கார ஓட்டுறவருன்னு சொன்னதோடு மட்டுமில்லாம டிரைவர பார்த்து எருமை மாடுபோல ஓட்டுறாருங்க?”
“ஏம்பா, நீ நாலு எழுத்து படிச்வந்தானா? படிச்சவனா இருந்தா கார காருன்னு சொல்லாமா வேற எப்பட சொல்லுவீங்க?”
ஏது இது ரொம்ப வெவரமான பாட்டி போல கெடக்கு. பஸ்ஸ காருங்குறதோடு மட்டுமில்லாமா நம்மளபாத்து படிச்சவனான்னு கேக்குதே. அது கூட பரவாயில்ல அந்த பாட்டி அப்படி சொன்னதுதான் தாமுசம் எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்களேன்னு பலவாறு எண்ணி பம்மிவிட்டார் ஆம்பள.
அவருக்கு என்ன தெரியும் பாட்டி சொன்னதும் சரிதான் பஸ்ஸுல சிரிச்சவங்களும் சரிதான்னு. இவனெல்லாம் என்ன கத எழுதி கிழிக்கிறானோ நம்ம செவ்வந்நி பாண்டியனெல்லாம் என்ன சோக்கா எழுதுறாருன்னு இருதயநாதன் ஏளனமா என்னைப்பத்தி நினக்கிறது எனக்கு புரியாமலில்லை.
அண்ணா இருதயநாத அண்ணா பாட்டி பஸ்ஸ காருன்னு சொல்றது சரிதாங்கன்னா. ஏன்னா பஸ்ஸ காருன்னுதான் சொல்லுவாங்கண்ணா நெல்லை மக்கள் என்று பதில விளக்கமா சொல்லிவைப்போம். தமிழ் இலக்கணத்தில் விதிவிலக்குன்னு ஒன்னு வருமில்லண்ணா அப்படி நெனச்சுக்குங்க. சும்மா முழிக்காதிங்க.
எங்க ஊருல கருணக்கிழங்க ஒங்க ஊருல சேனக்கிழங்குன்னு சொல்லலயா? ஒங்க ஊருல வெள்ளப் பூசணிக்காய் எங்க ஊருல தடியங்காய் ஆறதில்லயா? ஒங்க ஊருல திருமணப் பந்தலில் கட்டுற பச்சை தென்ன ஓலய எங்க ஊருல பாடையில கட்டுற மாதிரிதான். பாட்டி வட்டாரவழக்குல
பஸ்ஸ காருன்னு சொன்னத மன்னிச்சு விடுதல கொடுத்துடுங்க அண்ணான்னு சொல்லிட்டு நம்ம சோலிய நம்ம பாப்பம்.
ரெண்டு பஸ்ல போற ஆளுங்கள ஒரு பஸ்ல ஏத்துக்கிட்டு போனா பஸ் என்ன எருமை மாடு மாதிரி இல்லாம ஏரோபிளேன் மாதிரியா போவும்? பேருந்து ஒரு பக்கம் சாய்ந்தபடியே மெதுவாக நகர்ந்து சுத்தமல்லி விலக்கிலிருந்து நெல்லை சேரன்மாதேவி திரும்பி நெல்லை நோக்கி நகர்ந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது.
அதே பேருந்தில் பயணித்த மோகன் ஓட்டுனரின் பக்கவாட்டில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தான்.
பேருந்து நிறுத்தத்தில் நிற்கவும் சிலர் இறங்கினர். அப்போது கல்லாரி மாணவியைப் போன்று ஒரு இளம்பெண் முன்பக்கமாக ஏறினாள். ஓட்டுனரின் பின்புறம் கம்பியை பிடித்தபடி ஒரு கொடி ஒன்று கொம்பைச் சுற்றி படர்வது போல் கம்பியை வலது கரத்தால் சுற்றியபடி நின்றாள்.
பாரி முல்லைக்கு தேர் கொடுத்தான். இந்த பஸ் ஒரு கிள்ளைக்கு பற்ற கொம்பு கொடுக்கிறது. பெண்ணென்றால் பேயும் இரக்கம் காட்டும் என்பார்கள். இல்லாத ஒன்றே இரக்கம் காட்டும்போது அஃறினையாக இருந்தாலும் பஸ் இரக்கம் காட்டியது.
சட்டென சுகந்தமான மணம்வீசவே இதுவரை கையில் வைத்திருந்த தினசரியை விட்டு அங்கும் இங்கும் நகராதிருந்த மோகனின் தலை நிமிர்ந்தது. அவளின் தோற்றம் அவன் கண்களை அவள் மேல் நிலைக்க வைத்தது. அவளின் பேரழகு அவனை கண்களை அவளிடமிருந்து நகற்றாமல் தடுத்தது. பேருந்தின் பின்புற வழியில் நின்றிருந்த நடத்துனர் முன்புறம் வந்து,
“என்னம்மா மங்கை, உனக்கு பேட்டைக்க
செல்ல வேற வண்டியே இல்லயா? பின்னால கல்லூர் வண்டி காலியாத்தான் வரும்.” என்று சொல்லியபடியே அவளிடம் டிக்கெட்டை நீட்டினார்.
