சட்டவிரோதமாக பசுக்களை கடத்தி இறைச்சிக்காக விற்பனை : சைவ மகா சபை கண்டனம்
பசுக்கள் கடத்தப்பட்டு கொடூரமாக அடைத்து வைக்கப்படடு மறைவிடங்களில் சட்டவிரோத இறைச்சி விற்பனைக் குழுக்களால் கொல்லப்படுவதை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் சைவ மகா சபை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பசுக்களை தெய்வமாக வணங்கும் யாழ்ப்பாணத்தில், மிக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு சட்டவிரோதமான இடங்களில் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும் அவலம் மனதை வருத்துகின்றது.
யாழ் நகரில் நேற்று(04) மாத்திரம் 20இற்கும் மேற்பட்ட பசுக்கள், காளைகள் குடாநாட்டின் பல பாகங்களிலிருந்து கடத்தி கொடூரமாக உரிய பராமரிப்புக்கள் இன்றி இரத்தம் தோய்ந்த சட்டவிரோத கொல்களப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அண்மைக்காலமாக ஏழை பண்ணையாளர்கள் உடைய பசுக்கள் களவாக கடத்தப்படுவது அதிகரித்து வந்த நிலையில், வாயில்லா ஜீவன்கள் இரத்த வாடை சூழ்ந்த இடத்தில் பட்டினியோடு தாகத்தோடு அடைத்து வைத்திருந்த நிலையிலும் அவற்றின் ஒரு தொகுதி வெட்டபபட்ட நிலையிலும் மீட்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகின்றது.
ஜீவகாருண்ய நடைமுறைகளினை கடைப்பிடிக்காமல் இந்த உயிர்களை தொடர்ச்சியாக துன்புறுத்தும் செயற்பாடு இம்மண்ணில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். ஏழைப் பண்ணையாளர்களினதும் பசுக்களினதும் கண்ணீர் கதைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் இதில் மிகுந்த கரிசனை எடுத்து இதற்கு காரணமான சட்டவிரோத வலைப்பின்னலை முழுமையாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் பசுக்கள் வெட்டப்படுவது முற்று முழுதாக தடுக்கவும் சட்டவிரோத கொள்கைகளை முழுமையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் சைவ மகா சபை ஆழமாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வலியுறுத்தி நிற்கின்றது.