தித்திக்கும் முத்தொள்ளாயிரம்!….. பாகம் 4 …. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
மன்னரின் முடியும், மாமன்னர் அடியும்
பேரரசர்களாக இருந்தவர்களுக்குச் சிற்றரசர்கள் திறை செலுத்துவது வழக்கம். திறை என்பது வரி. ஒவ்வொரு வருடமும் விதிக்கப்பட்ட திறையைக் குறிக்கப்பட்ட ஒரு காலக் கெடுவுக்குள் சிற்றரசர்கள் செலுத்தவேண்டும். அவ்வாறு தாம் செலுத்த வேண்டிய திறையைச் சிற்றரசர்கள் தமது அமைச்சர்கள், பிரதானிகள் போன்ற பிரதிநிதிகள் மூலமாகப் பேரரசர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதேவேளை சிற்றரசர்கள் தாமாகவே அமைச்சர் பிரதானிகள் சூழவந்து நேரடியாக வழங்குவதும் பண்டைக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சிற்றரசர்களே நேரில் வந்து கொடுக்கவேண்டும் என்பது சில பேரரசர்களின் கட்டளையாகவும் இருந்திருக்கலாம். பேரரசர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது குறித்த பேரரசருடன் மிகவும் நல்லுறவில் இருப்பதனாலோ சில சிற்றரசர்கள் நேரில் சமூகமளிப்பதாகவும் இருந்திருக்கலாம்.
கிள்ளிவளவன் என்ற சோழ மன்னனுக்குத் திறை செலுத்த வரும் சிற்றரசர்கள், அவனது கால்களில் விழுந்து வணங்குவார்கள். அப்போது சிற்றரசர்கள் தலைகளிலே சூடியிருக்கும் முடிகள் சோழ மன்னனின் கால்களில் குத்திக் காயப்படுத்திவிடும். சோழ மன்னனின் பெருமையையும், சிற்றரசர்கள் அவனது அடிபணிந்தே ஆட்சி செய்தார்கள் என்பதையும் மட்டுமன்றி அவ்வாறு ஏராளமான சிற்றரசர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நேரடியாகக் கூறாமல் புலவர் தனது கற்பனைத் திறத்தால் இவ்வாறு மறைமுகமாக உணர்த்துவது புலவரின் புலமைச் சிறப்பையும், தமிழ் மொழியின் அழகையும் எடுத்துக்காட்டுகின்றது.
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்தந்த மன்னர் முடிதாக்க இன்றும்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ (பாடல்இல: 26)
“திறை செலுத்த வந்திருக்கும் மன்னர்களே! கொஞ்சம் நில்லுங்கள். அவசரப்பட வேண்டாம். அமைதியாக ஒவ்வொருவராக வந்து செலுத்துங்கள். ஏனென்றால், உங்களுக்கு முன்னர் திறை செலுத்த வந்திருந்த மன்னர்கள் எங்களின் சோழமன்னனின் கால்களில் விழுந்து வணங்கியபோது அவர்களின் கிரீடங்கள் மன்னவனின் பாதங்களிலே குத்தியதால் அழகிய அந்தப் பாதங்கள் புண்பட்டுவிட்டன. இன்னும் அந்தப் புண்கள் ஆறவில்லை.” என்பதுதான் இந்தப் பாடலின் கருத்து. உண்மையில் இந்தப்பாடல், திறை செலுத்த வந்திருக்கும் மன்னர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்போலவே இருக்கிறது.
இந்த நேரத்தில், ஏன் அந்தச் சோழ மன்னன் காலில் சப்பாத்துப் போடாமல் இருந்தானா என்றோ, ஒரு தடவை சிற்றரசன் ஒருவனின் முடி குத்தியதும் பிறகு அவன் அவதானமாக இருந்திருக்கலாமே என்றோ அல்லது சிற்றரசர்களைத் தள்ளிநின்று வணங்க வைத்திருக்கலாமே அல்லது முடிகளைக் கழற்றிவிட்டு வணங்கச் சொல்லியிருக்கலாமே என்றோ நாம் இப்போது கேட்கக் கூடாது. இது
அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் விடயம் அல்ல. தமிழின் அழகையும், புலவர்களின் கற்பனை வளத்தையும் அனுபவித்துச் சுவைக்கும் விடயம்!