“சொல்ல முடியாதுண்ணா, சில சமயம் அதுலயும் இதே கதிதான்” என்று ஒரு சிரிப்பை உதிர்த்த படியே டிக்கட்டுக்கு பணத்தை கொடுத்தாள்.
அவள் அழகில் சொக்கியிருந்த அவன் அவளது சிரிப்பைப் பார்த்ததும் இன்னும் கிறங்கியே போயிட்டான். வெறுமனே அவள் பதிலை நடத்துனரிடம் சொல்லியிருக்கலாம். சிரிக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல் இவளிடம் பதிலுக்கு சிரிப்பு இலவசமோ என்று எண்ணியவன் தனது அப்பா சில சமயங்களில் வாய்க்குள்ளேயே முனகும் சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் என்ற பாடலைப் போன்று
இவளின் சிரிப்பு ஏன் என்னை சிறையெடுக்கிறது என்று பலவாறு எண்ணினான்.
நல்ல நேரமோ நல்ல பொருளோ நல்ல மனிதர்களோ நெடுங்காலம் நீடிப்பதில்லை. அதுபோலத்தான் மோகனுக்கு முன்
அந்தப் பெண் நின்ற நல்ல நேரமும் முடிந்தது. ம. தி. தா. இந்துக் கல்லாரி நிறுத்தம் வந்ததும் கொம்பைச் சுற்றி கொடிபோல நின்றிருந்தவள் கொம்பை விட்டு அகன்ற கொடியாக கீழிறங்கினாள்.
அவளைத் தொடர்ந்து கல்லாரி மாணவர்கள் போலிருந்த இரு இளைஞர்ககள் இறங்கினர். நல்ல நேரம் முடிந்தாலும் அது சோகமாக முடியும் என்று அவன் சற்றும் எதிர்பா்க்காத மாதிரி நொடிப்பொழுதில் எல்லாம் நடந்துவிட்டது.
பேரிந்துலிருந்து இறங்கிய அந்தக் கொடியின் அழகிய முகத்தில் இறங்கிய இளைஞரில் ஒருவன் எதையோ வீசி எறிந்தான். அடுத்த நொடி “ஆ” என்ற அலறலுடன் தரையில் சாய்ந்து துடித்துப் புரண்டாள் அந்த இளம் பெண். பின் அந்த இளைஞர் இருவரும் பேருந்தின் பின்புறமாக சென்று படுவேகமாக பின்னால் இருந்த தொடர்வண்டி பாதையைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தனர். ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் பேருந்திலிருந்து இறங்க பேருந்திலுருந்தவர்களும் இறங்கினர்.
அப்பெண்ணின் பூப்போன்ற முகம் சிவந்து சிதைந்து கொண்டிருக்க அங்கிருந்த சிலர
ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரித்தனர். அந்த பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசி விட்டுதான் அந்த இளைஞர்கள் ஓடியிருப்பதாக அங்குள்ள சிலர் பேசிக்கொண்டனர்.
“விருப்பமில்லாத பெண்ணிடம் காதலைச்
சொன்னவன் அவள் விரும்பவில்லை என்றால் விடவேண்டியதுதானே. இப்படி அப்பெண்ணின் முகத்தை சிதைத்து விட்டார்களே” என்ற ஒரு நடுத்தர வயதுக்காரர் அருகில் நின்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஆமா, அப்பெண்ணிடம் “முகத்தில் அறை வாங்குவான் என்று நினைத்தேன். ஆனால் அவளது முகத்தையே கோரமாக்கி விட்டானே, படுபாவி”
“கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு இருக்கன் அந்தப் பயலுவ இத்த பெண்ணுங்க கிட்ட பேச்சுக் கொடுப்பாங்க. இந்தப் பெண் சில சமயங்களி் ஏதோ ஒன்றுரண்டு வார்த்தைகள் பேசும். சிலசமயங்களில் முறைத்துப்
பார்ப்பதோடு சரி பதில் பேசாது”
என்று பேசிக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் வந்து தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தவளை
தூக்கிக்கொண்டு சென்றது.
பேருந்தில் எல்லோரும் ஏற பேருந்து நகர்ந்தது. மோகனின் மனதில் நொடிப் பொழுதில் கண்முன் நடந்த அந்நிகழ்ச்சி ரணமாக வலித்தது.
-சங்கர சுப்பிரமணியன்.