சீனாவின் ஆய்வு கப்பல்களுக்கு போட்டியாக இலங்கைக்கு சோனார் பொருத்தப்பட்ட கப்பல்
நாட்டின் கடல்சார் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏனைய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்கும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இதனை ஜப்பானிய அரசாங்க தரப்புக்களை கோடிட்டு தெ ஜப்பான் நியூஸ் இணையம்(The Japan News Web) தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்று(04.05.2024) நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா(Yōko Kamikawa) இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த இணையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் யென் பெறுமதியான கப்பல் மற்றும் சோனார் அமைப்பை வழங்கவுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அண்மைக் காலமாக சீன கடல்சார் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு அருகாமையில் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை சிக்கலாக இருப்பதாக கொழும்பு கருதுகிறது. இதனையடுத்தே சமுத்திரவியல் ஆய்வுகளை ஒரு எதிர் நடவடிக்கையாக மேற்கொள்வதில் ஜப்பான் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தெ ஜப்பான் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.