இதேபோல இன்னும் ஒரு பாடல் உள்ளது. இது பாண்டிய மன்னனைப் பற்றியது.
திறை செலுத்துவதற்கு வந்த சிற்றரசர்கள் பாண்டிய மன்னனுக்குத் தலைசாய்த்து வணங்கும்போது அவர்களின் தலைகளிலே சூடப்பட்டிருக்கும் மலர்கள் பாண்டியனின் பாதங்களில் வீழ்ந்து கிடக்கின்றன. இந்த நிகழ்ச்சி அருச்சுனன் திருமாலின் முடியில் தூவிய மலர்கள் சிவனின் திருவடிகளில் காணப்பட்டதைப்போல இருக்கிறது என்று கூறும் அந்தப்பாடல் வருமாறு:
செங்கண் நெடியான்மேல் தேர்விசயன் ஏற்றிய பூ
பைங்கண் வெள்ஏற்றான் தாள் கண்டற்றால் – எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசை காணப் படும். (பாடல்இல: 53)
அபிமன்யு போரில் இறந்ததால் அருச்சுனன் உண்ணாது. உறங்காது துடித்தான். அப்போது கண்ணன், அருச்சுனனிடம் கனிகளை உண்ணும்படி சொன்னான். அதற்கு அருச்சுனன், “சிவனைப் பூசைசெய்து வணங்காமல் நான் எப்படி உண்பது?” என்று கேட்டான். உடனே கண்ணன், “நீ எனது முடியில் மலர்களைத் தூவிப் பூசைசெய். அந்த மலர்கள் சிவபெருமானைச் சென்றடையும்” என்று சொன்னான். அருச்சுனனும் அவ்வாறே செய்தான்.
இது மகாபாரதத்திலே சொல்லப்படுகின்ற ஒரு கதை. அந்தக்கதையை இந்தப் பாடலில் நினைவுபடுத்தியிருக்கும் புலவர், அவ்வாறு கண்ணனின் முடியில் அருச்சுனன் தூவிய மலர்கள், சிவனின் காலடியில் காணப்பட்டதைப்போல, எங்கெங்கோ இருந்து வந்திருந்த சிற்றரசர்கள் தங்கள் முடிகளின் மீது சூடியிருந்த மலர்கள் பாண்டிய மன்னனின் பாதங்களில் காணப்படுகின்றன என்று வர்ணித்திருக்கின்றார்.
திறை செலுத்த வந்திருந்த சிற்றரசர்கள் பாண்டியனின் காலில் மலர்களைத் தூவவில்லை. அதற்கு அவர்கள் நினைக்கவும் இல்லை. அவர்கள் குனிந்தபோது அவர்கள் தம் தலைகளில் சூடியிருந்த மலர்கள் பாண்டியனின் காலடிகளில் தவறி வீழ்ந்துவிட்டன அவ்வளவுதான். ஆனால் அவர்கள் பல நாடுகளிலே இருந்து வந்தவர்கள். எங்கெங்கோ இருந்து வந்தவர்களின் தலைகளிலே அந்த மலர்கள் சூடப்பட்டிருந்தன. ஆனால் அவை இப்போது இங்கே பாண்டிய மன்னனின் காலடிகளில் வந்துகிடக்கின்றன. இந்தக் காட்சியைக் கண்ட புலவரின் கற்பனை சிறகடித்துப் பறந்து, திருமாலின் முடியில் தூவிய மலர்கள் சிவனின் காலடியில் சேர்ந்த கதையோடு ஒப்பிட்டுக் கவிபுனைந்திருக்கும் அழகு – மதங்களைக் கடந்து, தமிழை நினைந்து – இன்புறத்தக்கது.
வளம் மிக்க நாடும், திறம் மிக்க மன்னனும்!
பாண்டிய நாடு மிகவும் வளம் மிக்கது. பொன் விளையும் பூமி அது. இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழும் செழித்து வளரும் அந்த நாட்டிலே, கற்றறிந்த புலவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். ஒளிவீசும் முத்துக்களும், வெண்மையான சங்குகளும் விளைகின்ற கடலைக் கொண்ட நாடு. குளிர்மையான காற்று இதமாக வீசுகின்ற மலையடிவாரங்களிலே யானைகள் உலவும். அத்தகைய வளம் மிக்கது பாண்டிநாடு என்ற தகவலைத் தருகின்றது இந்தப் பாடல். மேலும், அந்தப் பாண்டிநாட்டை ஆள்கின்ற “வயமாறன்” என்ற சிறப்புப் பெயர்பெற்ற, பாண்டிய மன்னனின் கூரான வேலின் நுனிகள், ஏனைய நாடுகளின் மன்னர்களுடைய மார்புகளில் நுழைந்து, ஊடுருவிக் கிடக்கும் என்ற செய்தியின் மூலம் அவன் எப்படிப்பட்ட வீரன் என்பதையும், வேற்று நாட்டு மன்னர்களின்
ஆக்கிரமிப்புகளுக்கு அஞ்சாமல் அங்கே மக்கள் வாழ்கின்றார்கள் என்பதையும் இந்தப்பாடல் வெளிப்படுத்தி நிற்கும் அழகு வியக்கத்தக்கது.
பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு (பாடல்இல: 55)
இந்தப் பாடல் பாண்டிய மன்னனின் வீரத்தை இப்படி நேரடியாகக் கூறிநிற்க, இன்னுமொரு பாடல் பாண்டியனின் கட்டளைக்கு அடிபணியாத மற்றைய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எப்படியிருக்கின்றன என்பதன்மூலம், அவனின் இணையற்ற வீரத்தினை இன்னும் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. மற்றைய மன்னர்கள் அடிமைப் படுவதும், அவர்களது நாட்டு மக்கள் துன்பப்படுவதும் சரியா தவறா என்ற ஆய்வுக்கு அப்பால், குறிப்பிட்ட பாண்டிய மன்னன் ஒருவன் தனது நாட்டு மக்களை வேற்று நாட்டு மன்னர்களின் ஆக்கிரமிப்புகளில் இருந்து காப்பவனாகவும், தன்நிகரற்ற வீரனாகவும் திகழ்ந்தான் என்ற தகவலை இந்தப் பாடல்மூலம் அறிய முடிகிறது என்பதே இந்தப்பாடலின் சிறப்பாகும். மேலும், பக்கத்து நாடுகளுடன் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்த நிலையிலேயே அந்தக்காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலையும் இதைப்போன்ற பாடல்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
வாகை வனமாலை சூடி அரசுறையும்
ஓகை உயர்மாடத்து உள்ளிருந்து கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றம் கொள்ளாதார் நாடு (பாடல் இல்: 70)
வெற்றியின் அடையாளமான வாகை மலரைச் சூடிக்கொண்டு அரசர்கள் தங்கள் அரண்மனைகளில் இருந்த மேல்மாடிகளில் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். பின்னர் பாண்டிய மன்னன் விடுத்த கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாததால் தோற்கடிக்கப்பட்டு, அந்த அரசர்கள் ஆட்சிகளை இழந்தார்கள். அவர்களின் அரண்மனைகள் பாழடைந்து போயின. அங்கே கோட்டான்களும், பேய்களும் உறைந்து பாடிக் களித்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. என்பது இதன் நேரடிக் கருத்து.
(தொடரும்)